No results found

  வங்கக் கரையோரம் வரம் தரும் அஷ்டலட்சுமி திருக்கோவில்


  சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வங்கக் கடலோரம் அமைந்திருக்கிறது அஷ்டலட்சுமி திருக்கோவில். மும்பை நகரில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி தாயார் ஆலயத்தைப் போலவே, சென்னையில் ஓர் ஆலயம் அமைய வேண்டுமென்று காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தின் பேரில் 1974-ம் ஆண்டு ஆலயப் பணிகள் தொடங்கப்பட்டு 1976-ல் நிறைவு பெற்றது.

  இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தரைத்தளம் சக்கரமாகவும், மொத்த அமைப்பும் மேருவாகவும், இறை தரிசனத்திற்காக மேல் பகுதிக்குச் சென்று கீழே இறங்கி வரும் பாதை ஓம் வடிவிலும் இருப்பதைக் காணலாம். கருவறையின் முன்புறம் இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் உள்ளது. மகாலட்சுமி சன்னிதியை வணங்கி விட்டு வரும் பொழுது, 18 படிகளை காணலாம். இந்த படிகள் 18 தத்துவங்களின் உருவாய் அமைக்கப்பட்டுள்ளன. சிற்ப ஆகம விதிப்படி படிகள் குறுகலாக 28 அங்குல அளவில் கட்டப்பட்டுள்ளன.

  இந்த ஆலயத்தை சிலர் ‘ஓம்காரத் தலம்’ என்கின்றனர். வற்றாத நீர்நிலைகள் உள்ள இடத்திலோ, ஆநிரைக் கூட்டங்கள் வாழும் இடத்திலோ, எந்நேரமும் வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இடத்திலோ, ‘ஓம்’ என்ற பிரணவ ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற இடத்திலோ ஆலயம் அமைப்பது சிறப்பானது என ஆகமங்களும், புராணங்களும் கூறுகின்றன. அதன்படி ‘ஓம்’ என்ற பிரண ஒலியை ஏற்படுத்தும் வங்கக் கடற்கரையோரம் இந்த ஆலயம் அமைந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

  மூலவர் சன்னிதியான மகாலட்சுமியின் கருவறை முற்றிலும் கருங்கல்லினால் ஆன கர்ப்பக் கிரகம் ஆகும். இங்கு மகாலட்சுமி தாயார், பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். இரண்டு திருக்கரங்களும் அபய மற்றும் வரத முத்திரையை காட்டியபடி அருள்கிறார். இந்த ஆலயத்தில் மகாலட்சுமி தாயார் தான் முதன்மையானவர் என்றாலும், உற்சவ மூர்த்தியாக மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவாக திருமணக் கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரிய அம்சமாகும்.

  ஆலயத்தில் தசாவதார பெருமாள், கமல விநாயகர், குருவாயூரப்பன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், தன்வந்திரி பகவான், சங்கநிதி, பத்மநிதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

  திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள், லட்சுமி சீனிவாசருக்குத் திருக்கல்யாண உற்சவம் பிரார்த்தனை நடத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும். அஷ்ட லட்சுமிகளும் இந்த ஆலயத்தில் இருப்பதால், குழந்தை பாக் கியம், செல்வ வளம், கல்வி மேன்மை, மன தைரியம், உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம்.

  இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

  இந்த ஆலயத்தைச் சென்றடைய சென்னை கோயம்பேடு, சென்னை சென்ரல் பஸ் நிலையங் களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

  ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமிகள் :

  இந்த ஆலயத்தில் அனைத்து ஐஸ்வரியங்களையும் அருளும் அஷ்டலட்சுமிகளின் சன்னிதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.

  ஆதி லட்சுமி: திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய முதல் லட்சுமியே ‘ஆதி லட்சுமி’ ஆவார். ஆலயத்தின் தரைத்தளத்தில் தெற்கு முகமாக இந்த ஆதி லட்சுமி அருள்புரிகிறார். அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்ட படியும் இருக்கிறார். தொங்க விட்ட பாதத்தின் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்களுடன் காட்சி தருகின்றார்.

  தான்ய லட்சுமி: வளமான தானிய வகைகளை வழங்குபவள் ‘தான்ய லட்சுமி’ ஆவார். தரைத்தளத்தில் மேற்கு நோக்கியபடி இந்த சன்னிதி அமைந்துள்ளது. அமர்ந்த வண்ணம் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டும், யானையை பீடமாகக் கொண்டு அமர்ந்திருக்கிறார் இந்த அன்னை. ஆறு திருக் கரங்களைக் கொண்ட தான்ய லட்சுமியின் வலது கரத்தில் தானிய நெற்கதிர், அபய ஹஸ்தம், அம்பும், இடது கரத்தில் வில், கரும்பு, வரத ஹஸ்தம் ஆகியவை இருக்கிறது.

  தைரிய லட்சுமி: மனதிற்கு தைரியத்தை தருபவள் ‘தைரிய லட்சுமி’. இவர் தரைத்தளத்தில் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தாமரைப் பூவின் மீது அமர்ந்து, இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டபடியும் இருக்கிறார். உயர் கிரீடத்தை அணிந்திருக் கும் இந்த தேவிக்கு எட்டு திருக்கரங்கள். வலது கரத்தில் சூலம், அபய ஹஸ்தம், அம்பு, சக்கரம் ஏந்தியும், இடது கரத்தில் வில், கபாலம், வரத ஹஸ்தம், சங்கு  ஏந்தியும் காட்சி தருகிறார்.

  சந்தான லட்சுமி: எல்லா செல்வத்தையும் விட சிறந்த செல்வமான குழந்தை செல்வத்தை அளிப்பவள். இவர் முதல் தளத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார். அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்ட படியும், சடையுடன் கிரீடத்தை அணிந்தபடி அருள்புரிகிறார். இந்த தேவி தன்னுடைய நான்கு திருக்கரங்களில் வலது கரத்தில் கத்தி, அபய ஹஸ்தம் தாங்கியும், இடது கரத்தில் கேடயம், வரத ஹஸ்தம் தாங்கியும் அருள்கிறாள். பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசிக் கொண்டும், விளக்கினைக் கையில் ஏந்திக் கொண்டும் நின்றிருக்கிறார்கள்.

  விஜய லட்சுமி: வெற்றியை அருள் பவள் ‘விஜய லட்சுமி’. இவர் முதல் தளத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார். அன்னப் பறவையின் மீது அமர்ந்தபடி இடது காலை மடித்துக் கொண்டும், வலது காலை கீழே தொங்கும் படியாகவும் வைத்திருக்கிறார். எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தரும் இந்த தேவியை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

  வித்யா லட்சுமி: எல்லா செல்வத்தையும் விட முதன்மையான செல்வமான கல்விச் செல்வத்தை அளிப்பவள். இவர் முதல் தளத்தில் வடக்கு நோக்கி  வீற்றிருக்கிறார். இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டபடியும் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறார். நான்கு திருக்கரங் களில் வலது புறம் சங்கு, அபய ஹஸ்தமும், இடது கரத்தில் பத்ம, வரத ஹஸ்தமும் தாங்கியிருக்கிறார்.

  கஜ  லட்சுமி: அனைத்து ஐஸ்வரியங் களையும் அளிப்பது  கஜ லட்சுமியே. இவர் ஆலயத்தின் முதல் தளத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். பத்மாசனக் கோலத்தில் தாமரை மலரின் மீது, இரு கரங்களிலும் தாமரை மலரைத் தரித்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் ஒரே கல்லினாலான இரண்டு யானைகள் தும்பிக்கையில் கலசம் ஏந்தி வாழ்த்தும் தொனியில் அமைந்துள்ளன. கஜ லட்சுமியை ராஜ லட்சுமி, ஐஸ்வரிய லட்சுமி என்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

  தன லட்சுமி: தனத்திற்கு அதிபதியானவள் ‘தன லட்சுமி’. இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் இந்த தேவி வீற்றிருக்கிறார். அமர்ந்த வண்ணம் இடது காலை மடித்துக் கொண்டும், வலது காலை கீழே தொங்கும் படியாகவும் அருள்கிறார். ஆறு திருக்கரங்களை கொண்டவராக திகழ்கிறார் இந்த தேவி. தனலட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் தாராளமாகவே குவியும்.

  Previous Next

  نموذج الاتصال