No results found

  சமையலுக்கு வீட்டிலேயே காய்கறிகள்: பெண்களே மாடித்தோட்டம் அமையுங்கள்...!


  ஆடிப்பட்டம் தேடி விதை என்பது விவசாயத்தில் முக்கியமான பழமொழி.

  தற்போது, ஆடிப்பட்டம் தொடங்க உள்ள நிலையில் வீட்டுத் தோட்டம் அமைக்க திட்டமிடலாம். மாடித்தோட்டம் குறிப்பாக மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறிகளை பயிரிடலாம். இதற்கு செடிகளின் தன்மையை பொறுத்து சற்று பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ தொட்டிகளை தேர்வு செய்துகொள்ள வேண்டும். தற்போது, எடை குறைவாகவும், செடிகள் வளர்ப்புக்கு என்றே கெட்டியான பாலித்தீன் அல்லது தார்பாலின் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொட்டிகளில் மண் நிரப்பி காய்கறி பயிரிடுவதால் மாடித்தளத்தில் பாரம் அதிகரிக்கும். மேலும், தொட்டியில் இருந்து நீர் கசியும்போது அது தரை தளத்தை சேதப்படுத்துவதை தவிர்க்க தகுந்த பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தொட்டிகளில் செடி வளர்க்கலாம்.

  இதற்கு பதிலாக, மாடித் தோட்ட தொட்டிகளில் மண்ணுக்கு பதிலாக வளர்க்கும் ஊடகமாக மக்கிய தென்னை நார்க்கழிவு, மண் புழு உரம், தொழுஉரம், உயிர் உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு மண் கலக்கலாம். இது மிகவும் எடை குறைவாக இருப்பதுடன், வேர்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதுடன், தேவையற்ற நீரை எளிதில் வடியச் செய்யும். இந்த தொட்டிகளில் தண்ணீர் வடிவதற்கு, தொட்டியின் அடியில் இருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செடி தேர்வு மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

  குறிப்பாக தக்காளி, வெண்டை, கத்தரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகை போன்ற காய்கறிகளை வளர்க்கலாம். பூச்செடிகளில் ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் அழகு செடிகளான கோலியஸ், குளோரபைட்டம், டிரசீனா, ரேடோடென்ட்ரான், ரங்கூன் கிரீப்பர், டெசர்ட் ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம். மாடித் தோட்டத்தில் மூலிகை செடிகளையும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த வகையில், வல்லாரை, துளசி, கற்றாழை, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை போன்றவற்றை வளர்க்கலாம். பயிர் பாதுகாப்பு மாடித் தோட்ட செடிகளை பயிரிட நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது.

  குறிப்பாக, வெண்டையில் அர்கா அமனாமிகா, வர்ஷா ரகங்களை பயிரிடலாம். செடிகளில் புழுக்கள் தென்பட்டால் முடிந்தவரை கையால் பொறுக்கி எடுத்து அழிக்கவும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். வேறு வழியின்றி ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சாண நோய்கள் தென்பட்டால் தகுந்த பூஞ்சாண கொல்லி மருந்தை தெளிக்கவும். அறுவடை தோட்டத்தில் சுழற்சி முறையில் சீசனில் முதிர்ந்த காய்கறிகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

  தகவல்: அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி, மதுரை. காய்கறி பயிர் ரகங்கள் சில காய்கறிகளின் பயிர் ரகங்கள், சாகுபடி நாட்கள் குறித்த விவரம் வருமாறு:- தக்காளி பயிர் ரகங்கள்: பி.கே.எம்.-1, கோ.டி.எச்.-1, கோ.டி.எச்-.2, கோ.டி.எச்.-3, சாகுபடி காலம் 90-100 நாட்கள். கத்தரி பயிர் ரகங்கள்: பி.எல்.ஆர்.-1., பி.எல்.ஆர். (பி), கோ.பி.எச்.-1, கோ-2, எம்.டி.யு.-1, வி.எம்.ஆர்.-1. சாகுபடி காலம்: 90-100 நாட்கள் மிளகாய் பயிர் ரகங்கள்: கோ-4, பி.எல்.ஆர்.-1, கோ-1, கோ-2, பி.கே.எம்.-1, சாகுபடி காலம்: 150-180 நாட்கள் வெண்டை பயிர் ரகங்கள்: கோ.பி.எச்.எச்.-1, கோ-3, சாகுபடி காலம்: 80-90 நாட்கள் பாகற்காய்:, கோ-1., எம்.டி.யூ.-1, கோ (பி, ஜி, ஒ, எச்-1), சாகுபடி காலம்: 60-70 நாட்கள் புடலை: பி.எல்.ஆர். (எல்.ஜி.)-1, பி.கே.எம்.-1, கோ-1, கோ-2. சாகுபடி காலம்: 150-160 நாட்கள் பீர்கன்: நாட்டு ரகம் கோ-1, கோ-2. சாகுபடி காலம் 150-160 நாட்கள்.

  Previous Next

  نموذج الاتصال