No results found

  சென்னை சித்தர்கள்: சற்குரு ஞான சித்தர்-புதுப்பட்டினம்


  சென்னை கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தில் சற்குரு ஞான சித்தரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த சித்தர் சுவாமிகள் குரோதன ஆண்டு வைகாசி மாதம் 4-ஆம் தேதி (15-05-1904) அமாவாசை, கார்த்திகை கூடிய ஞாயிறன்று கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை ரத்தினசாமி,தாயார் தனலட்சுமி. அவர் அவதரித்த இல்லம் சிவன் கோயிலுக்கு எதிரில் இருந்தது. சிவலிங்கம் அவர் பிறந்த இடத்திற்கு நேராக சுமார் 400 அடி தூரத்தில் இருந்தது.

  சுவாமிகள் சிறு வயதாக இருக்கும்பொழுது தினமும் மூன்று வேளை அங்கு சென்று விடுவார். உமாமகேஸ்வரனை வணங்கி தியானம் இருப்பார். இவர் உடலெல்லாம் திருவருள் சக்தி பிரகாசித்து சிவசந்நிதானம் வரை பாய்ந்தது.

  இவர் பள்ளிப் படிப்பை முடித்தவர். மல்யுத்தம், சுருள் கத்தி, பொடி குச்சி, சிலம்பம் இவைகளில் தேர்ந்தவர். இவரை சட்டாம்பிள்ளை என்று எல்லோரும் அழைப்பார்கள். இவரது மூதாதையர் சிவ சிந்தையுள்ளவர்கள். ஆயுர்வேத சாஸ்திரத்தில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள்.

  இவரது பாட்டனார் 40 வயதில் சந்நி யாசம் பெற்றவர். தோட்டத்தில் பர்ண சாலையமைத்து வில்வ மரத்தருகே அமர்ந்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு எடுத்துக் கொள்வார். பூரண மவுனம் கொண்டவர். இவரது மகன் தான் ரத்தின சாமி என்பவர். இவர் சாந்த சொரூபி. ஒல்லி யானவர். இவரது வாழ்வில் கால்பேச்சு, அரை பேச்சுதான் இருக்கும்.

  தமது 38-வது வயதில் மனைவியை இழந்த பிறகு வெள்ளாடை அணிந்து துறவறம் மேற்கொண்டார். மேல்நோக்கிய பார்வை, இவரிடம் துன்பக்குறி, சந்தோஷக்குறி இல்லை . அழுவதும், சிரிப்பதும் இல்லை. பொய் இல்லை. தர்ம சிந்தனையுள்ளவர்.

  வெளியே செல்லும்பொழுது மட்டும் வேட்டி, ஜிப்பா அணிந்திருப்பார். வீட்டில் இருக்கும்பொழுது வெறும் லங்கோடு மட்டும்தான். அவர் உறங்கும் பொழுது 3 அங்குல உயரத்திற்கு வெளிர் நீல நிற ஜோதி அவரைச் சுற்றி வளையம் வைத்தாற்போல் சூழ்ந்திருக்கும். விவசாயம் செய்யும் மக்கள் விதைகளை சுவாமிகளின் கையில் கொடுத்து வாங்கிச் சென்று விதைப்பர். அமோக விளைச்சல் கிடைக்கும்.

  ஆழ்ந்த சிந்தனையுள்ளவர். பிரம்ம ஞான விஷயம் மட்டுமே பேசுவார். சிறு மணல் தூசிதான் இந்த உலகம் என்பார். மந்திர சாஸ்திரம் பயின்றவர். மோடி வைப்பது, எடுப்பது இவருக்குக் கைவந்த கலை. இவருக்கு பல குருமார்கள் உண்டு. பட்டாளத்து வைத்தியர் மோடி அப்துல்காதர் சாஹிப்பிடம் மந்திர சாஸ்திரம் கற்றார். சித்தர் தத்துவம் அறிந்தவர். சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றவர். சித்தர் மூலம் யோக சாஸ்திரம் கற்றார். கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சுப்பிரமண்ய தேவர் என்பவர் இவரது நண்பர். அவரும் மந்திர சக்தியில் வல்லவர். பதினெண் சித்தர்கள் சுவாமிகளுக்குக் காட்சி கொடுத்து ஆசி வழங்கியுள்ளார்கள்.

  கும்பகோணம் பாடகாச்சாரி சுவாமிகளும் இவரது நண்பராவார். இவருக்கு இவரது பாட்டனாரே ஞானகுரு ஆவார். அவர் முக்தி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன்பு சுவாமிகளுக்கு பிரம்ம தீட்சை அளித்தார். சிறுவயதிலிருந்தே தமது பாட்டனாரின் பார்வையால் பக்குவமடைந்தார்.

  சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயண சுவாமி என்பதாகும். சிறு வயதிலேயே ராஜம் என்ற பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தைகள் இருவரும் சிறுவயதிலேயே பிரம்ம ஞானப் பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

  இன்று பூரண ஈஸ்வர நிலையில் உள்ளனர். ராஜம் அம்மையார் முதலில் சுவாமிகளுக்கு மனைவியாகி, பின் சீடராகி, அதன்பின் சகோதரியாகி வாழ்ந்து இறுதியில், ஸ்ரீலஸ்ரீ மாதாஜி சித்தர் என்று அழைக்கப்பட்டு ஸ்ரீராஜ நாராயண நந்தா சுவாமிகள் என்ற தீட்சா நாமம் பெற்று சிவ ஐக்கியம் அடைந்தார்கள். ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன், மனைவி, மகன் மூவரும் சித்தர்களாக வாழ்ந்தது இந்த நூற்றாண்டில் இந்தக் குடும்பம் மட்டும்தான் என்பது நிதர்சனமான உண்மை. நேரில் கண்ட உண்மை.

  சற்குரு ஞான சித்தர் சுவாமிகள் சிறு வயதிலிருந்தே ஆஞ்சநேயர் உபாசனையில் பயிற்சி பெற்று சித்தியும் பெற்றார். சிறுவயதில் கடுமையான சூரிய பூஜை செய்து தன் இரத்தத்தையே தெய்வத்திற்கு அர்ப்பணிப்பார். சித்த சுத்தியோடு தெய்வத்திடம் பூரண சரணாகதியடைந்த பூஜை செய்து வந்தால் 36 மாதத்திற்குள் எல்லாக் குருக்களும், ஜீவன் முக்தியடைந்து விடுவார்கள் என்பார். சிவ சிந்தனையோடு செய்யும் செயல்கள் அனைத்தும் பலனளிக்கும். பயனில்லாத காரியத்தில் ஈடுபடக்கூடாது என்பார்.

  சுவாமிகள் சித்த சுத்தியும், மன அமைதியும், ஆத்மானுபவங்களின் சிகரங்களையும், அரிய அமானுஷ்ய சக்திகள் பலவும் பெற்றவர். அவர் சொல்வதெல்லாம் செயலில் நிறைவேறின. வெகு தூரத்தில் நடப்பதையும், பிறர் மனதில் உள்ளதையும் தெளிவான அறியும் ஆற்றல் பெற்றவர். அவரது அருள் நோக்கினாலும், தெய்வீகப் புன்னகையினாலும், புனித ஸ்பரிச ஆசியாலும் பிரபல ஆங்கில மருத்துவர்களாலும் குணமாக்க முடியாத நோய்களெல்லாம் குணமாயின. சுவாமிகள் மிகத் தூய்மையும், எளிமையும் உடைய தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

  தற்போது அதிகம் நடைமுறையில் இல்லாத சித்தயோக மார்க்கத்தில் சென்று கடும் சாதனை செய்து அரும்பெரும் சித்திகள் பல கைவரப்பெற்ற மகாசித்த புருஷர்.

  ஓங்கார அருளாலயத்தைத் தோற்றுவித்து அதன் - மூலம் மெய்யன்பர்களுக்கு ஆத்ம போதனை செய்து வந்தார். அவரிடம் ஆத்ம பயிற்சி பெற்ற பலர் இன்று ஆத்மானுபூதிச் செல்வர்களாகத் திகழ்கின்றார்கள்.

  ஒருநாள் மாலை சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்பொழுது பொன்னொளி மிளிரும் வெளிர் நீல அருளொளியொன்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவரைச் சூழ்ந்து கொண்டது. ஓங்காரம், பரநாதம் இடைவிடாது ஒலிக்கத் தொடங்கியது. இன்னதென்று விவரிக்க முடியாத ஆனந்த உணர்வு ஒன்று உள்ளும், புறமும் பொங்கித் ததும்பி வழிந்தது. அதன்பின் அவர், அவருள்ளிருந்து பிரணவ சற்குரு இடைவிடாது வழிகாட்ட அதி தீவிர ஆத்ம சாதனையில் ஈடுபட்டார். கற்பூரத்தில் இருக்கும் அக்னியைப் போன்ற அமைதியையே விரும்புவார்.

  1944-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி சுவாமிகளுக்கு சற்குரு பதவி கிடைத்தது. தன்னுள்ளே எல்லையற்ற தூரத்தைப் பெற்றிருந்த ஒரு அகண்ட விஸ்வரூபப் பேரொளியைக் கண்டார். அதனுள்ளே அவரின் குக்கும் தேகம் பயணம் செய்தது. அங்கு நாதத்தை அதாவது சக்தியை தரிசித்தார். அருளானந்த நிலை பெற்று பரப்பிரம்மம் அவருக்கு சற்குரு பதவி அளித்தது. வகர வித்தையில் தன்னிகரற்று விளங்கினார். தங்கம் செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாருக்குப் பிரம்ம தீட்சை அளிக்கிறாரோ அவர்களை கடவுளை அறியச் செய்வார். கடவுளை உணரச் செய்வார். இறுதியில் தன் கட்டை விரலின் முதல் அங்குலத்தை லலாடத்தில் வைத்து இறைவனைக் காணச்செய்வார்.

  கும்பகோணத்திலிருந்து பரங்கிப் பேட்டைக்குச் சென்று அங்கு சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அகரம் என்ற இடத்தில் மௌன சுவாமிகள் என்பவர் பாதாள அறையில் தியானம் செய்து வந்தார். மௌன சுவாமிகளும், சித்தர் சுவாமிகளும் நண்பர்களாவார்கள். பின்னர் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மயிலாடுதுறைக்கு வந்து அங்கு 24 ஆண்டுகள் தங்கி பக்தர்களுக்கு ஞானோபதேசம் செய்து வந்தார். மௌனவித்தை வாசி வித்தை, காயசித்தி வித்தை, ஸ்ரீவித்தை, கேசரிவித்தை, பரகாய வித்தை, பிரம்ம வித்தை ஆகிய 7 வித்தைகள் கைவல்யமானாவர். இதில் தான் இப்பிரபஞ்சமே அடங்கியுள்ளது என்பார்.

  சுவாமிகள் 7 கோடி மந்திரங்களில் சித்தி பெற்றவர். பிரணவ தரிசனம் கண்டவர். ஓங்கார தீட்சை, மானசீக தீட்சை, திருவடி தீட்சை முதலிய தீட்சைகளைக் கொடுத்தார். அவர் கொடுத்த தீட்சைகளுக்குள் தலையானது தானே அக்னியாகி அந்த அக்னிக்குள்ளிருந்து தமது சீடர்களுக்கு அளித்த அக்னி தீட்சையாகும். 500 மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கு தான் இருந்த இடத்திலிருந்தே தீட்சை அளிப்பார். இவருக்கு பகல் இரவு எதுவும் கிடையாது. இரவு 12 மணி முதல் 4 மணி வரை பேசுவார். அற்புத சக்தி வாய்ந்த மகா புருஷர்.

  பதினெண் சித்தர் பாடல்களை எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் பட்டெனச் சொல்வார். நோய்களிடம் அன்பு செலுத்து. மரணத்தின் மீது காதல்கொள் என்பார். அவரின் சூக்கும் தேகம் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து அவரை விரும்புகின்றவர்களுக்கு எல்லா சூக்கும உதவிகளும் செய்யும். தூய்மை , பூரணத்துவம், ஐக்கியம் இவையே சாதனைப் படிகளாகும் என்பார்.

  சில சமயம் பத்து, பதினைந்து பேர் சுவாமிகள் முன்பு அமர்ந்து தியானம் செய்வர். காலம் கடந்து விடும். சுவாமிகள் அவர்களை சாப்பிட்டுப் போங்கள் என்று சொல்லி ஒரு சிறு அறைக்குள் சென்று ஒரு வெள்ளைத் துணியை விரித்துவிட்டு கதவைச் சாத்தி விட்டு வருவார். ஒரு ஐந்து நிமிடங்களில் பதினைந்து பேருக்கு தேவையான சூடான, சுவயைான உணவு தயாராகியிருக்கும். அனைவரும் உணவருந்திவிட்டு செல்வர். பாத்திரங்களும் இலைகளும் மறைந்துவிடும்.

  ஒரு சில சீடர்கள் மரணம் அடைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னர் ஞானதீட்சை அளித்துள்ளார். சுவாமிகள் இருக்கும் இடத்திலிருந்து 21 அடி தூரத்திற்குள் எந்த ஜீவனுக்கும் மரணம் சம்பவித்ததே கிடையாது. 31.08.1964 அன்று காலை 7.28க்கு தனக்கு நடக்கப்போகும் ஜீவ ஐக்கிய தரிசனத்தை 1939ஆம் ஆண்டு மே மாதமே கண்டார். தன் கடந்த கால மரணங்களை எல்லாம் தரிசித்திருந்தார்.

  தான் சிவ ஐக்கியம் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அனைவருக்கும் தெரிவித்து விட்டார். 29.8.1964 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சிறிது அன்னம் புசித்துவிட்டு சரியாப் போச்சு, சரியாப் போச்சு என்று சொல்லிக்கொண்டே தன் கைகளைக் கழுவினார். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அதற்கான காரியங்களை அதி தீவிரமாக உற்சாகமாக செய்யத் தொடங்கினார். 31.8.1964 அன்று காலை 7.28க்கு எத்தனையோ லட்சம் ஆண்டுகள் இப்பூவுலகில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்த அந்த சிவ ஆத்மா பரவெளியோடு ஐக்கியம் அடைந்தது.

  சுவாமிகளின் புதல்வரும், பிரதம சீடரும், ஓங்கார ஆசிரமத்தின் தலைவருமான தவத்திரு சுவாமி ஓங்கார நந்தா அவர்களும், அவர்தம் சீடர்களும் சுவாமிகளின் குரு பூஜையை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். அதையொட்டி 60 நாள் நித்திய பூஜை நடைபெற உள்ளது.

  கல்பாக்கத்திற்கருகே உள்ள புதுப்பட்டினத்தில் சற்குரு ஞான சித்தர் சுவாமிகளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதான மூர்த்தியாக சித்தர் சுவாமிகளும், அவர் போற்றிய பதினெண் சித்தர்கள் சுற்றுப் பிரகாரத்திலும் மற்றும் பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், மேதா தட்சிணாமூர்த்தி, வியாக்கியரபாதர், வேதவியாசர், ஆதிசங்கரர், ஞானேஸ்வர மகராஜ், ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரர், சுவாமி வேதாந்த தேசிகர் ஆகியவர்களும் இக்கோயிலில் எழுந்தருளி உள்ளனர்.

  இது ஒரு ஆத்ம சாதனைக் கோயில். சற்குரு வழிபாடு பரிபூரணானந்த நிலையில் நடைபெறுகிறது. சுத்த சவி சகஜமார்க்க வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீலஸ்ரீ மாதாஜி சித்தருக்கும், சித்தர் சுவாமிகளின் வலது பக்கத்தில் கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இது ஒரு மெய்ஞான சித்தரின் மேற்பார்வையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

  Previous Next

  نموذج الاتصال