No results found

  அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு


  அங்காள பரமேஸ்வரி அம்மன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியிலிருந்து வடப் புறம் 20 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மலையனூரில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். அவள் இந்த தலத்துக்கு வந்தது எப்படி தெரியுமா?

  சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வந்தார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார்.

  முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என நகைத்தார் பிரம்மா.

  அம்பிகைக்கு கோபம் வந்தது. சிவ பெருமானிடம் முறையிட்டாள் அன்னை. “ஓ ஐந்து தலை இருப்பதால்தான் அவருக்கு ஆணவமா?” என்ற பரமன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி வீசினார்.

  தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி நீ அரண்மனையில் வாழ்ந்தாய். இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.” என்று சபித்தாள்.

  சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது.

  அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள். இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ ஏய் பெண்ணே இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான்.

  “மகனே இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா. நான் இங்குதான் தவம் செய்வேன்.” என்று சொன்னாள் பராசக்தி.

  அதற்கு அந்த காவலன், “ஏதோ உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். அதான் பாவம் இங்கு வந்து மாட்டிக் கொண்டாய்.” என்றான். உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள்.

  அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான்.

  நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான்.

  புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவில்லை அரசர். இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் பூந்தோட்டத்தில் இருந்த புற்றை உடைக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான்.

  புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது.

  இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். இதுகெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன், அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான்.

  உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது. கை வேலை செய்யவில்லை. இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான். தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான். தான் இங்கே இருப்பதை உலகிற்கு தெரியப்படுத்த மீனவனையும் அரசனையும் கருவியாக பயன்படுத்தினாள் அன்னை அங்காளபரமேஸ்வரி.

  அம்மன் அரசனை மன்னித்தாள். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன். சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள்.

  அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள். உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும்.

  இந்த அம்மனின் புற்று மண்ணை 48நாள் நெற்றியில் இட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். அன்னை அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள்.

  Previous Next

  نموذج الاتصال