No results found

  பஞ்ச பூதங்களும் வாழ்வியலும்


  அண்டத்திலுள்ளதே பிண்டம்

  பிண்டத்திலுள்ளதே அண்டம்

  அண்டமும் பிண்டமு மொன்றே

  அறிந்து தான் பார்க்கும் போதே.

  அண்டம் என்பது இந்த பிரபஞ்சம். பிரபஞ்சம் நீர், அக்னி, வாயு, ஆகாயம், பூமி எனும் பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்டது.

  மனித உடம்பு தான் பிண்டம் எனப்படும். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்பார்கள். அண்டம் என்பது உலகம் ,பிண்டம் என்பது நமது உடல். அதாவது இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அதே தத்துவத்தில் தான் நமது உடலும் இயங்குகிறது. நமது உடல் இயக்கத்தின்படியே இந்த உலகமும் இயங்குகிறது.

  மனிதர்களை ஆபத்து காலத்தில் காக்க உதவும் ஜோதிடம் ஒரு கண் என்றால் வாஸ்து மற்றொரு கண். வாஸ்துசாஸ்திரம் இன்று நேற்று தோன்றியதல்ல.இதிகாச காலத்திலேயே நமது முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டு வந்த கலை. குடியிருக்கும் வீடும்,தொழில் நிறுவனங்களும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு இருந்தால் ஆனந்தமான வாழ்க்கை உண்டு. வாஸ்து விதிகளுக்கு மாறாக இருப்பின் வாழ்க்கையில் சில முரண்பாடான பலன்கள் நடக்கும். முயற்சிகள் பலிதமாகாது.

  நல்ல சிந்தனைகள் தடைபடும். நிம்மதியின்மை நீடிக்கும். ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தின் படிதான் ஒருவரின் வாழ்க்கை அமையும் என்பது நியதி.ஜனன கால ஜாதகத்தின் படி வினைப்பயன் சுபத் தன்மையுடன் இருந்தால் அவருக்கு அமையும் சொத்துகள் வாஸ்துப்படி அமையும். இல்லையேல் வாஸ்து சாஸ்திரத்தின் விதிக்கு மாறான சொத்தே கிடைக்கும்.இதை வைத்து பார்க்கும் போது ஒருவரது வாழ்க்கையின் ஏற்றதாழ்வுகளுக்கு அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் தொழில் நிறுவனம் முக்கிய காரணமாகும் என்பது தெளிவாகும்.

  அண்டத்தில் உள்ளது தான் நம் பிண்டத்தில் உள்ளது.அதேபோல் வீட்டு அமைப்பும் மனிதர்களின் உடல் அமைப்பு இரண்டுமே ஒன்று தான்.உடல், இருப்பிடம் அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைந்து இருக்கிறது.இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து இன்ப துன்பங்களையும் ஒருவரின் உடலே ஏற்கிறது.உடல் மற்றும் மனோகாரகனாகிய சந்திரன் பஞ்ச பூதங்கள் வாயிலாக ஒருவரை செயல்படுத்துகிறது. அதாவது உடல் மூலம் அனுபவிக்கும் அனைத்து நன்மை, தீமைகளுக்கும் குடியிருக்கும் வீட்டிற்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். நவகிரகங்களும் பஞ்ச பூதங்களின் இயக்கத்திற் கேற்ப கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக மாறி ஜீவராசிகளை வந்தடைகிறது. உடலில் உள்ள சக்கரங்கள் டிஷ் ஆண்டனாவை போல் இயங்கி உடலின் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற உடல் பாகங்களை இயக்குகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயக்கிப் பெற்று உயிர்களை இந்த உலகம் இயங்கிக் கொண்டி ருக்கிறது.

  நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் உடல், மனம், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்களால் ஆன மனித உடலில் மூச்சு காற்றாகவும், வெப்பம் உயிர் துடிப்பாகவும், நீர் ரத்தமாகவும், மண் சதைகளாவும் எலும்புகளாகவும் இருந்து உடலை இயக்கிறது. அதன்படி பஞ்சபூதத்தின் ஐந்து சக்திகள் வாஸ்துவை கீழ்கண்டவாறு ஆள்கிறது.

  நீர்

  விவசாய நிலமானாலும் ,வீட்டு மனையானலும் வடகிழக்கு (ஈசான்யம்) சார்ந்தே நீர் நிலைகள் இருக்க வேண்டும்.அதாவது பூமிக்கு கீழ் தண்ணீர் தொட்டி (சம்ப்),போர்வெல்,கிணறு போன்றவைகள் வடகிழக்கு பகுதியில் அமைவது மிகவும் சிறப்பு மற்ற பகுதிகளில் நீர் நிலைகள் இருக்கும் பட்சத்தில் சில கெடுதலான பலன்கள் தரும்

  நெருப்பு

  பஞ்சபூதத்தின் ஒரு சக்தியான நெருப்பிற்குரிய பகுதி தென்கிழக்கு. இங்கே சமையல் அறையை வைத்துக் கொள்ள வேண்டும். இயலாத பட்சத்தில் வடமேற்கு பகுதியில் சமையல் அறை வைத்து கொள்ளலாம், மற்ற எந்த பகுதியிலும் சமையல் அறையோ அல்லது அடுப்பு போன்ற அமைப்புகள் வருவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வரும் போது கெடுதலான பலன்கள் உண்டாகும்.

  நிலம்

  பஞ்சபூத சக்தியான மண்ணுக்கு உரிய பகுதி தென்மேற்கு.இந்த பகுதிக்கு கன்னி மூலை, குபேர மூலை, நிருதி மூலை எனப் பல்வேறு பெயர்கள் உண்டு.இந்த மூலை பகுதி உயரமாக இருப்பின் பல நன்மையான பலன்களும் தாழ்வாக பள்ளமாக இருந்தால் எண்ணிடலங்காத தீமையான பலன்கள் நடைபெறும்.

  காற்று

  பஞ்சபூதங்களின் மற்றொரு சக்தியான காற்றுக்குரிய பகுதி வடமேற்காகும்.இதற்கு வாயு மூலை என்ற பெயரும் உண்டு. செப்டிக்டேங்கை இந்த பகுதியில் தான் அமைக்க வேண்டும். கழிவுகள் மூலம் உற்பத்தியாகக் கூடிய வாயு காற்றில் கரைந்து மனிதர்களுக்கு கெடுதலைத் தரும் என்பதால் வடமேற்கைத் தவிர வேறு பகுதியில் கழிவறை, கழிவுகளை தேங்கும் பள்ளம் அமைந்தாலும் பல கெடுதலான விளைவுகள் ஏற்படும்.

  ஆகாயம்

  பஞ்சபூத சக்திகளில் ஒன்றான ஆகாயமானது வீட்டின் தரைக்கும் , மேற்கூரைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் உள்ள வெற்றிட அமைப்பாகும்.வீட்டின் உள் அமைப்பில் மிக உயரமான மேல் தளம் அமைப்பு வரும் பட்சத்தில் ஆகாயம் என்கிற பூதமானது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தீமையான பலனை தரும்.

  பூமி மண்ணாலும் நீராலும் ஆனது . பூமி தென்மேற்கில் இருந்து வட கிழக்கு நோக்கி சுற்றுவதால் இயற்கையாக பூமியில் நீரோட்டம் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. பொதுவாக நீரோட்டம் உயரமான பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி செல்லும். பூமியின் தற்சுழற்சி பாதை தென் மேற்கில் இருந்து வடகிழக்காக செல்வதால் பூமியின் தென் மேற்கு பகுதி உயர்வான பகுதியாகும் வடகிழக்கு பகுதி தாழ்வானதுமாக வாஸ்து சாஸ்திரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தெற்கும் மேற்கும் உயர்ந்திருக்க வேண்டும் என்றும் வடக்கும் கிழக்கும் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது

  பூமி, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதுடன், குறிப்பிட்ட அளவு வடகிழக்காக அமைந்த சாய்வான நிலையில் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதன் காரணமாக பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப வடகிழக்கை மையமாகக்கொண்ட சக்தி அலைகள் தாக்கங்களால் சலனங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் உண்டாகும் விளைவுகள், நன்மைகளை தந்தால் உச்சம் என்றும் தீமைகளை தந்தால் நீச்சம் என்றும் வகைப்படுத்தி உள்ளார்கள்.

  பூமியில் வடகிழக்கு பருவக்காற்று என்றும் தென்மேற்கு பருவக்காற்று என்றும் இரு வகையான பருவக் காற்றுகள் வீசுகின்றன.இதில் வடகிழக்கு பருவக்காற்று உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தென்மேற்கு பருவக்காற்று வாடைக்காற்றாகும்.இந்த காற்று உடலில் பட்டால் ஆரோக்கியம் கெடும்.மேலும் அதிகாலை வெயில் உடலுக்கு முக்கியமானது என்றும் அது ஆரோக்கியமானது என்றும் மாலை வெயில் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு எனவும் கருதப்படுகிறது. எனவே மிகுதியான உச்ச நற்பலன்களைப் பெற வடகிழக்கில் இருந்து வீசும் காற்று தாராளமாக வீட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலி இடம் விட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. முடிந்தவரை வீட்டிற்கு தெற்கிலும் மேற்கிலும் காலியிடம் விடக்கூடாது.

  சிலருக்கு கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகு நிம்மதி நிலைப்பதில்லை. நிம்மதியின்மையை தவிர்ப்பதற்கு வீடு கட்டும் முன்பு மனையை நன்றாக சரி பார்த்து வாங்க வேண்டும்.அதன்படி ஒருவர் வாங்கக்கூடிய நிலம் காலிமனையோ,விவசாய நிலமோ அல்லது கட்டிடங்களோ, அவை சதுரமாக அல்லது செவ்வகமாக இருப்பது சிறப்பு.சதுரவடிவ மனையில் உயிரோட்ட சக்தி அலைகள் அதிகம்.செவ்வக வடிவ மனையில் உயிரோட்ட சக்தி அலைகள் சதுரவடிவ மனையை விட சற்று குறைவு .சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனைகள் வசிப்பதற்கு ஏற்றது. இவை இரண்டுமே அதிக நன்மையும் சுகமும் அளிக்கவல்லவை.

  முக்கோண வடிவமனை அக்னியுடன் தொடர்புடையது, இது தீயினால் உண்டாகும் தீமையை வர வேற்பது போன்றதாகும். மனிதர்கள் வசிப்பதற்கு முக்கோண வடிவ மனையை முழுவதும் தவிர்க்க வேண்டும். தெரியாமல் வாங்கி இருந்தால் அல்லது பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதை சதுரம் அல்லது செவ்வகமாக சரி செய்து மீதமுள்ள மனையை பயன்படுத்தக் கூடாது. வட்ட வடிவ மனை,ஜிக்ஜாக் வளைந்த அமைப்புள்ள மனைகள், தெருக்குத்து, ஒரு மூலை வெட்டுப்பட்ட அமைப்புள்ள மனைகளையும், கட்டிடங்களையும் தேர்வு செய்யக்கூடாது.

  மனிதர்களைப் போலவே நிலங்களுக்கும் பாலினம் உண்டு. நிலத்தை ஆண்மனை,பெண் மனை என இரண்டாக பகுக்கலாம். தெற்கு-வடக்கு பகுதி நீளம் அதிகமாக இருந்து, கிழக்கு-மேற்கு பகுதி நீளம் குறைவாக இருந்தால் அது பெண் மனை எனப்படும்.இந்த மனையில் பெண் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும் அல்லது பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் இருப்பார்கள்.இது போன்ற மனையை பெண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல், வீடு அமைப்பது நல்லது.

  கிழக்கு-மேற்கு பகுதி நீளம் அதிகமாக இருந்து, தெற்கு – வடக்கு பகுதி நீளம் குறைவாக இருந்தால் அது ஆண் மனை எனப்படும்.இங்கு பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது ஆண்களின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும்.இந்த மனையை ஆண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல் வீடு அமைப்பது நலம். மகா பாரதத்தில் மகாவிஷ்ணு இவ்வுலக இயக்கத்தையே தெளிவு படுத்தியுள்ளார். இவ்வுலகம் பிரிதிவி, அப்பு, தேயுவாயு ஆகாசம் என்னும் பஞ்ச பூத தத்துவத்தில் இயங்குகிறது. பிரிதிவி என்பது மண் அப்பு என்னும் நீரில் அடங்கும்.(மண் நீரில் கலந்துவிடும் அப்பு என்னும் நீர் தேயு என்னும் அக்கினியில் அடங்கும் (நீர் நெருப்பில் வற்றிவிடும்) தேயு என்னும் அக்கினி வாயுவில் அடங்கும் வாயுவானது ஆகாசத்தில் அடங்கும். வாயு அண்ட வெளிக்கு சென்று விடும். இவ்வுலகம் முழுவதும் வாயுவால் நிரம்பி உள்ளது. பஞ்ச பூத தத்துவத்தில் இயங்கும் நமது உடலும் இறுதியில் மூச்சு என்னும் காற்றை வெளிவிட்டு அந்த காற்றானது ஆகாயத்தில் சென்று அடங்கி விடுகிறது. எனவே பஞ்ச பூத இயக்கத்திற்கு ஏற்ப வசிக்கும் வீட்டை அமைத்துக் கொள்ள வாழ்க்கை வளமாகும்.

  Previous Next

  نموذج الاتصال