No results found

    மன மகிழ்ச்சி தரும் மணக்குள விநாயகர்


    புதுவையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் ஒன்று மணக்குள விநாயகர். அந்த கோவில் பழமையும் பெருமையும் கொண்டது.

    மணக்குள விநாயகர் கோவில் கி.பி 15-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்படிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    பிரெஞ்சுகாரர்கள் 1666-ம் ஆண்டில் புதுவைக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே இந்த கோவில் இருந்ததாக கூறுகின்றனர். கணக்கிட்டு பார்த்தால் இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேன்றியது என்று அறிய முடிகிறது.

    மணக்குள விநாயகர் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுகாரர்கள் ஆகியோர்களின் ஆட்சியை கண்ட பெருமான் என்றும் தம்மை கடலில் எறிந்தவர்களுக்கும் விழாக்கள் நடைபெறாமல் தடுத்து இன்னல் புரிந்தவர்களுக்கும் கருணை காட்டியவர் என்றும் போற்றப்படுகிறார். இந்த விநாயகரை வெள்ளைக்காரர்கள் வணங்கியதால் வெள்ளைக்காரப்பிள்ளையார் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விநாயகரை முதலில் தரிசித்த பெருமை மொரட்டாண்டி தொள்ளை காது சித்தருக்கே உரியதாகும். பின்னர் அக்கா சுவாமி, சித்தானந்தா சுவாமி, மகான் அரவிந்தர், அன்னை, தேசிய கவி பாரதியார், மற்றும் பல்வேறு பெரியோர்கள் மணக்குள விநாயகரை தரிசித்துள்ளனர்.

    தொள்ளை காது சித்தரே முதலில் சிறு குடில் அமைத்து விநாயக பெருமானை வழிபட்டு வந்துள்ளார். அந்த கோவிலே படிப்படியாக இன்று வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது என்பர். தொள்ளைக்காது சித்தரின் சமாதி இக்கோவிலின் உள் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சித்தர் வாழ்ந்த பழமை வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்குகிறது.

    திருபள்ளி எழுச்சி

    மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது. இது வேறு எந்த விநாயகர் கோவிலிலும் கிடையாது. இக்கோவிலில் தங்க கோபுரம் மற்றும் தங்க தேர் உள்ளது சிறப்பு அம்சம் ஆகும். இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் மற்றும் வெளி நாட்டினரும் வழிபடும் பெருமையை பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு லட்சுமி என்ற யானை உள்ளது.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கை இனிதாக நடைபெற விநாயகரை வணங்கி செல்கின்றனர். குழந்தை பிறப்பு, பிறந்த நாள் போன்றவற்றின் போதும் கோவிலுக்கு வந்து அருள் பெற்றுசெல்கின்றனர். புதிதாக வாகனம் வாங்கியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்து செல்கின்றனர்.

    வேலைவாய்ப்பு, திருமணம், உடல் நலம், பணம், செல்வாக்கு, குழந்தை வரம் ஆகியவைகள் கேட்டு பலர் வணங்கி செல்கின்றனர். புதுக்கணக்கு தொடங்குவோர், தொழில் செய்வோர் தங்கள் வாணிகம் சிறப்பாக நடக்க விநாயகரை வழிபடுகின்றனர். புதிய பணிகள் தொடங்குவோர் இக்கோவிலுக்கு வந்து வணங்கி பணிகளை தொடங்குகின்றார்கள். மொத்தத்தில் மன மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவராக மணக்குள விநாயகர் விளங்குகிறார்.

    Previous Next

    نموذج الاتصال