No results found

  ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தீர்க்கும் பரிகாரங்கள்...


  மனிதனுக்கு பொருள் தேடும் விஷயத்திற்கு உதவியாகவும் ஆபத்து காலத்தை அறிய உதவும் கலங்கரை விளக்கமாகவும் சத்ருகளிடம் இருந்து வெற்றியடைய விரும்பும் சமயங்களில் ஒரு நல்ல மதிநுட்ப மந்திரியாகவும் ஜோதிடம் திகழ்கிறது. அதற்கு ஜாதகம் மிகவும் அவசியம். சுய ஜாதகம் இருப்பவர்கள் ஜாதகத்தின் மூலம் தீர்வை அடைகிறார்கள். ஆனால் ஜாதகம் இல்லாத பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை ஜோதிடத்தின் மூலம் தங்கள் வினைகளில் இருந்து விடுபட விரும்புகிறார்கள்.

  ஒருவருக்கு பிறந்த நேரம் மற்றும் பிறந்த நாள் போன்றவற்றை சரியாக குறித்து வைக்காமல் விட்டுவிடுவார்கள் அல்லது தவற விடுவார்கள். இது போல் குறிப்புகள் எதுவும் சரியாக இல்லை என்றால் அவர்களுக்கு ஜாதகம் கணிப்பது கடினம்.

  ஜாதகம் துல்லியமாக கணிக்க முடியாவிட்டால் பலன்களும் சரியாக வராது என்பது அனைவரும் அறிந்ததே.

  ஒரு சிலருக்கு பிறந்தநாள் தெளிவாக தெரியும் பிறந்த இடம் எளிமையாக தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் பிறந்த நேரத்தை துல்லியமாக சொல்ல தெரியாது. தோராயமாக சொன்னால் அதனுடைய ஜாதக கணிதம் தவறாகப் போவதற்கும் வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு ஜோதிடம் சொல்வதற்கும் சுபிட்சம் பெறுவதற்கும் பல்வேறு ஜோதிட முறைகள் இருந்தால் கூட நஷ்ட ஜாதகம் கணித்தல் அல்லது பிரசன்னத்தின் மூலம் நல்ல மாற்றம் மற்றும் திருப்புமுனையை வழங்க முடியும்.

  பிரசன்னத்தை அடிப்படையாக கொண்ட நஷ்ட ஜாதக முறை பழமையானது. தற்போது வெகு சிலரே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒருவர் ஜோதிடரை சந்திக்க வந்த நேரத்தை கொண்டு கணக்கிடப்படும் பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் ஒருவருடைய பிறந்த குறிப்புகள் துல்லியமாக இல்லாத பட்சத்தில் பலன்களை தெளிவாக கணித்துவிடலாம்.

  இதில் பல பிரசன்ன ஜோதிட முறைகள் இருந்தாலும் ஜாமக்கோள் பிரசன்னம், தாம்பூல பிரசன்னம் மற்றும் சோழி பிரசன்னத்தின் மூலம் நிகழ்வில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியும். பிறந்த ஜாதகம் இல்லாமல் குறிக்கப்படும் இந்த பிரசன்ன குறிப்புகள் மிகத் தெளிவான பதிலைச் சொல்லும்.

  நேரமின்மை, பயண தூரம், பொருளாதார குற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் ஜாதகம் இல்லாத பலர் தொடர் மன வேதனையை சந்தித்து வருகிறார்கள். இது போன்ற நடை முறை சிக்கல்களை தீர்க்க சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

  மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார குற்றம் நீங்கும்.

  பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற்றதால் மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

  கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நல்ல மாற்றம் தெரியும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டு பூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

  சகல கிரக பாதிப்பு நீங்க பிரதோஷ வழிபாடு சிறப்பானது. குறிப்பாக சனி பிரதோஷம் சிறப்பு. சொத்து அமையாதவர்கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாதவர்கள், வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாக இருப்பது , மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தால் சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.

  வீண் விரயத்தை குறைத்து சேமிப்பை உயர்த்த தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரதோச காலத்தில் குத்து விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

  பலதலைமுறையாக தொடரும் வம்பு வழக்குகளால் அவதிப்படுபவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தீர்ப்பு சாதகமாகும்.

  திருமணத்தடை இருப்பவர்கள், திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் குழப்பங்கள் மிகுதியாக இருப்பவர்கள், 9 ஏழை பிராமணர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தானம் தந்தால் காரிய சித்தி கிடைக்கும்.

  நிரந்தர வேலை இல்லாதவர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள் , தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.

  ஒரு ஆண்டுகளுக்குள் காணாமல் போனவர்கள், ஒரு ஆண்டுகளுக்குள் காதல் திருமணம் செய்து வீட்டிற்கு வராமல் இருக்கும் மகன், மகள் இருப்பவர்கள் , காணாமல் போன சொத்து பத்திரம் கிடைக்காதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சொத்து பத்திரம் கிடைக்கும்.

  அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் குறைவுபடுபவர்கள் தினமும் கருப்பு நாய்க்கு பிஸ்கட் தானம் தர வேண்டும். மேலும் சிவப்பு நிறக்கயிற்றில் செம்பில் ஸ்ரீ சக்ர டாலர் அணிய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் உங்களை அரவணைக்கும். தொழில் சிறப்பாக நடந்தும் லாபம் குறைவாக இருப்பவர்கள்,மூத்த சகோதரத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள்,மறுமணத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள் பவுர்ணமி திதியில் மகாலட்சுமி அஷ்டோத்திரம்,லலிதா சஹஸ்ர நாமப் பாராயணம் செய்ய சுக வாழ்வு உண்டாகும்.

  பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட வழக்கில் இருந்து பூரண விடுதலை கிடைக்கும்.

  அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும். நோய் தீரும். சாதுக்கள் உடல் ஊனமுற்றவர்கள் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, சிறப்பு தந்தை-மகன் பிரிவினை, கருத்து வேறுபாடு இருப்பவர்கள் ஆன்மீக குருமார்கள், பள்ளி கல்லுரி ஆசிரியர்கள், வயதான கோவில் அர்ச்சகர்களுக்கு உணவு, ஆடை தானம் வழங்கி நல்லாசி பெற வேண்டும்.

  வாழ்நாள் முழுவதும் மீள முடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட்டால் பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.

  முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வருடம் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி இறைவனை வழிபட்டு வரவேண்டும். பலவருடங்களாக திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சுவாசினிகளிடம் (மாதவிடாய் நின்ற சுமங்கலிகள்) நல்லாசி பெற திருமணத்தடை அகலும்.

  வருடம் ஒருமுறை கோ பூஜைசெய்து வந்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். பல வருடங்களாக விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் தம்பதிகள் அல்லது விவாகரத்து வழக்கு முடிவடையாமல் மன சஞ்சலத்தை அனுபவிப்பவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராகி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்.

  நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சினையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் தீராத நோய்,கடன்,பகை உள்ளவர்கள் சனிக்கிழமை நவதானிய அடை தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.

  பொருளாதார வளர்ச்சி பெற ஏகாதசி விரதம் அல்லது ஏகாதசி அன்று பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

  பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குல தெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.

  தொழில் கூட்டாளி மற்றும் நண்பர்களால் பிரச்சனையை அனுபவிப்பவர்கள் தினமும் சிவபுராணம் படிக்க சாதகமான செய்தி வரும்.

  அதே போல் ஒருவர் எந்த லக்ன ராசியாக இருந்தாலும் ஜாதகம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இரண்டு வகையாக மட்டுமே அமையும். ஒன்று சுகமான அமைப்பு மற்றொன்று இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று தடுமாற்றம் நிறைந்த வாழ்க்கை. சுகமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கும்.

  எதுவும் இல்லாதவனுக்கும் துன்பம் உண்டு. இது போன்று மன அழுத்தத்துடன் உலகில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு அவரின் பிரச்சினை பெரிதாக தோன்றும். அதனால் ஜாதகம் இன்மையால் தான் துன்பம் தொடர்கிறது என்ற மன வருத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். நம்பிக்கையுடன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் முன்னேற்றம் தரும். உங்களின் சுய பிரச்சினைக்கு ஏற்ற மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.

  Previous Next

  نموذج الاتصال