பல்வலி என்றதுமே நம் அனைவருக்கும் வீட்டு வைத்தியமாய் மனதில் தட்டுப்படுவது கிராம்பு எனும் லவங்கம் தான். இது அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகளில் லவங்கப்பட்டையுடன் அதிகம் பயன்படுத்தும் மற்றுமொரு மூலிகை மருந்து. கிராம்பு என்பது அந்த தாவரத்தின் பூமொட்டு. அதுவே மருத்துவ நலனுக்காக உணவிலும் மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை எனும் உடல் உள்ளுறுப்புகளின் திசுக்களைக் காக்கும் தன்மை உடையதால் "நறுமண மூட்டிகளின் வாகையன்" (சாம்பியன்) என்ற பட்டப்பெயருக்கும் உரித்தானது இந்த கிராம்பு.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உணவில் மணமூட்டியாக மட்டுமல்லாமல், மருத்துவ நலன்களை அள்ளித்தரும் மூலிகைப் பொருளாகவும் கிராம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாரசீகம் ஆகிய நாடுகளில் ஆண்மையை அதிகரிக்கும் மூலிகை மருந்தாக கிராம்பு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டில் பாரம்பரியமாக உணவு சார்ந்த கிருமி தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க கிராம்பு உணவில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டு பாரம்பரிய மருத்துவத்திலும், சீன நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திலும் வெப்ப முண்டாக்கியாக கிராம்பு பல நூறு ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராம்பு மற்றும் கிராம்பு தைலம் ஆகியவைகள் அசீரணம், வாய் குமட்டல், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பல்வலி, தசைப்பிடிப்பு மற்றும் தோலில் உண்டாகும் முகப்பரு, புண்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் பலவற்றிற்கும் குணமளிக்கும் மருந்துப்பொருளாக உள்ளன.
கிராம்பில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட வேதிக்கூறுகள் இருப்பினும் அதில் 50சதவீதத்துக்கும் மேலாக இருப்பது 'யூஜெனால்' எனும் வேதிப்பொருள். கிராம்பின் மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள யூஜெனால் காரணமாய் உள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது. கிராம்பில் புற்று நோயை தடுக்கும் இயற்கை நிறமிகளான குர்சிட்டின், கேம்ப்பெரால் ஆகிய முக்கிய நிறமி வேதிப் பொருட்களும் உள்ளது கூடுதல் சிறப்பு.
சித்த மருத்துவ மூலிகைகளான துளசி, லவங்கப்பட்டை, மிளகு, சாதிக்காய் ஆகிய பலவற்றில் யூஜெனால் இருப்பினும், கிராம்பில் மட்டும் அதிக அளவு உள்ளது. கிராம்பில் மருத்துவக் குணமளிக்கும் வேதிப்பொருட்கள் மட்டுமின்றி, உடலுக்கு நலமளிக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ஜிங்க் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற கனிம உப்புக்களும், வைட்டமின் ஏ, சி, தையமின், ரிபோபிளேவின், நியாசின் ஆகிய வைட்டமின்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது அதிகப்படியான நறுமண எண்ணை அளவினைக் கொண்டதால் அதிக மருத்துவ நன்மைகளையும் உள்ளடக்கியது.
கார்ப்பும், வாயிலிட்டால் விறுவிறுப்புத் தன்மையும் கொண்ட கிராம்பு வெப்ப வீரியத்தைக் கொண்டது. சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதம் மற்றும் கபத்தைக் குறைத்து அது சார்ந்து உண்டாகும் நோய்நிலைகளை தீர்க்கக்கூடிய தன்மை உடையது கிராம்பு.
லவங்கமானது உடலில் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம் சீரணத்தை தூண்டி, வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கு விக்கும் தன்மையை உடையது. வயிற்றில் ஹைட்ரோகுளோரைடு அமில சுரப்பினை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை அதிகரிப்பதாக உள்ளது. வயிற்றுப்பொரு மலையும் குறைக்கும். குடல் இயக்கங்களை மேம்படுத்துவதாகவும் உள்ளது.
நீங்காத தலைவலிக்கு கிராம்பினை அரைத்து பற்று போட நல்ல பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் சைனுசைடிஸ் என்னும் தலை நீர்க்கோவைக்கு பற்று போட உதவும் 'நீர்க்கோவை மாத்திரை'யில் கிராம்பு சேருவது குறிப்பிடத்தக்கது.
பல் ஈறு வீக்கத்திற்கு கிராம்பு தைலம் எனும் சித்த மருந்தினை பாரம்பரிய வைத்தியமாக நம் நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஈறு வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, வாயில் உள்ள கிருமிகளை கொல்லும் தன்மையும் இதற்குண்டு. மகப்பேறு காலத்தில் உண்டாகும் மசக்கை வாந்திக்கு கிராம்பினை வெந்நீரில் போட்டு ஊற வைத்து ஊறல் நீராக்கி குடிக்க நல்ல பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.
கிராம்பினை வாயிலிட்டு மென்று வர தொண்டை வீக்கத்தைக் குறைத்து இருமலைக் குறைக்க உதவும். கிராம்புடன் சிறிது கல்லுப்பு சேர்த்து பயன்படுத்துவது தொண்டையில் உள்ள கோழையை எளிதாக வெளியேற்ற உதவும். அல்லது கிராம்பு தைலம் 3 முதல் 5 துளி எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது தேன் சேர்த்து எடுத்துக்கொள்ள இருமலைக் குறைத்து நன்மை பயக்கும். கபத்தைக் குறைக்கும், கொரோனா கால சித்த மருத்துவ பெருமருந்தாகிய கப சுர குடிநீரில் கிராம்பு சேருவதும் குறிப்பிடத்தக்கது.
இருமல், மூச்சு இரைப்புக்கு 5 எண்ணிக்கை கிராம்பினை 30 மிலி நீரில் கொதிக்க வைத்து, தினசரி இரண்டு வேளை, அந்த நீரினை குடித்து வர கோழையை வெளிப்படுத்தி நன்மை பயக்கும். தசை வலி, தசை பிடிப்பு இவற்றிற்கு கிராம்பு தைலத்தை மேலே தடவி வர வலி குறையும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு என்கின்றன நவீன ஆய்வுகள். எளிய அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான கிராம்பு இன்சுலின்-மேம்படுத்தும் செயல் பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதோடு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் தடையை நீக்குவதாகவும் உள்ளது. ஆக, தினசரி 1 கிராம் அளவுக்கு கிராம்பினை எடுத்துக்கொள்ள இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
கிராம்பினை கொண்டு நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில், தினசரி 250 மில்லிகிராம் வரை கிராம்பில் உள்ள வேதிப்பொருளான 'கிலோவினால்' எடுத்துக்கொள்ள நீரிழிவு, உடல் பருமன், அதிக கொழுப்பு ஆகிய வளர்ச்சிதை மாற்ற நோய்நிலைகளை மேலாண்மை செய்ய உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கூறிய ஆய்வில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மட்டுமின்றி, கொலஸ்டிரால், டிரைகிளிசெரைடு, எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாகவும் உள்ளது. மேலும், இது இன்சுலின் தடையை நீக்கி வளர்ச்சிதை மாற்ற நோய்களைத் தடுப்பதாகவும் உள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேற்கூறிய மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள 'கிலோவினால்' வேதிக்கூறு காரணமாக உள்ளது.
தொற்றா நோய்க்கூட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் நீரிழிவு எனும் சர்க்கரை நோயில் உண்டாகும் பின்விளைவுகள் ஏராளம். அந்த வகையில் கிட்டத்தட்ட 50சதவீதம் நீரிழிவு நோயாளிகளில் அதிகம் உபாதையை உண்டாக்குவது நரம்பு பாதிப்பு தான். 'டயாபெடிக் நியூரோபதி' எனும் அத்தகைய பின்விளைவால் கை, கால் எரிச்சல், மதமதப்பு ஆகிய குறிகுணங்கள் உண்டாகக்கூடும். இதனை சித்த மருத்துவம் வாத நோயாக எடுத்துரைக்கிறது.
மேற்கூறிய நிலையில் சர்க்கரை அளவினைக் குறைத்து நரம்பு பாதிப்பினை சீர் செய்ய உதவும் அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளில் கிராம்பும் ஒன்று. கிராம்புடன், சர்க்கரை அளவைக் குறைக்கும் லவங்கப்பட்டை சேர்த்து பொடித்து தேநீராக்கி எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன் கை, கால் எரிச்சல் குறைந்து நரம்புகளை வன்மைப்படுத்தும். அல்லது சித்த மருந்தாகக் கிடைக்கும் 'கிராம்பு சூரணம்' அல்லது 'லவங்காதி சூரணம்' ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தவும் நல்ல பலன் தரும்.
யூஜெனால் நமது உடலில் கொழுப்புக்களின் ஆக்சிஜனேற்றத்தை தடுப்பதன் மூலம் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற பல்வேறு முக்கிய உறுப்புக்களின் திசு கட்டமைப்பு மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் 'டெஸ்டோஸ்டீரோன்' எனும் ஆண் ஹார்மோன் சுரப்பினை அதிகரிப்பதன் மூலம், வம்ச விருத்திக்கு உதவுவதாக உள்ளது என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் மாஸ்ட் செல்களில் உற்பத்தியாகும் ஹிஸ்டமின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை தடுக்க கிராம்பு உதவுவதாகவும் உள்ளது.
எலிகளில் நடத்திய ஆய்வு ஒன்றில் கண் புரை உண்டாவதை கிராம்பு தடுப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கண் வில்லையை (லென்ஸ்) பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாம் உணவில் சேர்க்கும் கிராம்பு இதயத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் எலிகளில் நடத்திய ஆய்வுகளில் முடக்கு வாதம், மூட்டு வீக்கம் ஆகியவற்றிற்கு காரணமான நொதிகளை தடுத்து வீக்கத்தை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பார்வையாளர்கள் வாய் துர்நாற்றத்தில் இருந்து பேரரசரை காக்க, சீனாவில் நீதிமன்ற பார்வையாளர்கள் தங்களிடம் கிராம்பு வைத்திருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் வலியுறுத்தியதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அன்று முதல் இன்று வரை வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மிகச்சிறந்த மூலிகை நறுமணமூட்டியாக இருந்து வருகிறது கிராம்பு. இன்று உலக அளவில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சந்தைப்படுத்தும் பல பற்பசைகளிலும், வாய் கொப்பளிக்கும் மருந்துகளிலும் கிராம்பு சேருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் பெர்ரி பழங்களை விட பல நூறு மடங்கு மருத்துவ குணங்களை தனக்குள் பொதித்து வைத்துக்கொண்டுள்ளது நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் கிராம்பு. நம் பாரம்பரியத்தோடும், உணவு முறைகளோடும் பழகி விட்டதால் அதன் அளப்பரிய மருத்துவ குணங்கள் நமது கண்ணுக்கு எளிமையாகத் தோன்றுகிறது.
உண்மையில் கிராம்பு மட்டுமல்ல, அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஆணிவேர்கள். அவற்றை பயன்படுத்தி நலம் நாடி, ஆரோக்கியத்தில் தழைத்தோங்குவது அவசியம். மொத்தத்தில் நறுமணமூட்டிகள் நம் வாழ்நாளை கூட்டுவதற்கு கிடைத்த அமிர்தம்.