No results found

  குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்


  இன்றைய இளைய தலைமுறையினர் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களை அறிந்து கொள்ளலாம். பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! ‘பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். பிசிஓடி பிரச்சனை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.

  திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்! சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம். 30 பிளஸ்ஸில் திருமணம்... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.

  கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்! 7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்சனைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்சனைகளைத் தரலாம்.

  எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்! பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும். 14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

  Previous Next

  نموذج الاتصال