No results found

  சென்னை சித்தர்கள்: ஞான மாணிக்கம் சிவாச்சாரியார்-ராயபுரம்


  சென்னையில் எத்தனையோ சித்தர்களின் ஜீவ சமாதி கால வெள்ளத்தில் காணாமலேயே போய்விட்டது. இப்போதும் கூட வட சென்னையில் பல சித்தர்களின் ஜீவ சமாதியில் இருக்கும் அருளாளர்கள் பற்றி முழுமையான தகவல்கள் யாருக்குமே தெரியாமல் உள்ளது. அந்த சித்தர்கள் தாங்களாகவே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும்போதுதான் அவர்களை பற்றிய உண்மைகள் வெளி உலகத்துக்கு தெரிய வருகிறது.

  இத்தகைய அற்புதத்தை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் என்ற சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி ராயபுரம், மன்னார்சாமி கோவில் தெருவில் அமைந்துள்ளது. அதாவது ராயபுரம் பழைய பாலத்தின் இறக்கத்தில் சற்று தொலைவில் ரோட்டு ஓரத்திலேயே இந்த ஜீவ சமாதி இருக்கிறது. ருத்ரசோமநாதர் என்ற ஆலயத்தின் உள்ளே இந்த ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.

  இந்த ஆலயத்துக்குள் பரிபூரணம் ஆகி இருக்கும் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வாழ்ந்தவர். வடசென்னை பகுதியில் அந்த கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த சித்த புருஷர்களான குணங்குடி மஸ்தான் சாகிப் மற்றும் தட்சிணா மூர்த்தி சுவாமிகள் ஆகியோருக்கு சம காலத்தவர் இவர். இந்த 3 சித்தர்களும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் செவி வழி செய்திகள் சொல்கின்றன.

  முருகப் பெருமானை பிரதானமாக வழிபட்ட குணங்குடி மஸ்தான் சாகிப்புக்கும், விநாயகரை பிரதானமாக வழிபட்ட தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கும் மிக அருமையான ஜீவ சமாதி அமைந்ததோடு தினசரி வழிபாட்டு முறைகளும் சிறப்பாக நடந்து வருகின்றன. ஆனால் அவர்களுடன் வாழ்ந்த அம்மன் பக்தரான மகான் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் பற்றி ஒருவருக்குக் கூட தெரியாத நிலையே இருந்தது.

  ஆரம்ப காலங்களில் அந்த ஜீவ சமாதியில் தினசரி பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் என்ன காரணத்தினாலோ பூஜைகளில் தடங்கல் ஏற்பட்டு அந்த ஜீவ சமாதி கவனிப்பு இல்லாமல் போய்விட்டது. அவரை பின்பற்றி வந்தவர்களும் நாளடைவில் மரணமடைந்துவிட்டதால் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் பற்றி மற்றவர்களுக்கு எதுவும் தெரியாமலேயே போய்விட்டது.

  அவரது ஜீவ சமாதி இருந்த இடம் கால ஓட்டத்தில் சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக வணிகப் பகுதியாக மாறிப் போனது. ஜீவசமாதி அமைந்த இடத்தில் கடைகள் கட்டப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் எந்த கடை அமைந்தாலும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. கடையை சுமூகமாக நடத்த முடியாத நிலையே ஏற்பட்டது.

  அது மட்டுமின்றி கடை வைக்கும் உரிமையாளர்களுக்கும் உடல்நலக் குறைவு மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டன. நீண்ட நாட்களாக இதே நிலை நீடித்தது. முதலில் அந்த ஜீவ சமாதி பகுதியில் 4 சக்கர வாகனங்களை சுத்தப்படுத்தும் காக்ஸ் சர்வீஸ் ஸ்டேஷன் இருந்தது. ஆனால் அதை அந்த உரிமையாளரால் நடத்த முடியாமல் போனது.

  அதன் பிறகு அந்த இடத்தில் சிறிய ஆயில் கடை ஒன்றை ஒருவர் நடத்தினார். அவராலும் அதில் நிலைக்க முடியவில்லை. யார் கடை வைத்தாலும் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு அந்த இடமே புதர் அடர்ந்த பகுதியாகிப் போனது. அப்போதுதான் அந்த நிலத்தின் உரிமையாளர் விவேகானந்தர் அந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினார். அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

  பிரசன்னம் மூலம் அந்த இடத்தில் உள்ள சக்தியை அறிந்துகொள்ள தீர்மானிக்கப் பட்டது. ராயபுரம், மேற்கு கல்மண்டபம் தெருவில் பழைய தபால் நிலையம் எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி என்பவர் மூலம் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போதுதான் அந்த இடத்தில் சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் உண்மை அனைவருக்கும் தெரிய வந்தது.

  அந்த சித்தரின் பெயர் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் என்பதை அறிந்து ஜெயந்தி தெரிவித்தார். இப்படித்தான் கடந்த 1990-களில் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டார். ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சித்தர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள பலரும் விரும்பினார்கள். ஜெயந்தியும் அந்த சித்தரின் உருவத்தை வரைந்து கொடுக்க முன்வந்தார்.

  ஆனால் என்ன காரணத்தினாலோ அதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று ஆலயத்தை பராமரித்து வருபவர்களில் ஒருவரான ராஜேந்திரன் தெரிவித்தார். தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சித்தர் தனது உருவத்தை காட்ட விரும்பவில்லையோ என்னவோ தெரியவில்லை. என்றாலும், விவேகானந்தரும், அவரது நண்பர்களும் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

  புதர் போல் மண்டிக் கிடந்த பழைய பொருட்களை அகற்றிவிட்டு பார்த்தனர். அப்போதுதான் அங்கு லிங்கம், நந்தி போன்ற அமைப்புடன் சிறிய ஜீவ சமாதி அமைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை சீரமைத்து வழிபாடுகளை செய்ய தொடங்கினார்கள். அதன் பிறகுதான் அந்த இடத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

  அந்த இடத்தில் இருந்த சிவபெருமான் ஆலயம் ருத்ரசோமநாதர் என்ற பெயருடன் இருந்தது தெரிந்தது. அந்த பெயரையே மீண்டும் அந்த ஆலயத்துக்கு வைத்துள்ளனர். தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் சிறப்பான வழிபாட்டை விவேகானந்தர் நடத்தி வருகிறார். தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஜீவ சமாதி திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சென்று தியானம் செய்யலாம்.

  பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அடிக்கடி அந்த ஆலயத்தில் ருத்ரயாகம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி ஆண்டு மகாகுரு பூஜை நடத்துகிறார்கள். அன்று அன்னதானம் விமரிசையாக செய்யப்படுகிறது.

  ஆடி மாதம் முதல் வார ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊற்றுகிறார்கள். 3-வது 4-வது வாரம் சேக்கிழார் மன்றத்தின் சார்பில் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. நிறைய பேருக்கு ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சித்தரின் அருள் கிடைத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் அடிக்கடி அந்த ஜீவ சமாதிக்கு சென்று நன்றி காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

  ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சித்தர் அம்மன் பக்தராக திகழ்ந்தவர். குறிப்பாக வாராகி வழிபாட்டை செய்திருக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் வாராகி வழிபாடு செய்து ஞான மாணிக்க சிவாச்சாரியாரையும் மனமுருகி வழிபட்டால் எதிரிகள் தொல்லையில் இருந்து விலகி, அமைதியான வாழ்வை பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

  விவேகானந்தரின் 65 ஆண்டுகால நண்பரான ரத்னகுமார் கூறியதாவது:-

  ஆதி காலத்தில் இந்த இடம் குளம் இருந்த பகுதியாக இருந்துள்ளது. பிறகு குடியிருப்புகள் வந்துள்ளன. நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது அந்த இடம் புதர்கள் மண்டி கிடக்கும். நாங்கள் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே விளையாடிக் கொண்டு இருந்தோம்.

  அப்போதுதான் கடைகளை நடத்த முடியாததால் அந்த புதரை சுத்தம் செய்தோம். அதற்குள் பிரகாரங்களுடன் கூடிய சிறிய ஆலயம் போல் ஒரு கட்டிட அமைப்பு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லிங்கமும், சதுர பீடமும் இருந்தது. அதை பார்த்த பிறகுதான் அது ஏதோ ஒரு மகான் வாழ்ந்த இடம் என்பதை அறிந்து கொண்டோம்.

  உடனடியாக அங்கு தீபம் ஏற்றி வழிபட்டோம். பின்னர் ஜெயந்தி என்பவர் மூலம் அங்கு வாழ்ந்த சித்தர் ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் என்பது எங்களுக்கு உறுதியானது. அன்று முதல் அவரை நாங்கள் நம்பிக்கையோடு வழிபட்டு வருகிேறாம். ஞான மாணிக்கம் சித்தர் பழுத்த பழமாக வாழ்ந்து பரிபூரணமானவர். அவர் முதுகில் மச்சம் இருக்கும் என்று சொல்வார்கள்.

  அவரே ஒரு தடவை வந்து தன்னைப் பற்றிய தகவல்களை சொல்லி ஆச்சரியப்படுத்தினார். பவுர்ணமி தினத்தன்று சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு அன்னதானம் செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படியே செய்தோம். அன்று முதல் அவர் எங்கள் அருகிலேயே இருப்பது போன்று உணருகிறோம். இன்றும் அவர் எங்களுக்கு வழிகாட்டி கொண்டு இருக்கிறார்.

  நாங்கள் அடிக்கடி திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்கு செல்வதுண்டு. அப்போது கொட்டாங்குச்சி சித்தர் அறிமுகமானார். அவரும் ஒரு தடவை இந்த ஜீவ சமாதிக்கு வந்து சென்றார். அண்ணாச்சி ஒருவர் மூலம் ஞான மாணிக்கம் சித்தர் பல்வேறு அற்புதங்கள் செய்துள்ளார். அவரை நினைத்து தவம் செய்தால் நிச்சயம் நினைத்தது நடக்கும்.

  சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகளில் மிக பழமையான ஜீவ சமாதியாக இது உள்ளது. இங்கு தவம் இருப்பவர்களுக்குத்தான் அதனுடைய அதிர்வலைகள் தெரியும். அவரை வழிபட்ட பிறகு எங்களுக்கு பரிபூரண அமைதி கிடைத்துள்ளது. இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் அந்த அமைதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

  இவ்வாறு ரத்னகுமார் கூறினார்.

  அந்த பகுதி மக்கள் ராயபுரம் பகுதியின் காவல் தெய்வமாகவே ஞான மாணிக்கம் சிவாச்சாரியார் சித்தரை பார்க்கிறார்கள். இந்த ஜீவ சமாதி தொடர்பாக மேலும் தகவல்களை ரத்னகுமாரிடம் 9841837643 மற்றும் ராஜேந்திரனிடம் 9444250736 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

  Previous Next

  نموذج الاتصال