No results found

  மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி மலை


  உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

  தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.

  திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

  அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

  அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

  தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

  அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.

  அத்ரி பரமேஸ்வரர், அத்ரி பரமேஸ்வரி

  சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள்.

  அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார்.

  இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தை களாக இருந்த மூன்று தெய்வங் களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப் பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.

  சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.

  குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

  பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

  இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

  மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

  அத்ரி கங்கை தீர்த்தகுளம்

  சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்:

  அத்ரி மகரிஷியின் பிரதான சீடர், கோரக்கர். சித்தர்களின் வரிசையில், பிறப்பிலேயே விசேஷத் தன்மை கொண்டவர் இவர். விபூதி என்றால் ‘சாம்பல்’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. சிவ ஞானத்துடன் பிறந்தவர் மச்சேந்திரர். இவர் கடும் தவம் செய்து சித்தரானார். மச்சமுனி என்று அழைக்கப்பட்டார்.

  மச்சமுனி ஒருநாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றார். அந்த வீட்டுப் பெண், மச்ச முனிக்கு பிச்சையிட்டாள். அப்போது அவளது முகம், அவளுக்கு ஏதோ மனக்குறை இருப்பதை உணர்த்தியது.

  அதைக் கண்ட மச்சேந்திரர், ‘உனக்கு துன்பம் யாது?’ என்று கேட்டார்.

  அதற்கு அந்தப் பெண், தனக்கு மகப்பேறு இல்லாததைக் கூறி வருந்தினாள். இரக்கம் கொண்ட மச்சேந்திரர், சிறிது திருநீற்றை அள்ளி அவளிடம் கொடுத்தார். ‘இந்த திருநீற்றை, சிவநாமம் கூறி உண்பாயானால், உனக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். அந்த பாலகனை காண நிச்சயம் ஒருநாள் வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

  மச்சமுனி சென்றதும், அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். பக்கத்து வீட்டுப்பெண்ணோ, ‘உன்னிடம் பிச்சை வாங்கி சென்றவர் மாயாவியாக இருக்கலாம். விபூதியை கொடுத்து உன்னை மயக்கி அடையலாம். எனவே அந்த விபூதியை சாப்பிடாதே’ என்று கூறினாள்.

  பயந்து போன அந்தப் பெண், மச்சமுனி கொடுத்து விட்டு சென்ற விபூதியை அடுப்பில் போட்டாள். ஆண்டுகள் சில சென்றன. திருநீறு கொடுத்த மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பெண்ணை வந்து சந்தித்தார். ‘திருநீற்றால் பிறந்த பாலகன் எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்’ என்று கேட்டார். மச்சமுனியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அந்தப் பெண், முடிவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

  பின்னர், ‘சிவ சித்தர்தானே? அடுப்பில் போட்ட சாம்பலில் இருந்தும் குழந்தையை உருவாக்கலாமே?’ என்று சந்தேகக் கண்கொண்டு கேள்வியை எழுப்பினாள்.

  அவளது கேள்வியால் கோபம் கொண்ட மச்சமுனி ‘அடுப்பு சாம்பல் எங்கே?’ என்றார்.

  ‘கோபத்தில் குப்பை மேட்டில்தான் கொட்டினேன்’ என்றாள் அந்தப் பெண்.

  உடனே மச்சேந்திரர், ‘குழந்தை உன் கருப்பைக்குள் வளர உன் கர்மா இடம் கொடுக்கவில்லை. ஆனால் கோசலையாகிய இது, அதற்கு இடம் கொடுத்து விட்டது. நான் சிவசித்தன் என்பது சத்தியமானால் இந்த கோவகம், ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல.. கோரக்கனும்கூட. கோவாகிய பசுவின் இரக்கம் இவனிடம் இருக்கப்போவது சத்தியம். கோரக்கனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்தார்.

  கோரக்கனும் அந்த குப்பை மேட்டில் கொட்டிய சாம்பலில் இருந்து வெளிவந்தார். திருநீறு கொடுத்த காலம் முதல் அப்போது வரை என்ன வளர்ச்சியோடு இருக்க வேண்டுமோ அதே வளர்ச்சியோடு இருந்தான் அந்த பாலகன். அவரே கோரக்கர்.

  மச்சமுனி, சாம்பலில் இருந்து வந்த பாலகனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் சிறுவன் கோரக்கனோ, தாயிடம் போகாமல், மச்சேந்திரநாதரை பின் தொடர்ந்தான். கோரக்கரும் பெரிய சித்தராகி குருவை மிஞ்சும் சீடராக விளங்கினார். அதன்பிறகே அவர் அத்ரி மகரிஷியை சந்தித்தார்.

  இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.

  Previous Next

  نموذج الاتصال