No results found

  ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில்


  வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்வெளி பகுதிகள். நேர்த்தியான தெருக்கள் கொண்ட இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது அந்த ஊருக்கே கிடைத்த பெருமை.

  ஒரு பிரமாண்ட அரண்மனை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அம்பாள் குழந்தை, குமரி, தாய் என மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

  தென் இந்தியாவில் முதல் விசுவரூப மூலிகை அம்பாள் இக்கோவிலில் வீற்றிருப்பது சிறப்பம்சமாகும். 9 அடி உயரத்தில் சர்வலோக மகாராணியாக ஸ்ரீமத் ஔஷத லலிதா மகா திரிபுர சுந்தரி நின்ற கோலத்தில் அங்குச, பாச, மலர், கரும்போடு அன்னை விசுவரூப தரிசனம் தருகின்றாள். முழுக்க முழுக்க மூலிகை யால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷ அம்சமாகும்.

  ஔஷத லலிதாம்பிகை யின் சன்னதி அபூர்வ அமைப்புடன் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை ஒளி வீசும் காந்த புன்னகையோடு மேகலை முதலான அணிகலன்களோடு கிழக்கு நோக்கிய திசையில் வேறு எங்கும் காண கிடைக்காத கலை அழகுடன் பக்தர்களை பரவசமூட்டி ஈர்த்து வருகிறாள்.

  இங்கு மகாராணி தர்பாரில் ஆட்சி செய்வது ேபால கம்பீரமாக அருள் கடாட்சத்துடன் விளங்குகிறாள். தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர அஸ்த்ர, சஸ்திர முறையில் அமையப் பெற்றது. இந்த திருத் தலத்துக்கு விசேஷ சக்தி கள் ஏரா ளம். பக்தர் கள் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வடிவமாக பாலாவின் மூல தேவி லலிதை இங்கு சக்தி படைத்தவளாக திகழ்கிறாள்.

  எப்பேற்பட்ட துன்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்று மனமுருகி பாலாம்பிகையை வேண்டினாலும் ஒரு மனத்தெளிவும், நேர்மறை சிந்தனையும், முகத்தில் புதுபொலிவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வாடிய பயிர்கள் எல்லாம் மழையை கண்டதும் எப்படி மலர்ச்சி அடைகிறதோ, அதே போல் வாடிய முகத்துடன் இங்கு செல்லும் பக்தர்கள் குழந்தை வடிவமாக இருக்கும் பாலாம்பிகையின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு பரவசம் அடைவதை நாம் உணரலாம்.

  கால்களில் தண்டையும், கொலுசும் அணிந்து கொண்டு சர்வாபரண அலங்காரத்துடன் விழிகளை திறந்து நம்மோடு பேசும் காந்த உணர்வுடன் ஒரு ஈர்ப்பு சக்தியாய், பொலிவுற அம்பாள் காட்சி தருகிறாள். அம்பாளை ஒரு முறை கண்குளிர பார்த்தாலே அம்பிகையின் ஸ்தோத்தி ரங்கள் நம்மை அறியாமலேயே நம் நாவில் இருந்து வெளிப்படும் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

  இது தவிர இந்த கோவிலில் காலடி எடுத்து வைத்தாலே மனசுக்குள் ஒரு இனம்புரியாத சக்தி ஊடுருவுவதை உணரலாம். அதுவும் அம்பிகையின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் எந்த பிரச்சினை என்றாலும் அதெல்லாம் நொடிப்பொழுதில் மறைந்து மனசுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்வும் கிடைப்பதாக இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

  இப்படி பல்வேறு சக்திகளை உள்ளடக்கியதாக திகழும் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி, விசுவரூப மூலிகை அம்மன் கோவிலுக்கு திருப்போரூரில் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ ஜம்புகேசுவரர் கோவில் நுழை வாயில் வழியாக செம்பாக்கம் ஊருக்குள் 0.5கி.மீ. சென்றால் பெரிய கோவில் எனும்ஜம்புகேசுவரர் கோவில் நம்மை வரவேற்கும்.

  சிவன் கோவில் மதிலை ஒட்டிய சாலையில் 200 மீட்டர் சென்றால் ஸ்ரீபாலா சமஸ்தான திருக்கோவிலை அடையலாம். இத்தலத்தை தரிசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டைமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

  ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயத்தின் அமைப்பு

  ஸ்ரீபாலா, ஸ்ரீமத் ஒளஷத லலிதாம்பிகை ஆலயம் செம்பாக்கம் ஊரின் வடகிழக்கு திசையில் கிழக்கு நோக்கியவாறு அரண்மனையைப் போன்ற முகப்புத் தோற்றம் சுதை சிற்பங்களுடன் மிகவும் கலைநயமிக்க வேலைபாடுடன் கிழக்கு திசை நுழைவு வாயில் அமைந்துள்ளது.

  குழந்தை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கீழ்சந்நிதி அமைப்பு

  கோவிவை சுற்றி உள்ள வெளிப்புற விமானங்களில் சப்தமாதாக்களின் சுதை சிற்பமும், முன்புறத்தில் ஸ்ரீபாலாம்பிகை கணபதியாக, முருகனாக, கிருஷ்ணனாக, ராமனாக, தட்சிணா மூர்த்தியாக, காளியாக, வாராகி, மாதங்கி, மீனாட்சி அகிலாண்டேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி, சாமரம் வீச ஸ்ரீலலிதாம்பிகை அழகு மிக்க சுதைசிற்ப வேலைபாடுகளுடன் கூடிய முகப்பு தோற்றத்துடனும் உள்ளாள். இருபுறமும் ஐராவதம், ஐராவனம் யானைகள் நிற்க 7 படிகளை கடந்து சென்றால் இருபுறமும் துவார சக்திகள் நின்றிருக்க ஆலயத்தின் முதல் வாயிற்நிலையை கடந்தால் பெரிய மகாமண்டபம் மிகச்சிறப்பான வர்ணவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

  மகாமண்டபத்திற்கு பிறகு ஊஞ்சல் மண்டபமும், அதற்கு மேல் கருவறையின் இருபுறமும் உத்திஷ்ட கணபதி, முருகன், கலைமகள், அலைமகள், கோஷ்டத்தில் வீற்றிருக்க அர்த்த மண்டபத்தில் மூலவர் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தையாகவும், இவளின் முன் குருமண்டல அசாத்திய ஸ்ரீ சக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபாலாவுக்கு பின்புறத்தில் 3 படிகளை கொண்ட கருவறையில் ஸ்ரீதருணீ திரிபுரசுந்தரி குமரிப்பருவத்திலும் அருள் ஆட்சி செய்கிறாள்.

  மூலவர் ஸ்ரீபாலாவின் இருபுறமும் உற்சவத்திரு மேனியாக ஸ்ரீவாராகி தேவியும், ஸ்ரீமாதங்கியும் வீற்றிருக்க ஸ்ரீபாலாம்பிகை மூல மூர்த்தியாக கீழ்கருவறையில் எழுந்தருள் பாலிக்கின்றாள்.

  தாய் ஸ்ரீமத் ஔஷத லலிதா திரிபுரசுந்தரி அன்னை மேல்தள (மாடிச்சந்நிதி) அமைப்பு

  கீழ் கருவறையின் இருபுறமும் வளர்பிறை (சுக்லபட்சம்) மற்றும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) 16 திதி நித்யா படிகளின் பக்கங்களில் யந்திரங்கள் வலது மற்றும் இடதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திதி படிகளின் மூலமாக மேல் கருவறைக்கு சென்றால் ஹயக்கிரீவர், நந்திகேஷ்வரர், மகா மண்டபத்தின் முகப்பின் மேல் பகுதியில் தேவியருடன் கணபதியும், முருகனும் வீற்றிருக்க, நடுவில் கற்பக விருட்சம் கீழ் மகா லட்சுமி, சங்க நிதி, பதும நிதியுடன் வீற்றிருக்கின்றனர். இருபுறமும் பெரிய ரூபமாக சிங்கத்தின் மீது அஷ்டபுஜ வராகியும் கிளியின் மீது அஷ்டபுஜ ராஜ மாதங்கிதேவியும் வீற்றிருக்கின்றனர்.

  மகா மண்டபத்தை சுற்றிலும் அம்பிகையை உபாசனை செய்த குருமார்கள், ஞானிகள் மற்றும் சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் 16 பேர் சூழ மூலிகை அம்பாள் நேர் எதிரில் சதுர ஆவுடையில் படிகத்தால் ஆன படிக லிங்கம் மகா காமேஸ்வரர் பிரதிஷ்டையாகி உள்ளார்.

  மேல்தள கருவறையில் கிழக்கு நோக்கிய அம்பிகையின் கருவறையின் முன் அர்த்த மண்டபத்தின் நடுவில் வெள்ளி கவசத்துடன் மகாமேரு அமைந்துள்ளது. இருபுறமும் மகாகாளியும், மகா பைரவரும் வீற்றிருக்க கருவறையில் தீப ஒளியில் நம் நேரில் நின்று பேசுவது போல் விஸ்வரூப தரிசனம் தருகிறாள் மூலிகை அம்பாள்.

  மூலஸ்தான சுவர்ண விமானம்

  ஸ்ரீசக்ர ராஜ சிற்சபா விலாச சுவர்ண விமானம் எனப்படும் துவிதள (இரண்டு அடுக்கு) விமானத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி, அஸ்வரூடா, சம்பத்கரீ தேவியர்கள் நான்கு திசையிலும் சிம்மம் சூழ்ந்திருக்க அமர்ந்துள்ளனர். அதற்கு மேல் உள்ள முதல் அடுக்கு முழுவதும் செப்பு தகடுகள் வெய்து அதற்கு தங்க முலாம் பூசி அழகுடன் அருண நிறத்துடன் பிரகாசமான தோற்றத்துடன் 3 தங்க கலசத்துடன் அமைந்துள்ளது. நாற்புறங்களிலும் பெரிய காமதேனு வாகனங்களால் சூழப்பட்டுள்ளது.

  உற்சவ திருமேனிகள்

  குருபாதுகை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ரமா வாணி சமேத ஸ்ரீமத் லலிதா மகா திரிபுர சுந்தரி, ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீபால தண்டாயுதபாணி, வேணுகோபால பெருமாள், குழந்தைவேலர், சுவர்ண பைரவர், விபூதி சித்தர், ஸ்ரீகாமேஸ்வரமூர்த்தி, ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆகிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

  செம்(பியன்)பாக்கம் தலச்சிறப்பு

  சிவன் தானே வந்துறைந்த தொண்டை நாட்டு வைப்பு தலம், வட திருவாணைக்கா என வழங்கும் செம்(பியன்)பாக்கம். சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என ஆனது. திருச்சி திருவானைக்காவிற்கு இணையான அப்பு (நீர்) தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே அமர்ந்த நாவல் (ஜம்பு) வனத்தில் உள்ள தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட் செங்கட் சோழநாயனார் மற்றும் அவரது சோழ வம்சத்தினர்கள், சித்தர்களும், ஞானிகளும், நாகர்களும், சோழ மரபினர், அகத்தியர், லோப முத்திரா தேவியுடன் வழிபட்ட தலம் இந்த நெல் விளையும் செம்பாக்கம் திருத்தலம். இத்தலத்தில் 32 விநாயகர் கோவில்கள், 32 குளங்கள் உள்ளது. இது ஞானபூமி அருள் மிகு ஸ்ரீ அழகாம்பிகை செம்புகேஸ்வர சுவாமி அருள் தரும் புண்ணிய பூமி. அது சமயக்கடவுள்கள் என மொத்தம் 42-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ள தலம்.

  மூலிகைகளால் உருவான ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன்

  சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் "வட திருவானைக்காவு" என அழைக்கப்படும் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

  இந்த திருமேனி பல மூலிகை கள், மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும், (ரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள், நவரத்தினங்கள்இடம் பெற்றுள்ளன. நமது உடம்பில் உள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டுள்ளது. வளர்பிறை காலங்களில் பலஆயிர மாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் 8 ஆண்டுகள் கடின உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, சஸ்த்திரம் என்ற முறையில் அமையப்பெற்றவள் ஆவாள். திதி நித்யா தேவதை களை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் உள்ள கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் புஷ்பபாணம், கரும்பு வில் ஏந்தி அம்பிகை மகா சௌந்தர்ய ரூபத்துடன் அருள்பா லிக்கின்றாள்.

  மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. தினசரி பாதபூஜை உண்டு. குழந்தைகள் நலன் பொருட்டு தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி சவுபாக்கியம், ஆனந்தம், ஆரோக்கியம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல், இங்கு அம்பிகை கோவில் கொண்டிருக்கும் ஆலயம் "ஸ்ரீசக்ரசபை" என்று போற்றப்படு கிறது.

  ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரிபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மும்மூர்த்தி சொரூபிணியாக திகழ்கிறாள். இந்த அம்பிகை திருமேனி 2008-ம் ஆண்டு மாசி பவுர்ணமி ஸ்ரீலலிதா ஜெயந்தி அன்று அம்பிகையின் பத்மபீடத்தில் கற்பபேழை, வலம்புரி சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு மூலிகைஅம்பாள் திருமேனி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அம்பாள் ஆஞ்ஞையாலும், ஞானாஸ்ரம ஞானிகளின் எங்கள் குருநாதர்களின் வழிகாட்டுதலாலும் மூலிகை திருமேனி பற்றிய ஆய்வுகள் செய்து சித்தர்களின் முறைப்படி குண்டமண்டலங்கள் அமைத்து வேள்விகள் செய்து வளர்பிறை காலங்களில் மட்டுமே இத்திருமேனி அமைக்கப்பட்டது. இத்தகைய பேரழகும் பெருமைக்குரிய மகாசக்தியாகஸ்ரீசக்ரராஜ சபை சந்நிதியில் 15 திதி நித்யா தேவதைகளை படியாக அமைத்து அதன் மேல்தளத்தின் (மாடியில்) கருவறையில் லலிதாம்பிகை திருமேனியை சிற்பாகம ஆய்வரும், ஸ்தபதியும் உபாசகரான சுவாமிஜீ தம் திருக்கரங்களால் அற்புதத்திருமேனி வடிவ மைக்கப்பட்டுள்ளது என்பது போற்று தலுக்கு மட்டுமில்லாமல் வியப்புக்கும் உரிய தகவலாகும்.

  இக்கோவிலில் மூலிகை அம்பாள் ஔஷதத்தால் ஆனவள். ஔஷதம் என்றால் நவபாசாணத்தில் அல்லாமல் முழுமையாக பலவகை மூலிகையினால் மட்டுமே உருவானவள். இந்த அம்பாளின் திருமேனியை வடிவமைப்பதற்கு மட்டும் 8 வருடங்கள் ஆனதாக கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த மூலிகை அம்பாளின் திருமேனிக்குள் பாணலிங்கம் வீற்றிருக்கிறார். பாண லிங்கம் என்றால் சாளக்ராமம் என்று வைஷ்ணவத்தில் அழைக் கப்படுகிறது. சைவத்தில் பாண லிங்கம் என்றழைக்கப்படுகிறது.

  பாணலிங்கத்தை பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் சிவன் அந்த விக்கிரகத்தில் வீற்றிருப்பார். ஆனால் மற்ற விக்கிரகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தால் மட்டுமே தெய்வங்கள் அதனுள் வீற்றி ருப்பார்கள். அதனால் தான் கோவில்களில் தினமும் 6 கால, 4 கால பூஜை செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு ஒவ்வொரு பூஜையை பொருத்தும் தெய்வங்களின் காந்த ஆற்றல் மாறுபடுகிறது. சூரியனிடமிருந்து காலையில் கிடைக்கும் சக்தி வேறு. 11 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 12,1 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 3 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 4 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, எல்லாம் ஒரே சக்தி கிடையாது.

  நேரத்திற்கேற்றவாறு சக்தி மாறுபடுகிறது. இந்த எல்லாக் காலத்தினுடைய சக்தியும் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கோவில்களில் அந்தந்த நேரங்களில் பூஜை செய்து அந்த சக்தியை பெறுவதற்காக 6 கால பூஜை, 4 கால பூஜை, 2 கால பூஜை என செய்யப்படு கிறது. இக்கோவிலில் காலையில் பாலாவிற்கும், மாலையில் லலிதா திரிபுர சுந்தரிக்கும் என இரண்டு வேளை தீபாராதனை காட்டி 2 கால பூஜை செய்யப்படுகிறது. காலை, மதியம், இரவு என 3 கால நைவேத்தியம் செய்யப்படுகிறது.

  லலிதா திரிபுரசுந்தரிக்குள் பானலிங்கர் வீற்றிருக்கிறார். நாம் பூஜை செய்யாவிட்டாலும் அவரே சுயம்புவாக உள்ளார். அந்த பாணலிங்கத்தை உள்ளே வைத்து மேற்புரத்தில் மூலிகையால் கட்டி சிறிது சிறிதாக ஆராய்ச்சி செய்து அம்பாளின் திருமேனியை வடிவ மைத்துள்ளனர். இக்கோவிலில் அம்பாளை 8 வருடங்களுக்கு முன்னரே பிரதிஷ்டை செய்து ஆரம்பித்து ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனியே மந்திரங்களை கூறி ஒரு நாளைக்கு ஒரு இலை அளவு கனமான மூலிகையே அம்பாளின் மீது சாத்த முடியும்.

  அம்பாளின்மீது மூலிகை சாத்தும் போது மழை பெய்தால் என்னென்ன ஆகும். மழை காலத்தில் எப்படி உள்ளது, வெயில் காலத்தில் எப்படி உள்ளது, குளிர் காலத்தில் எப்படி உள்ளது என்பதை ஆராய்ச்சி செய்து, மழைக் காலத்தில் பூஞ்சை பிடிக்கின்றதா எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்துதான் 7 முதல் 8 வருடங்கள் வரை அம்பாளின் திருமேனி உருவாக்கப்பட்டிருக்கிறது.

  மூலிகை அம்பாளுக்கு கோவி லின் தோட்டத்து புஷ்பங்களை வைத்து மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் மூலிகை அம்பாளுக்கு தனியாக 64 முழம் தனித்தரியில் புடவை நெய்து தான் சாத்த வேண்டும். அம்பாள் பக்தர்களிடம் அவளே கனவில் வந்து கேட்டுத்தான் புடவை சாத்தி கொண்டாள் என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

  அம்பாளுக்கு ஸ்ரீவிஜய உபாஸ்மியில் மூன்று மார்க்கம் உள்ளது. ஆரம்ப நிலை, இடை நிலை, உடைநிலை என மூன்று நிலை உள்ளது. ஆரம்ப நிலை என்பது பாலா உபாஸ்மி, இடை நிலை பஞ்சகஸ்த உபாஸ்மி. அவள்தான் கருணை புரியும் திரிபுர சுந்தரி என்பது. உடை நிலை என்பது மஹாஸ் உபாஸ்மி. இதன் பெயர் லலிதா திரிபுர சுந்தரி என்பது. மூன்று அம்பாளுக்கும் மூன்று மந்திரங்களால் யாகம் செய்வது, பூஜை செய்வது நடக்கின்றது.

  மூலிகை அம்பாள் சிறப்புகள்

  * இங்கு ஆண்டுதோறும் 2 முறை மூலிகை தைல காப்பு பச்சை கற்பூரத்தால் மட்டுமே ஆரத்தி நடைபெறும்.

  * மூலிகை அம்பாளுக்கு பிரதி மாதம் பவுர்ணமி மட்டும் 64 முழம் புடவை சாத்தப்படும்.

  * பிரத்யேகமாக தனியாக தறிபோட்டு இந்த அம்பாளுக்கு புடவை நெய்யப்படுகின்றது.

  * பவுர்ணமி திதியில் சர்வ ஆபரண அலங்காரம் மற்றும் 27 வகை ஆரத்திகள் நடைபெறும்.

  * விழா நாட்களை தவிர மற்ற நாட்களில் மூலிகை அம்பாள் தரிசனம் மட்டுமே உண்டு. நினைத்த நேரத்தில் ஆரத்தி இல்லை. நான்கு கால மகா ஆரத்தி தரிசனம் மட்டுமே உண்டு.

  * மூலிகையம்பாள் சந்நிதிக்கு ஆண்கள் சட்டை, பனியன் இல்லாமல் மட்டுமே தரிசிக்க இயலும். (சிறு ஆண் குழந்தை ஆனாலும் அப்படியே)

  * இந்த ஆலயத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல கட்டாயம் அனுமதியில்லை. ஆலய அலுவலகத்தில் செல்போனை கொடுத்து டோக்கன் பெற்று செல்லவும்.

  * செண்பக பூ, தாமரை மாலை, வெட்டி வேர் மாலை தவிர வெளி புஷ்பங்கள் மூலிகை அம்பாளுக்கு சாற்றப்பட மாட்டாது. மூலிகை அம்பாளை தவிர மற்ற தெய்வங்களுக்கு மாலைகள் சாற்றி வழிபடலாம்.

  திதி படி ஏறும் முறை

  திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசை திதி படிவழியே அம்பாளை பார்த்தபடி பின்னோக்கி இறங்க வேண்டும். (முடியாத முதியவர்கள் நேராக இறங்கலாம்).

  மூலிகை திருமேனியில் மும்மூர்த்தி தரிசனம்

  அம்பிகை அலங்காரத்தில் திருமலை பாலாஜியாகவும், அன்னை லலிதாவாகவும் அவளுள் மறைந்திருக்கும் சிவமாகவும் தரிசிக்கலாம். இவளை தரிசனத்தால் ஹரி, ஹரன், அம்பிகை ஆகியோரை தரிசித்த பலன்கிட்டும். இவள் சந்நிதியில் பச்சைகற்பூர ஆரத்தி மட்டுமே நடைபெறும்.

  ஸ்ரீலலிதாம்பிகையின் எளிய 25 நாமஸ்துதிகள்

  1. சிம்ஹாசநேசி 2. லலிதா 3. மஹாராக்ஞீ 4. வராங்குசா 5. சாபிநீ 6. திரிபுரா 7. சுந்தரி 8. மஹாதிரிபுரசுந்தரி 9. சக்ரநாதா 10. சம்ராக்ஞீ 11. சக்ரிணீ 12. சக்ரேஸ்வரி 13, மகாதேவி 14. காமேசி 15. பரமேஸ்வரி 16. காமராஜ பிரியா 17. காமகோடிகா 18. சக்ரவர்த்தினி 19. மகாவித்யா 20. சிவானங்க வல்லபா 21. சர்வ பாடலா 22. குலநாதா 23. ஆம்நாயநாதா 24. சர்வாம் நாய நிவாசிணீ 25. சிருங்கார நாயிகா.

  அமைவிடம்

  ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,

  திருப்போரூர் (ஓ.எம்.ஆர்)- செங்கல்பட்டு சாலை, செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம்-603 108.

  (திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)

  Previous Next

  نموذج الاتصال