No results found

  சென்னை சித்தர்கள்: வீராசாமி சுவாமிகள், திருக்கச்சூர்


  எல்லா உயிர்களிடத்திலும் சிவன் உறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் மவுனகுரு வீராசாமி சுவாமிகள் அதை தம் வாழ்வில் கடைபிடித்து நடைமுறைப்படுத்தினார். அவர் வாயில் இருந்து எப்போதும் சிவா, சிவா என்ற மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. மனிதர்களை பார்த்தாலும் சிவா என்பார். விலங்குகளை பார்த்தாலும் சிவா என்பார். பறவைகளை பார்த்தாலும் சிவா என்பார். அவ்வளவு ஏன்? செடி, கொடிகளிடம் கூட சிவா என்று அழைத்தே பேசுவார். இதனால் அவரை சிவ யோகி என்று எல்லோரும் அழைத்தனர்.

  பொதுவாகவே சித்த புருஷர்கள் இந்த மண்ணில் அவதாரம் எடுக்கும் போதே பல்வேறு வகைகளிலும் அதை சிறுவயதிலேயே பிரதிபலிக்கத் தொடங்கிவிடுவார்கள். வீராசாமி சுவாமிகளும் அப்படி தன்னை ஒரு மகான் என்பதை சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சோகண்டி என்ற ஊரில் 1928-ம் ஆண்டு அவர் பிறந்தார்.

  6 பெண் குழந்தைகளுக்கு பிறகு 7-வது மகனாக பிறந்த அவருக்கு பெற்றோர் கண்ணாயிரம் என்று பெயரிட்டனர். சிறுவயதிலேயே அவருக்குள் யாரும் உணர்த்தாமலேயே தெய்வீகம் குடிகொண்டு இருந்தது. தாய்-தந்தை இருவரும் மறைந்த நிலையில் இளமையில் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். உறவினர்களின் வீடுகளில் சாப்பிட்டுக்கொண்டே கல்வி கற்க பள்ளிக்கு சென்று வந்தார்.

  ஒருநாள் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர் அவரை கண்டித்தார். அதற்கு கண்ணாயிரம் பதில் கூறுகையில், ‘தாயில்லாத நான் ஆகாரம் பெறுவதற்கு தாமதம் ஆகிவிட்டது. அதனாலேயே இன்று பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளேன்’ என்று தூய தமிழில் பேசினார். என்றாலும் ஆசிரியர் பிரம்பை எடுத்துக்கொண்டு கையை நீட்டு என்றார்.

  கண்ணாயிரம் தனது வலது கையை காண்பித்தார். அவரது கைரேகைகளை ஆசிரியர் ஆச்சரியத்தோடு பார்த்தார். பிறகு, ‘நீ வீரமான சாமியாக வாழ்வாய். உனக்கு நிறைய பணம் வரும். ஆனால் எதுவும் உனக்கு சொந்தமாகாது. உனக்கு மனைவி வருவாள், அவளும் சொந்தமாக மாட்டாள்’ என்று கூறிவிட்டு கண்ணாயிரத்தை அடிக்காமல் விட்டு விட்டார்.

  ஏற்கனவே ஆன்மீக எண்ணங்களில் ஊறிக்கொண்டிருந்த கண்ணாயிரத்துக்கு ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஆழமாக பதிந்தன. அதன்பிறகு அவர் தன்னை வீராசாமி என்று சொல்லிக்கொண்டார். ஊர்க்காரர்களும் அவரை வீராசாமி என்று அழைத்ததால் கண்ணாயிரம் என்ற பெயர் மறைந்து வீராசாமி என்ற பெயர் நிலைத்தது.

  15 வயதிலேயே அவர் மிக உயர்ந்த ஞானத்தை பெற்றிருந்தார். குடும்ப பொறுப்பை சுமந்துகொண்டே ஆன்மீக பணிகளிலும் ஈடுபட்டார். அந்த இளம் வயதிலேயே அவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அதனால் தானோ என்னவோ பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு சோகண்டியில் இருந்து சென்னைக்கு இடம்மாறினார். அந்த கால கட்டத்தில் சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகே கவுரி மெஸ் என்ற புகழ்பெற்ற ஓட்டல் இருந்தது. அங்கு சப்ளையராக வீராசாமி வேலைக்கு சேர்ந்தார்.

  உணவு பரிமாறும் போது மிகவும் அன்போடு பரிமாறுவார். வாடிக்கையாளர்களுக்கு கேட்டு கேட்டு உணவு வகைகளை வழங்குவார். கருணை பொங்க அவர் தரும் உணவை ருசிப்பதற்காகவே நிறையபேர் ஓட்டலுக்கு வரத்தொடங்கினார்கள். அவரது சேவையை கண்ட ஓட்டல் முதலாளி வீராசாமியை மேனேஜர் அந்தஸ்துக்கு உயர்த்தினார். வெள்ளை ஜிப்பா அணிந்து தினமும் காலை காரணீஸ்வரரை வணங்கி விட்டு நெற்றி நிறைய திருநீருடன் ஓட்டல் பணிகளை தொடங்குவார். அவரது இந்த பக்தியை கண்ட ஓட்டல் முதலாளி தனக்கு பதிலாக கல்லாவில் உட்கார்ந்து பணம் வாங்கும் உரிமையையும் கொடுத்தார்.

  அந்த காலக்கட்டத்தில் திருக்கச்சூர் குழந்தைவேல் சுவாமிகள் அடிக்கடி சைதாப்பேட்டையில் உள்ள அந்த ஓட்டலுக்கு வருவது உண்டு. அவர் வீராசாமியை பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே, “ஏய் என்னப்பா இங்கு உட்கார்ந்து இருக்கிறாய். இது உன் இடம் அல்ல. இதுவா உன் உடை. நீ வேறு உடை அணிய வேண்டும். எனக்கு பிறகு நீதான் அங்கு வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் “ என்று சொல்வாராம். பிறகு எனக்கு ஏதாவது கொடு என்று கேட்டு வாங்கி விட்டுதான் குழந்தைவேல் சுவாமிகள் அங்கிருந்து செல்வாராம்.

  முதலில் இது வீராசாமிக்கு புரியாத புதிராக இருந்தது. நாளடைவில்தான் தனது பாதை வேறு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வீராசாமி உணர்ந்தார். தனது கடமைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முடித்தார். சகோதரிகளின் திருமணத்தை நடத்தி குடும்ப பொறுப்பை நிறைவேற்றினார். அவரது நேர்மையை கண்ட ஓட்டல் முதலாளி தனது உறவுக்கார பெண்ணான விருத்தாம்பாள் என்பவரை வீராசாமிக்கு திருமணம் செய்து வைத்தார். விருத்தாம்பாள் வசதியான குடும்பத்து பெண். அந்த காலத்திலேயே 8-ம் வகுப்பு வரை படித்து இருந்தார். நீண்ட கூந்தலுடன் அழகாக காட்சியளித்த அவருக்கும், வீராசாமிக்கும் பண்ருட்டி அருகில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள வள்ளலார் மடத்தில் திருமணம் நடைபெற்றது.

  மனைவி விருத்தாம்பாளுடன் சோகண்டியில் சிறிதுநாட்கள் தான் வீராசாமி வசித்தார். அவருக்கு ஜோதி ஒன்று தன்னை அழைப்பது போன்று தோன்றியது. அந்த ஜோதி திருக்கச்சூர் மலையில் இருந்து புறப்பட்டு வருவது போன்று உணர்ந்தார். எனவே இல்லற வாழ்வை துறந்துவிட தீர்மானித்தார். தனது மனைவியை அழைத்துக்கொண்டு மேல் பட்டாம்பாக்கத்துக்கு சென்றார். விருத்தம்மாளை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே துறவறத்தை மேற்கொண்டார்.

  ஒவ்வொரு கோவிலாக செல்லத்தொடங்கினார். சில ஆலயங்களில் தியானம், தவத்தில் மூழ்கினார். கோவில் கோவிலாக சென்றவர் அப்படியே காசி வரை சென்றுவிட்டார். காசியில் சுமார் 20 ஆண்டுகள் இருந்தார். அங்கு தினமும் தியானம், தவம், வழிபாடு என்று அவரது வாழ்க்கையே மாறியது. காசியில் இருந்த 20 வருட வாழ்க்கை அவரை ஒட்டு மொத்தமாக மாற்றியது. முழுமையான ஆத்ம ஞானத்தை அவர் அங்கு பெற்றார்.

  அவர் 3 விதமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இருந்தார். 1. சமுதாய உணர்வுடன் இருப்பது. 2. குடும்ப உணர்வுடன் வாழ்வது. 3. இறை உணர்வை மேம்படுத்துவது. இந்த மூன்று விஷயங்களிலும் ஒவ்வொருவருக்கும் சம நிலையில் செயலாற்றும் தன்மை இருக்க வேண்டும் என்பதை வீராசாமி சுவாமிகள் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி தனது வாழ்நாள் கொள்கை கோட்பாடாகவும் இந்த மூன்றையும் வீராசாமி சுவாமிகள் கடைப்பிடித்தார்.

  ஒரு கால கட்டத்தில் காசியில் இருந்து தென்னகம் நோக்கி புறப்பட்டு வந்தார். ஒவ்வொரு ஆலயமாக வந்த அவர் மேல்மருவத்தூர் அருகே நடுபழனி ஆலயத்தில் தங்கினார். அங்கு எல்லப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. அங்கு தவம், தியானத்தில் வீராசாமி சுவாமிகள் மூழ்கினார். அப்போது அவருக்கு திருக்கச்சூரில் தனக்கு இறைவன் சேவையாற்றும் பணியை கொடுத்திருப்பதை உணர்ந்தார்.

  1980-ம் ஆண்டு அவர் திருக்கச்சூருக்கு வந்தார். அந்த சமயத்தில் குழந்தைவேல் சுவாமிகளின் ஜீவ சமாதி பராமரிப்பு குறைவாக இருந்தது. திருக்கச்சூர் மலையில் உள்ள இருள்நீக்கி அம்மை உடனான மருந்தீஸ்வரர் ஆலய பணிகளும் நிறைய செய்ய வேண்டி இருந்தது. முதலில் இந்த 2 பணிகளையும் வீராசாமி சுவாமிகள் தீவிரமாக செய்தார்.

  மருந்தீஸ்வரர் ஆலயத்தில் மருந்தீஸ்வரர், இருள்நீக்கி அம்மை, நவக்கிரகங்கள் சன்னதிகளில் 3 விமானங்களை கட்டி கும்பாபிஷேகத்தை நடத்தினார். 1988-ம் ஆண்டு குழந்தைவேல் சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயத்தில் கருவறை உருவாக்கி தினசரி வழிபாட்டுக்கு வழிவகை செய்தார். ஜீவ சமாதிகளில் உறைந்திருக்கும் குருவை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சாதாரண மக்களுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

  அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருக்கச்சூர் மலையடிவார வீடுகளில் கதவை தட்டி குழந்தைகளை எழுப்புவார். “அங்கு ஈஸ்வரன் அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்” என்று குழந்தைகள் மத்தியில் ஆன்மிக உணர்வை தட்டி விட்டார். இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு இறைபணியாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் மருந்தீஸ்வரர் ஆலய பணிகள் மேம்பட்டன.

  எல்லா உயிர் இடத்திலும் சிவனை கண்ட வீராசாமி சுவாமிகள் “சிவா” என்று உச்சரித்து எதை சொன்னாலும் அவை அப்படியே நடந்தன. யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை பார்த்து, “ஏன் சிவா தொல்லை கொடுக்கிறாய். விலகி போ” என்பார். இந்த ஒரு சொல்லில் நோய் குணமானது. நவக்கிரக தோஷங்களையும் கூட அவர் “சிவா... சிவா...” என்று சொல்லியே விரட்டினார்.

  அவரது இந்த அபூர்வ சக்தியை உணர்ந்த மக்கள் தினமும் அவரை தேடி வந்தனர். ஆனால் வீராசாமி சுவாமிகள் திருநீறு, எலுமிச்சை பழம் கேட்டால் மட்டும்தான் கொடுப்பார். மற்றபடி சிவா என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்புவார். அனைத்தும் நன்மையாகவே முடியும். ஆழ்ந்த பக்தி உள்ளவர்களிடம் மருந்தீஸ்வரர் முன்பு அமர்ந்து தியானம் செய்யுங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகும் என்பார். அவர் சொன்னது போலவே எல்லாம் நடந்தது.

  அவர் ஒருவரை பார்த்து சிவா என்று உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிடைத்தது. திருமண தடைகள் நீங்கின. நிறைய பேர் அந்த ஒரு வார்த்தை மூலம் வீடுகள் கூட கட்டி உயர்ந்த நிலைக்கு சென்று உள்ளனர். தினசரி வாழ்க்கையில் அதிகளவு மூலிகைகளை பயன்படுத்த வேண்டும் என்று மக்களிடம் வீராசாமி சுவாமிகள் விழிப்புணர்வை உருவாக்கினார்.

  சித்தர்களை எப்படி வழிபட வேண்டும்? ஒரு செயலை தொடங்கும்போது சிவா என்று எப்படி தொடங்க வேண்டும்? என்பதுபோன்றவற்றுக்கு எல்லாம் அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். ஏராளமானோர் மனதில் ஆன்மீக விதை விதைத்து ஆன்ம ஞானத்தை உருவாக்கி இருக்கிறார். மிக சிறந்த சித்தபுருஷராக உலாவிய இந்த மகான் பலரது வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களை எல்லாம் நிகழ்த்தி உள்ளார்.

  ஆன்மீகத்தில் ஒவ்வொருவரும் மூழ்க வேண்டும் என்பதற்காகவே திருக்கச்சூரில் பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை சோமவார படிஉற்சவ விழா ஆகியவற்றை உருவாக்கி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினார். அவர் உருவாக்கிய இந்த எழுச்சிதான் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை திருக்கச்சூர் மலை நோக்கி காந்தமாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

  திருக்கச்சூர் மலை பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் அற்புத ஆற்றல் கொண்டது. தீராத நோயும் இந்த தலத்துக்கு வந்தால் தீரும். இங்கு இரவு தங்கினால் சித்தர்களின் அருள்அலைகளை உணர முடியும். இதை கருத்தில் கொண்டே பவுர்ணமி இரவுகளில் இங்கு தங்கும் நடைமுறையை வீராசாமி சுவாமிகள் கொண்டு வந்தார்.

  இந்த மகான் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி பரிபூரணம் ஆனார். அவரது குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பரணி நட்சத்திர தினத்தன்று நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற 28-ந்தேதி வீராசாமி சுவாமிகளின் 24-வது குருபூஜை நடைபெற உள்ளது.

  Previous Next

  نموذج الاتصال