No results found

  சென்னை சித்தர்கள்: தொழுவூர் வேலாயுதம்-திருவொற்றியூர்


  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் எதிரொலிக்க செய்த மாபெரும் மகான் திருவருட்பிரகாச வள்ளலார். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற ஜீவ காருண்யத்தை நம் ஒவ்வொருவரது மனதிலும் பதித்த இவர் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கி தனி கோட்பாடுகளை கடைபிடிக்க செய்துள்ளார்.

  வடலூரில் அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது. கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொள்ளவேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்திக் கொண்டு இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. இந்த சமயத்தில் அவரது ஆன்மீக சேவைகளை நினைத்து பார்க்க வேண்டும்.

  சிறு குழந்தையாக இருந்தபோதே சிதம்பரத்தில் அம்பல காட்சியை கண்ட சிறப்பு இவருக்கு உண்டு. ஓதாமல் அனைத்தையும் உணர்ந்த மிகப்பெரிய மகான் இவர். சென்னையில் அவர் வாழ்ந்தபோது விளக்கை ஏற்றி அறையில் இருந்த கண்ணாடிக்கு கற்பூரம் காட்டியபோது முருகப் பெருமானே காட்சியளித்தார்.

  திருவொற்றியூரில் அவர் வாழ்ந்தபோது தியாகராஜ பெருமானும், வடிவுடையம்மனும் தேடி வந்து இவருக்கு உணவு வழங்கி உள்ளனர். இப்படி இவரது சித்தஞான சிறப்புகளையும், மகிமைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். இவரிடம் 3 பேர் முதன்மையான மாணவர்களாகவும், சீடர்களாகவும் திகழ்ந்தனர்.

  அவர்களில் தொழுவூர் வேலாயுதம் முதலியார் தனித்துவம் கொண்டவர். ஏற்கனவே இவர் தமிழில் மிகுந்த புலமை பெற்று இருந்தார். இவர் ஒரு தடவை வள்ளலாரை பரிசோதிக்க முடிவு செய்தார். இதற்காக சங்ககால புலவர்கள் எழுதியது போல சில பாடல்களை எழுதினார்.

  அந்த பாடல்கள் மிகக் கடினமான நடைமுறையில் எழுதப்பட்டு இருந்தது. குறிப்பாக பல்வேறு அர்த்தங்களை சொல்லும் சிலேடைப் பாடல்களாக அந்த பாடல்களை அவர் எழுதியிருந்தார். அவ்வளவு எளிதில் அந்த பாடல்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்றி இருந்தார்.

  ஒருநாள் அந்த பாடல்களை அவர் திருவருட் பிரகாச வள்ளலாருக்கு அனுப்பி வைத்தார். இந்த பாடல்கள் எல்லாம் சங்க காலத்து புலவர்கள் பாடியது என்று சொல்லி ஓலைச் சுவடிகளை கொடுக்க வைத்தார். அந்த ஓலைச் சுவடிகளை வாங்கிய வள்ளலார் அதில் எழுதப்பட்டு இருந்த பாடல்களை பொறுமையாக வாசித்தார்.

  பிறகு அவர், 'இவை யார் எழுதியது? நிச்சயமாக சங்க காலத்து புலவர்கள் பாடிய பாடல்கள் அல்ல இவை. பொருள் இலக்கணம் தெரியாத ஏதோ ஒரு கற்றுக்குட்டி இந்த பாடல்களை எழுதி உள்ளது' என்றார். இதைக் கேட்டதும் தொழுவூர் வேலாயுதம் முதலியார் ஆடிப் போய் விட்டார்.

  வள்ளல் பெருமானின் அருமை, பெருமைகளையும், சிறப்புகளையும் இந்த ஒரு சம்பவத்திலேயே அவர் உணர்ந்து கொண்டார். அன்றே அவர் வள்ளலாரின் சீடராக மாறினார். அவரது குரு பக்தி அவரை மேன்மைப் படுத்தியது. இதனால் வள்ளலாரின் மாணாக்கர்களில் முதன்மையான மாணாக்கராக தொழுவூர் வேலாயுதம் முதலியார் திகழ்ந்தார்.

  செங்கல்பட்டு மாவட்டம், ஈக்காடு கோட்டம், சிறுகடல் என்ற ஊர் அருகே இருக்கும் தொழுவூரில் 1832-ம் ஆண்டு வேலாயுதம் முதலியார் பிறந்தார். இவரது பெற்றோர் செங்கல்வராய முதலியார்- ஏலவார் குழலி. படித்து முடித்த பின்பு சிறிது காலம் இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார்.

  வள்ளலாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அவரது அணுக்க தொண்டராக மாறிப் போனார். திருமணம் ஆனபிறகும்கூட அவர் வள்ளலாருக்கு செய்யும் சேவையை குறைத்துக் கொள்ளவில்லை. அந்த சேைவக்காகவே அவர் மனைவி குழந்தையுடன் வடலூரில் குடியேறினார்.

  வள்ளலார் வடலூரில் இருந்து சென்னைக்கு வந்து திருவொற்றியூர் பகுதியில் இருந்தபோது அவருடன் வேலாயுதம் முதலியாரும் சென்னைக்கு வந்துவிட்டார். வள்ளலாரின் பாடல்களை 6 திருமுறைகளாக தொகுத்து திருவருட்பா என்று பெயர் சூட்டியது இவர்தான்.

  திருவருட்பாவை அச்சிட்டு வெளியிடும் முயற்சியை 1860-ம் ஆண்டே வேலாயுதம் முதலியார் தொடங்கிவிட்டார். அவரது அயராத உழைப்பின் காரணமாக திருவருட்பாவின் 4 திருமுறைகள் 1867-ம் ஆண்டு வெளியானது. சோமசுந்தரம் செட்டியார் என்பவர் அளித்த பொருள் உதவியால் திருவருட்பா புத்தகமாக மலர்ந்தது.

  திருவருட்பா நூலின் முகப்பில் ராமலிங்கம் பிள்ளை என்றே தனது பெயரை குறிப்பிட வேண்டும் என்று வள்ளலார் கண்டிப்புடன் நிபந்தனை விதித்திருந்தார். ஆனால் அதை வேலாயுதம் முதலியார் ஏற்கவில்லை. அட்டையில் ராமலிங்க சுவாமிகள் என்றே அச்சிட வைத்தார்.

  மேலும் ஆசிரியர் என்ற இடத்தில் திருவருட் பிரகாச வள்ளலார் என்று குறிப்பிட்டு இருந்தார். அன்று முதல் ராமலிங்க சுவாமிகளின் பெயர் வள்ளலார் என்று மாறியது. எனவே வள்ளலார் என்ற பெயரை வழக்கத்துக்கு கொண்டுவந்த பெருமை தொழுவூர் வேலாயுதம் முதலியாருக்கே சேரும். முதலில் இதைக் கண்டு கோபம் அடைந்த வள்ளலார், பிறகு சமரசமாகி அதை ஏற்றுக்கொண்டார்.

  திருவருட்பாவின் முதல் 4 திருமுறைகளும் வெளிவந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு 5-ம் திருமுறை 1880-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 6-வது திருமுறையை வெளியிட ஏற்பாடு நடந்த நிலையில் வள்ளலார் மறைந்ததால் அதன் பிறகு வேலாயுதம் முதலியாரும் எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.

  திருவருட்பா நூலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்தார். இதனால் அந்த கால கட்டத்தில் அருட்பா, மருட்பா என்று மிகப்பெரிய விவாதம் நடந்தது. தொழுவூர் வேலாயுதம் முதலியார் திருவருட்பாவை மேன்மைபடுத்துவதற்காக வள்ளலார் தரப்பில் நின்று வாதிட்டார். திருவருட்பாவுக்கு ஆதரவான அனைவரையும் ஒருங்கிணைத்த சிறப்பும் தொழுவூர் வேலாயுதம் முதலியாருக்கு உண்டு.

  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டியம், இந்துஸ்தானி மற்றும் வடமொழியில் புலமை பெற்றிருந்தார். வள்ளலாரின் உத்தரவை ஏற்று முதன் முதலில் திருக்குறள் வகுப்பு நடத்தியது இவர்தான்.

  இவர் ஆசார காண்டம், சந்திர விஜய வசனம், மார்க்கண்டேயபுராண வசனம், பெரியபுராண வசனம், வேளாண் மரபியல், திருவெண்காட்டடிகள் வரலாறு, விநாயகர் சதுர்த்தி விரதம், போசராசன் சரிதம், மகாவீர் சரித்திரம் ஆகிய வசன நூல்களை எழுதியுள்ளார். மேலும் திருவருட் பிரகாசர் சந்நிதிமுறை, திருப்பாதப் புகழ்ச்சிமாலை, சித்திரயமக அந்தாதி, திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகை நான்மணி மாலை, திருத்தணிகை மும்மணிக் கோவை, திருப்போரூர் கவி விண்ணப்பம், மகிழ்மாக்கலம்பகம், வடிவுடையம்மன் சவுந்தரியாட்டகம், சிவஞான பாலய தேசிகர் மும்மணிக்கோவை, நெஞ்சராற்றுப்படை, தாதகுருநாதர் கலிமாலை ஆகிய செய்யுள் நூல்களையும் எழுதியுள்ளார்.

  வள்ளலார் எத்தகைய ஆன்மீக சேவை, சமுதாய சேவை செய்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினாரோ அவை அனைத்தையும் வேலாயுதம் முதலியார் உணர்ந்திருந்தார். அதனால்தான் வள்ளலார் போன்று அவரும் சக்தி பெற்ற மகானாக உலாவர முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் வள்ளலாரின் நிழலாகவே வாழ்ந்த பெருமை வேலாயுதம் முதலியாருக்கு உண்டு.

  வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ சித்தாடல்களை செய்துள்ளார். ஆனால் அவை மற்றவர்களை கவருவதற்காக செய்தவை அல்ல. ஒரு தடவை வயதான ஒரு பெரியவர் விரும்பி கேட்டுக் கொண்டதால் அவரது வயதுக்கு மதிப்பு கொடுத்து, அவரது கை நிறைய மண்ணை எடுக்க சொன்னார். அந்த முதியவரும் மண்ணை எடுத்து கை விரல்களால் மூடிக் கொண்டார். கையை திறக்கும்படி வள்ளலார் சொன்னபோது திறந்த கைக்குள் சிறு சிறு லிங்கங்கள் ஏராளமாக இருப்பது கண்டு மெய் சிலிர்த்தார்.

  இதேபோன்று அற்புதங்கள் செய்யும் ஆற்றல் தொழுவூர் வேலாயுதம் முதலியாரிடமும் இருந்தது. ஆனால் அவர் தேவையின்றி எதையும் செய்து கொண்டதில்லை. இறுதி காலத்தில் திருவொற்றியூரில் வாழ்ந்த அவர் 1889-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21- ந் தேதி பரிபூரணம் அடைந்தார். அவரை திருவொற்றியூரிலேயே ஜீவசமாதி செய்தனர்.

  இன்றும் வேலாயுதம் முதலியாரின் ஜீவ சமாதி மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூரில் ஈசானமூர்த்தி தெருவில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. 134 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜீவ சமாதி என்பதால் தெருவில் இருந்து பல அடி ஆழத்தில் அந்த ஜீவ சமாதி காணப்படுகிறது.

  மிகச்சிறிய இடத்துக்குள் குறுகிவிட்ட அந்த ஜீவசமாதி கருவறையில் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எதிரே நந்தி காணப்படுகிறது. அந்த நந்தி சிலை அமைந்துள்ள இடம் அருகே குப்புசாமி சுவாமிகளுக்கும், ஆறுமுகம் சுவாமிகளுக்கும் தனித்தனியாக ஜீவசமாதிகள் உள்ளன.

  பிரகாரம் கூட இல்லாமல் மிகச்சிறிய இடத்தில் 3 சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு 3 பேர் அமர்ந்து தியானம் செய்யும் அளவுக்குத்தான் இட வசதியே இருக்கிறது. ஆனால் அங்கு சென்று அமர்ந்துவிட்டால் உலகமே மறந்து போகும் வகையில் அமைதி வந்து உட்கார்ந்து கொள்கிறது.

  Previous Next

  نموذج الاتصال