No results found

    ஏகாதசி வரலாறு உணர்த்தும் உண்மை


    ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று, யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.

    யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை” என்று கூறினர்.

    தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டினார்.

    ‘துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்’ என்றார் மகாவிஷ்ணு.

    அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

    Previous Next

    نموذج الاتصال