No results found

  சென்னை சித்தர்கள்: அருளானந்தர் சித்தர்-தேவதானம் (மீஞ்சூர்)


  சித்தர்களில் சிலர் கடவுள் உருவங்களை, ஆலய வழிபாடுகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை கண்டுகொண்டதே கிடையாது. அவற்றுக்கு சித்தர்கள் முக்கியத்துவம் கொடுத்ததும் இல்லை. உன் மனதுக்குள்தான் கடவுள் இருக்கிறார். அவரை முதலில் பார் என்றுதான் வழிகாட்டி இருக்கிறார்கள்.

  அந்த வகையில் ஒவ்வொரு சித்தரும், ஒவ்வொரு வகையான செயல்பாட்டை வைத்து மக்களை மேன்மைபடுத்தி இருக்கிறார்கள். சென்னை மீஞ்சூரை அடுத்த தேவதானம் கிராமத்தில் ஐக்கியமாகி இருக்கும் அருளானந்தர் சித்தரும் தனக்கென ஒரு தனி பாணியைய கையாண்டு மக்களை பக்குவப்படுத்தி உள்ளார்.

  'சூரியனை வணங்குங்கள்' என்பதுதான் அருளானந்தர் சித்தர் காட்டியுள்ள வழியாகும். உலகம் முழுவதும் ஞானம் பெருக வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டு இருந்த அருளானந்தர் சித்தர் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தேவதானம் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகள் வாழ்ந்த அவர் தன்னை ஒருபோதும் சித்தர் என்று சொல்லிக் கொண்டதும் இல்லை. வெளிப்படுத்தியதும் இல்லை. ஆனால் அவரது செயல்பாடுகள் அவர் மிகப்பெரிய சித்தர் என்பதை இந்த உலகுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டியது. இவரது பூர்வீகம் பழவேற்காடு. இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தை பற்றி பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை. இவருக்கு ஒரு அண்ணன் இருப்பது மட்டும் தெரியவந்துள்ளது.

  இவரது உண்மையான பெயர் கேசவன் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர் எதுவரை படித்துள்ளார் என்பது தெரிய வில்லை. ஆனால் டெய்லரிங் படிப்பில் டிப்ளமோ பெற்றதாக சொல்கிறார்கள். பழவேற்காட்டில் இருந்து சென்னை சைதாப்பேட்டையில் இவர் டெய்லர் கடை அமைத்திருந்தார். 16 தையல் எந்திரங்களை வைத்திருந்த அவர் மிகப்பெரிய அளவில் துணி தைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். சைதாப்பேட்டையில் காரனீஸ்வரர் கோவில் அருகில்தான் இவரது டெய்லரிங் கடை இருந்தது. கடையை திறப்பதற்கு முன்பும், கடையை மூடிய பிறகும் தவறாமல் காரனீஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவார். அதன் பிறகுதான் அவருக்குள் ஞான மாற்றம் அதிகரித்துள்ளது. பிறவியிலேயே இவரிடம் ஞான மேம்பாட்டுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன.

  ஞானப் பாதையில் நடைபோட்ட அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்தார். இதனால் அவரது பெற்றோர்கள் அவரை தொந்தரவு செய்யாமல் அவரது போக்கிலேயே விட்டுவிட்டதாக தெரிகிறது. ஒரு கால கட்டத்தில் அவருக்குள் ஞான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. எப்போதும் தியானம், சிந்தனை, எழுத்து என்று அவரது வாழ்க்கையே மாறியது. அளவுகடந்த தியானம் காரணமாக டெய்லரிங் தொழிலை அவர் கைவிட்டார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ஞானத்தை மேம்படுத்தினார். ராமநாத சுவாமிகள் என்பவரிடம் இவர் சித்த வைத்தியம் மற்றும் ஞான மேம்பாடு போன்றவற்றை கற்றுக் கொண்டார். அவரையே குருவாக ஏற்று செயல்பட்டார். ராமநாத சுவாமிகள் சித்தர் நீண்ட ஆய்வுக்கு பிறகு அருளானந்தருக்கு தீட்சை அளித்தார்.

  குருவின் தீட்சையால் அவருக்கு முழுமையான ஞானம் கிடைத்தது. குறிப்பாக சூரிய தியானத்தில் இவர் மேம்பட்டு இருந்தார். இவருக்கு அருளானந்தர் என்ற பெயர் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சென்னை சைதாப்பேட்டையில் இருந்து புறநகர் பகுதியில் சுற்றித்திரிந்த அவர் தேவதானத்துக்கும் சென்றார். அங்குள்ள அமைதியான சூழ்நிலை அவரை கவர்ந்தது. அங்கேயே இடம் வாங்கி சூரிய தியான மையத்தை உருவாக்கினார். தேவதானம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடம் அவர் மிகவும் அன்போடு பழகினார். அவர்களுக்கு முதலில் வைத்தியம் செய்யும் பணியை தொடங்கினார். சித்த வைத்தியம் மூலம் அவர் நோய்களை மிக மிக எளிதாக குணமாக்கியதால் அவரை பற்றிய தகவல்கள் பல கிராமங்களுக்கு பரவியது. நிறைய பேர் அவரிடம் வந்து தங்களது நோய்களை தீர்த்துகொண்டனர். சில சமயம் தண்ணீரை எடுத்து தனது கைகளால் தெளித்துவிடுவார். அடுத்த வினாடியே நோய் தீர்ந்துபோகும். இந்த அற்புதத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்த பலரும் சிலிர்த்து போனார்கள். அதன்பிறகுதான் அவர் மிகப்பெரிய மகான் என்ற உண்மையை தேவதானம் பகுதி மக்கள் தெரிந்து கொண்டனர். அவரை தேடி வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதன்பிறகே தன்னை நாடி வந்தவர்களிடம் ஞான மேம்பாட்டை உருவாக்கும் முயற்சிகளை அருளானந்தர் சித்தர் மேற்கொண்டார். எண்ணற்ற மருத்துவ உதவிகளை பெற்று சுவாமிகளின் பேரன்பால் ஈர்க்கப்பட்டிருந்த மக்கள் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கினார்கள். அப்படி தன்னிடம் உண்மையாக நடந்து கொண்டவர்களிடம் ஞான விளக்கத்தை அருளானந்தர் சித்தர் சொல்லிக் கொடுத்தார். உங்கள் ஆத்மாவை கவனியுங்கள். உங்கள் ஆத்மாவை நெறிப்படுத்துங்கள். உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உள்மனதை உற்றுப் பாருங்கள். உங்களை தெரிந்து கொண்டால்தான் இந்த உலகத்தை புரிந்துகொள்ள முடியும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்தார். கோவிலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. நீங்களே கோவில்தான் என்று சொல்லுவார். ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்து வந்தால், 'நீங்கள் சபரிமலை போக வேண்டிய அவசியமில்லை. ஞானத்தை பயன்படுத்தி தியானம் செய்யுங்கள். ஐயப்பன் உங்களைத் தேடி வருவார்' என்பார். அதுபோல தன்னை புரிந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அவர் சூரிய தியானத்தை கற்றுக்கொடுத்தார். சூரிய தியானம் என்பது அவ்வளவு எளிதானதல்ல. கொளுத்தும் வெயிலை கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டும். அருளானந்தர் சித்தர் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் நின்று கொண்டு சூரியனை உற்றுப்பார்த்து தியானத்தில் ஈடுபடுவார். அந்தளவுக்கு அவரிடம் அதீத சக்தி இருந்தது. சூரிய தியானத்தின் மூலம் ஏராளமான தத்துவங்களை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த அனுபவ தத்துவங்களை 'சித்தர் அனுபவ விளக்கம்', 'சித்தர் மூலம் கடவுளை அடைவது எப்படி', 'பிரம்ம ஞான விளக்கம்', தி லிவிங் லெஜெண்ட் ஆப் சித்தர் ஆகிய 4 புத்தகமாக அவர் எழுதியுள்ளார். ஞானத்தை தேடி அலைபவர்களுக்கு இந்த 4 புத்தகங்களும் மிகப்பெரிய வழிகாட்டியாக உள்ளது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சில செயல்கள் மூலம் அவர் தான் சித்தர் என்பதை மக்களுக்கு தெரியபடுத்தினார். ஒரு தடவை பட்டுபோன மரத்தை தொட்டு அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அவர் தொட்டபிறகு அந்த மரம் தளிர்க்க தொடங்கியது. அதுபோல பொன்னேரி ரெயில் நிலையத்தில் உடல்நலம் இல்லாமல் கிடந்த ஒரு பெண்ணுக்கு மூலிகை சாறு கொடுத்து குணப்படுத்தி உள்ளார். அருளானந்தர் சித்தர் பஸ்சில் போனாலும், ரெயிலில் போனாலும் சரி டிக்கெட் எடுப்பதே இல்லை. கண்டக்டர் டிக்கெட் எடுக்க சொன்னால் கையை மூடி திறந்து காட்டுவார் அங்கு டிக்கெட் இருக்கும். இதை பார்த்து பல கண்டக்டர்கள் மிரண்டுபோய் கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருக்கிறார்கள். காசி வரை அவர் இப்படி டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்ததாக சொல்கிறார்கள். நினைத்தபோதெல்லாம் சித்து விளையாட்டுகளை செய்யும் அதீத ஆற்றல் அவரிடம் இருந்தது. ஆனால் அந்த சித்தாடல்கள் அனைத்தையும் மக்கள் ஞான மார்க்கம் மற்றும் சூரிய தியானத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் நடத்தினார். நல்லதை நினைத்து நல்லதே செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அன்பு, கருணை, மனநலம், உடல்நலம் போன்ற உன்னதமான விஷயங்களில் வாழ்க்கையை செலவிட்டால் சின்ன சின்ன விஷயங்கள் பாதிக்காது. எனவே வீண் அரட்டை, பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு இடம் கொடுக்காமல், பெரிய விஷயங்களையே முதலில் செய்தால் ஞான மார்க்கத்தில் செல்ல எளிதாக இருக்கும் என்று அறிவுறுத்தி உள்ளார். இவரது வழியை ஏராளமானோர் பின்பற்றி பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் ஜீவனை ஒடுக்கி முக்தி அடைந்தார். அவர் வாழ்ந்த இடத்திலேயே அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஜே.நீலகண்டன் அந்த ஜீவ சமாதியை மிக சிறப்பான முறையில் நிர்வகித்து வருகிறார். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அங்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடத்தப்படுகிறது. தற்போது அங்கு ஜீவ சமாதியை கட்டிடமாக மாற்றும் திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கீற்றுக் கொட்டகையில் உள்ள இந்த ஜீவ சமாதிக்கு வந்து தியானம் செய்தால் மனம் அமைதி பெறுவதாக, நல்ல உணர்வு ஏற்படுவதாக பெரம்பூரை சேர்ந்த தனலட்சுமி சத்திய நாராயணன் சொல்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் அருளானந்த சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை வழிபாடு நடந்தபோது சூளைமேட்டை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணாஜி சித்தர் தனது சீடர்களுடன் வந்து சிறப்பு பூஜை செய்தார். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று அருளானந்தர் சித்தர் ஜீவ சமாதி மீது அமர்ந்தது. பூஜைகள் முடியும் வரை அந்த காகம் அங்கேயே அமர்ந்து இருந்தது. உடனே அந்த காகத்துக்கு பிரசாதம் வைத்தனர். அதை சாப்பிட்ட அந்த காகம் அருளானந்தர் சித்தர் ஜீவ சமாதியை 3 முறை சுற்றி பறந்துவிட்டு சென்றது. இப்படி அந்த ஜீவ சமாதியில் இருந்தபடி அருளானந்தர் சித்தர் அற்புதங்கள் செய்து கொண்டு இருக்கிறார். இந்த ஜீவ சமாதி தேவதானம் ரங்கநாதன் பெருமாள் ஆலயத்தின் பின்புறம் இருக்கிறது. மீஞ்சூர் வழியாக சென்றால் எளிதில் அடையலாம். தொடர்புக்கு: 98415 61212

  Previous Next

  نموذج الاتصال