No results found

  மெனோபாஸ் நிலையில் உதவும் மூலிகை மருத்துவம்


  மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை ஆகும். பெண்களின் கருவுறுதல் காலம் முடிவடையும் தருணமும் இதுதான். அந்நிலையில் பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை உள்ளடக்கியதை 'மெனோபாஸல் சின்ரோம்', 'கடைபூப்பு குறிகுணங்களின் தொகுப்பு' என்று அறியப்படுகின்றது. இத்தகைய குறிகுணங்கள் அனைத்தும் உடலின் இயல்பான நிகழ்வுகள் தான் என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

  உடல் பருமன் உள்ளவர்கள் விரைவிலே மெனோபாஸ் நிலையை எய்துவதாகவும், மெலிந்த தேகம் உள்ள பெண்களின் இறுதி மாதவிடாய் காலம் அதிகமானதாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிடாய் நிகழும் வரை தான் ஓவுலேஷன் எனும் அண்ட விடுப்பு நிகழும். அத்தகைய காலம் தான் கருவுறுதல் நடைபெறும் காலம். ஆக தாமதமாக திருமணமான பெண்கள், கருத்தரிப்பு தாமதமாகும் பெண்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்போது தான் மாதவிடாய் சீராக இருக்கும். மெனோபாஸ் உண்டாகும் காலம் தள்ளி போகும். இது கருத்தரிப்புக்கு ஏதுவாக இருக்கும்.

  மேலும் இறுதி மாதவிடாய் நிலையை பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் மாற்றங்களும், இன்றைய நவீன வாழ்வியலில் மதுபானம், புகையிலை போன்ற பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கும் தன்மையுள்ளதாக உள்ளது.

  இத்தகைய கடைசி பூப்பில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவு. அதற்கு தீர்வாக எச்.ஆர்.டி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்வது பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது.

  முக்கியமாக ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை உண்டாக அதிகம் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு தொடர்ந்து இத்தகைய ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வோருக்கு மாரடைப்பு கூட வரக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். இதுமட்டுமின்றி சர்க்கரை நோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்நிலைகளை உண்டாக்க இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை காரணமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஆக மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்படும் நபர்கள் மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, பெண்கள் உடலுக்கு தேவையான தாவர ஈஸ்ட்ரோஜென் பல்வேறு மூலிகைகளில் இயற்கையாக உள்ளதால் அவற்றை நாடுவது நலம் பயக்கும்.

  அந்த வகையில் சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம் ஆகிய நாடி குற்றங்கள் இரண்டும் மாறுபாடு அடைந்து மெனோபாஸ் சார்ந்த குறிகுணங்கள் உண்டாவதால், அத்தகைய நாடிகளை சீர் செய்யும் பொருட்டு மருந்துகளையோ, மூலிகைகளையோ எடுத்துக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும்.

  பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வாதத்தின் சார்பாக நரம்பு தளர்ச்சி, மனப்பதட்டம், மனநிலை மாற்றங்கள், கருவாய் வறட்சி, தோல் வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை, லேசான வெப்பம், மலச்சிக்கல், மார்பு படபடப்பு மற்றும் மூட்டு வலி போன்ற பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கும். இத்தகைய நிலைகளில் வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

  நரம்பு தளர்ச்சி, மன பதட்டம், மன அழுத்தம் போன்ற குறிகுணங்களுக்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் அளிக்கும். ஏற்கனவே கூறியதைப் போல் அமுக்கரா கிழங்கு பெண்களின் அனைத்து பருவ நிலைகளிலும் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதனை தினசரி 2 முதல் 5 கிராம் வரை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கமும் வரும். ஏனெனில் இறுதி மாதவிடாய் நிலைகளில் தூக்கம் கெட்டு பல பெண்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

  மூட்டு வலி, உடல் வலிகளுக்கு எளிய நல்ல பலன் தரும் மூலிகை நொச்சி தான். அவ்வப்போது நொச்சி இலையை மஞ்சள் பொடியுடன் சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையை மிளகுடன் சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள லூட்டியோலின், குர்சிடின் ஆகிய வேதிப்பொருட்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதாகவும், நமைச்சலை நீக்குவதாகவும் உள்ளது. இந்த எளிய மூலிகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

  தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் குறிகுணமாக உள்ளது. இதில் பெண்கள் பலருக்கும் அனுபவம் இருக்கும். வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும். வாதத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்க உதவும் மூலிகையில் முக்கியமான ஒன்று பிரமிய கீரை தான். நீர்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும் மூலிகை இது. இதில் உள்ள 'ப்ரமினோசைடு' எனும் வேதிப்பொருள் நரம்புகளை வலுப்படுத்தி இயற்கையாக தூக்கத்தை உண்டாக்கும். 'பிரமி நெய்' என்ற சித்த மருந்தையும் இதற்கு பயன்படுத்தலாம். வாரம் இருமுறை பெண்கள் முக்கியமாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பிரமி தைலம் கொண்டு எண்ணெய் முழுக்கும் எடுக்கலாம்.

  மேலும் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் தூக்கமின்மையில் பலன் தருவதாக உள்ளன. இதில் 'வெலராநோன்' மற்றும் 'வெலபோட்ரைட்' ஆகிய மருத்துவக் குணமுள்ள வேதிப்பொருட்கள் இரண்டு மூலிகையிலும் உள்ளது. இவை நமது மூளையில் சுரக்கும் வேதி அமிலமான காபா-வின் சிதைவைத் தடுத்து தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தகரை வேர் அதிக வேதிப்பொருளைக் கொண்டு தூக்கமின்மையில் சிறப்பாக செயல்படக்கூடியது. இதனையும் தூக்கத்திற்காக ஏங்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

  பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் பித்தத்தின் சார்பாக அதிகம் கோபம், அடிக்கடி எரிச்சலாதல், அதிக உடல் சூடு, அதிக வெப்பத்தை உணருதல், அதிக வியர்வை, முகப்பரு, சில சமயம் தோல் தடிப்பு ஆகிய குறிகுணங்கள் உண்டாகி வருத்துவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இத்தகைய குறிகுணங்களில் பித்தத்தை குறைக்கும்படியான உணவும், மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உள்ளது.

  பித்தத்தை குறைக்குப்படியான பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும். அதிமதுரம், தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம்,சீரகம், வெந்தயம், வெட்டிவேர், வெண்பூசணி, சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகைகள் அவற்றுள் சில. இவை முக்கியமாக மெனோபாஸ் நிலையில் பெரும்பாலான பெண்கள் அவதியுறும் 'ஹாட் பிளஷஸ்' எனும் 'திடீர் வெப்ப உணர்வு' குறிகுணத்தினை குறைக்க உதவுவதாக உள்ளன.

  அதிமதுரம், சீரகம், சோம்பு இவை மூன்றையும் கலந்து பாலுடன் சேர்த்து பால் கசாயமிட்டு குடிக்க பித்தம் சார்ந்த அனைத்து குறிகுணங்களுக்கும் நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக அதிமதுரத்தில் உள்ள டெர்பீன்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருட்கள் ஹாட் பிளஷஸ் குறிகுணத்தை குறைப்பதாக உள்ளது. ஆனால் அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிமதுரம் ஏற்புடையது அல்ல. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பித்தத்தைக் குறைக்கும் 'சீரக சூரணம்' எனும் மருந்து மேற்கூறிய குறிகுணங்களை குறைக்க உதவும்.

  தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் சித்த மருத்துவ மூலிகை மெனோபாஸ் நிலையில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மெனோபாஸ் நெருங்கும் தருவாயில் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயமிட்டு எடுத்துக்கொள்ள பித்தவாதம் குறைந்து பெரும்பாலான குறிகுணங்கள் குறைந்து பெண்களுக்கு நன்மை செய்யும். அல்லது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'தண்ணீர்விட்டான் நெய்' அல்லது 'சதாவேரி லேகியம்' ஆகிய மருந்துகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது. இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், பிற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் இதனால் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் உண்டாகும் கருவாய் வறட்சி, எரிச்சல் ஆகிய குறிகுணங்களும் நீங்கும்.

  பெண்கள் மேற்கூறிய பித்தம் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படும்போது சீரக தண்ணீர் எடுத்துக்கொள்வதும், வெட்டிவேர் மற்றும் சந்தனம் ஊறல் நீர் குடிப்பதும் கூட குறிகுணங்களை சமாளிப்பதில் ஏதுவானதாக இருக்கும்.

  வெந்தயம் எனும் எளிய கடைசரக்கு அதிகப்படியான டெஸ்டோஸ்டீரோன் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் மெனோபாஸ் நிலையில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக அவ்வப்போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமை, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெந்தயம் ஏற்புடையது அல்ல.

  பித்தத்தை குறைத்து நன்மை பயக்கும் சோற்றுக்கற்றாழையை அவ்வப்போது சாறாகவோ அல்லது குமரி எண்ணெய், குமரி லேகியம் போன்ற சித்த மருந்துகளாக எடுத்துக்கொள்ள பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். நாம் உணவில் பயன்படுத்தும் வெண்பூசணி பித்தத்தை குறைப்பதில் பயனளிக்கும். ஆக, சித்த மருந்தான வெண்பூசணி நெய் கூட பயன்படும். மூலிகைகளை கடந்து சங்கு பற்பம், பவள பற்பம், வெள்வங்க பற்பம் போன்ற இன்னும் பல பற்ப, செந்தூர சித்த மருந்துகள் பயன்படும் வகையில் உள்ளது.

  மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு இயற்கையாகவே குறைவதால் உண்டாகும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களில் முக்கியமான ஒன்று உடல் எடை கூடுதல். இதனால் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, எச்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பின் அளவு குறையக்கூடும். ஆகையால் பெண்கள் கருஞ்சீரகம், சீரகம் ஆகிய இரண்டையும் வறுத்துப்பொடித்து எடுத்துக்கொள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

  திருமூலர் அருளிய ஆசன பயிற்சி முறைகளான சூரியநமஸ்காரம், தடாசனம், கடிச்சக்ராசனம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சர்வாங்காசனம், சேதுபந்தாசனம், பத்தகோனாசனம், பாவனமுக்தாசனம் மற்றும் யோக நித்ரா ஆகிய யோகாசனப் பயிற்சிகளை செய்வதும் நல்லது. சீதலி பிராணயாமம் பித்தத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.

  இவ்வாறு பெண்கள் பருவமடைதல் துவங்கி இறுதி மாதவிடாய் வரை பல்வேறு நோய் நிலைகளில் நம் மரபு சார்ந்த சித்த மருத்துவம் பயன்படக்கூடிய வகையில் உள்ளது. இதனை இன்றைய தலைமுறை பெண்கள் அறிந்து கொண்டு பாரம்பரிய மருத்துவம் மீது பற்றுக்கொண்டு பயன்படுத்த துவங்குவது நல்லது. இதுவே ஆரோக்கியத்தை மருத்துவமனை தோறும் தேடி அலையும் இன்றைய அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பாரம்பரிய மருத்துவம் நம் மண், மரபு, ஏன் மரபணு சார்ந்ததும் கூட என்பதை மறவாமல் இருப்பதிலே ஆரோக்கியத்திற்கான பாதை துவங்குகிறது.

  Previous Next

  نموذج الاتصال