No results found

  பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் பிரச்சனைகளும், தீர்வும்....


  பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு. தாய்மை என்ற நிலையை அடைய பெண்கள் பிரசவ காலத்தில் படும்பாட்டினை வெறும் வார்த்தைகளால் கூறுவதால் அதன் வலியும்,வேதனையும் யாருக்கும் தெரிய வராது.

  அத்தகைய தாய்மையை அடைந்த பின், பிரசவத்திற்கு பிந்தைய நிலையில் பெண்கள் இன்னும் பல்வேறு உடலியல், மனவியல் சார்ந்த மாற்றங்களுக்கு ஆட்படுவது என்பது அவர்களுக்கு மீண்டும் ஒரு சவால். அத்தகைய மாற்றங்களோடு உடல் எதிர்கொள்ளும் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு மகவின் மீது பேரன்பும், அக்கறையும் காட்டி வளர்ப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. அத்தகைய தருணத்தில் பெண்களை அன்பும், அரவணைப்பும் கொடுத்து பேணிக்காக்க வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

  பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம். தன் உடல் நலத்தோடு, மகவின் நலனையும் சேர்த்து காக்க வேண்டிய தருணம் அது. அந்த காலத்தில் அவர்களை அதிகம் பாதிப்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் 'பி.பி.டி.' எனப்படும் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் தான். இதனைப் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவதே இல்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமான பணி. ஒரு தாயின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் தேவையான ஆற்றலை பிரசவத்தின் போது எடுத்துக்கொள்ளும் என்கிறது நவீன அறிவியல். உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன சோர்வு அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். சிலருக்கு பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வருடம் கூட இந்த மன அழுத்தம் நிலைத்திருப்பதாக ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.

  இதனால் குழந்தைகளை, கவனித்துக்கொள்வதும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் கடினமாவதால், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதும் கடினமாகிறது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் இத்தகைய மன அழுத்தத்தை போக்க எளிய மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பால் சுரப்பினை அதிகரிக்கும். மணத்தக்காளி கீரை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பது அதன் பெயரிலேயே விளங்கும். இந்த கீரை பிரசவத்திற்கு பின் அடிக்கடி செய்து கொடுக்க மனஅழுத்தம் குறையும். அதே போல் வல்லாரை, பிரமி ஆகிய கீரை வகைகளையும் நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பிரமி நெய் எனும் சித்த மருந்து அதற்கு நல்ல தீர்வினை தரும். மற்றொரு எளிய சித்த மருத்துவ மூலிகை அமுக்கரா கிழங்கு. நரம்புகளைப் பலப்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கம் உண்டாக்கவும் வல்லது. எல்லா வயதினரும், எல்லா பருவத்திலும் பயன்படுத்த ஏற்புடைய மூலிகை அமுக்கரா எனும் அஸ்வகந்தி. பிரசவத்திற்கு பின் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த உகந்தது.

  மேலும் அமுக்கரா கிழங்கு இயற்கை வலிநிவாரணியாக இருப்பதால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட உடல் வலியும் நீங்கும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள பிரசவத்திற்கு பின் உண்டாகும் சிறுநீர் பிரச்சினைக்கும் பலன் தரும். தூக்கமின்மை இருப்பின் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் சேர்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் பழக்கத்தில் உள்ள பாட்டி வைத்தியம் என்னவெனில் 'செலவு குழம்பு' எனப்படும் 'பத்திய மருந்து குழம்பு' தான். பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு பத்தியக் குழம்பாக இந்த மருந்து குழம்பு கொடுக்கப்படுவது இன்றளவும் பல ஊர்களில் வழக்கத்தில் உள்ளது. கர்ப்ப காலத்திலும் சரி, கர்ப்பத்திற்கு பின்னரும் சரி சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக கையாளப்பட்டு வருவதற்கு இதுவும் உதாரணம். 'பிரசவத்திற்கு பின்னர் கருப்பை மற்றும் உடலில் சேரும் நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை அகற்றி உடலை சுறுசுறுப்பாக வைக்கக்கூடியது மருந்து குழம்பு. பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடலைச்சுத்தம் செய்வதற்காக மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டம் தரும் உன்னதமான உணவுப்பொருள்.

  மேலும் இதன் மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும். மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி, கருவேப்பிலை, ஓமம், பெருங்காயம், தனியா போன்ற கடைசரக்குகளின் கலவையாக உள்ளது இந்த பத்திய குழம்பு. இது சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் வராமல் காக்கக் கூடியது. பிரசவமான 15 நாட்கள் கழித்து இதனை பயன்படுத்துவது நல்லது. 'பிரசவ லேகியம்' என்ற சித்த மருந்து பலராலும் அறியப்பட்ட பெண்களுக்கான மருந்து. இது பிரசவம் ஆன பிறகு கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை தெளிவாக்கும். சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம் இவை இரண்டிலும் இதனை பயன்படுத்தலாம். சுகப்பிரசவம் எனில் உடனே இதனை எடுக்கத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து இதனை எடுக்கத் துவங்கலாம். இதனால் கருப்பையில் உள்ள ரத்தகட்டிகள் விரைவில் நீங்கி பாலூட்டும் தாய்க்கு சுகம் தரும். 'சவுபாக்கிய சுண்டி லேகியம்' எனும் சித்த மருந்து பாட்டிகாலம் முதல் மிகப்பிரபலமான ஒன்று. சுக்கினை முதன்மையாக கொண்ட இந்த லேகியம் கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை பலப்படுத்தும். மேலும் கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும் பேருதவி புரியும். இது மட்டுமின்றி மார்பில் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் சுக்கினால் உடல் வலியும், அசீரணம், செரியாமை, வாய்க்குமட்டல் ஆகிய குறிகுணங்கள் நீங்கி பெண்களுக்கு நலம் பயக்கும். பிரசவத்திற்கு பின்னர் உடல் வலி, இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு சுடுநீரில் நொச்சி இலையை போட்டு காய்ச்சி குளிப்பதற்கு பயன்படுத்த நல்ல பலன் தரும். இது உடல் வலியை குறைக்கும் எளிய மருத்துவ வழிமுறை. நொச்சி இலை வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலியை நீக்கும் தன்மையும் உடையது. சித்த மருத்துவத்தில் வெளி மருத்துவம் சிறப்பு மிக்கது. அந்த வகையில் பிரசவத்திற்கு பின்னரும், இடுப்பு பகுதியை வலிமையாக்க உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம். உடல் வலி, கை கால் வலி, தசை வலி இவற்றிக்கு 'பிண்ட தைலம்' எனும் சித்த மருந்தை வெளியே தடவி லேசான சுடுநீரில் ஒற்றடமிட வலி குறையும். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், பிரசவத்தில் இழந்த குருதியையும், உடல் வன்மையையும் மீண்டும் பெறுவதற்கும் அதிகப்படியான கலோரி அளவுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளையும், அன்னபேதி செந்தூரம் போன்ற மாத்திரைகளையும் மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், சங்கு பற்பம் போன்ற மருந்துகளையும் எடுக்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரை சூப், கறி வேப்பிலை சூப், காய்கறிகள் சூப், சத்துமாவு கஞ்சி, கருப்பு உளுந்து கஞ்சி, பிரண்டை துவையல், முளை கட்டிய தானியங்கள், மாமிச சூப் வகைகள் இவற்றை எடுத்துக்கொள்வது மிக அவசியம். பிரசவத்திற்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து ஹார்மோன் மாற்றங்களை சீராக்கும் மற்றொரு சித்த மருந்து சதாவேரி லேகியம். தண்ணீர்விட்டான்கிழங்கு மூலிகையை முதன்மையாகக் கொண்டு உருவாகும் இந்த லேகியம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது கருப்பைக்கு வலுவை தரும். மேலும் கருப்பை ரணங்களை ஆற்றவும், அதனால் ஏற்படும் வெள்ளைப்போக்கினை குறைக்கவும் கூடியது. பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு சிறுநீர்ப்பை பலவீனம் அடைவதால் அடிக்கடி சிறுநீர் கழிதல், சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இது பெண்களுக்கு சிறுநீர் பாதை சார்ந்த தொற்றினையும், ஒரு வித மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு சித்த மருத்துவம் பாதுகாப்பானதாக இருக்கும். நரம்புகளை வன்மைப்படுத்தும் உள் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெளி மருத்துவம் செய்தலும் நல்லது. உளுந்து தைலம் என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவி வர நல்ல பலன் தரும். அத்துடன் கருப்பு உளுந்தினை பாலுடன் சேர்த்து கஞ்சியாக்கி எடுத்துக்கொள்ள தசைகளுக்கும், நரம்புகளுக்கும் வன்மை தரும். இது பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பு பாரம்பரிய உணவு. மன அழுத்தத்தை போக்கவும், உடல் சோர்வை களையவும் நேரம் கிடைக்கும் போது தியானப் பயிற்சி செய்வது நல்லது. மேலும் பிரசவத்திற்கு பின் பழகக்கூடிய யோகாசன பயிற்சி முறைகளான சவாசனம், பத்த கோணாசனம், புஜங்காசனம், காலை உயர்த்தி பிடித்த நிலை போன்ற எளிய பயிற்சி முறைகளை செய்து வருவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். பிரசவத்திற்கு பின் வயிறு பெரிதாவதை தடுக்கும். பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் உடல் எடை பொதுவாகவே கூடும். அதற்காக உணவு வகைகளை குறைத்தால் சேய்க்கு பால் சுரப்பு குறையும். ஆதலால், எளிய யோகாசனப் பயிற்சிகளை செய்து உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். தடாசனம், திரிகோணாசனம், கோமுகாசனம், மர்ஜரியாசனம், பத்மாசனம் ஆகிய எளிய பயிற்சிகளை செய்வது இதற்கு நற்பலன் தரும். கணவன்மார்கள் மனைவியின் மன அழுத்தத்தையும், உடல் பலவீனத்தையும் புரிந்து கொண்டு குழந்தையின் பராமரிப்பில் சரிபங்கு தருவதுடன், மனைவிக்கு பக்க பலமாக நின்று ஆதரவு தந்து தாய்மைக்கு ஒத்துழைப்பு நல்குவது அத்தகைய சூழலில் அவசியமான ஒன்று. இவ்வாறாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு முறைகளையும், எளிய மருந்துகளையும் கையாள்வது அவர்களுக்கு பின்னாளில் பல்வேறு உடல் நலக்கேடுகள் வரவிடாமல் தடுக்கும். அவர்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டும்.

  Previous Next

  نموذج الاتصال