கேழ்வரகு கூழ் முதல் ஆம்லெட், பிரியாணிக்கு பச்சடி வரை சைவ உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவாக இருந்தாலும் சரி வெங்காயம் இல்லாமல் தமிழர்களின் உணவு முழுமை பெறாது. அஞ்சறைப்பெட்டியின் அன்றாடம் பயன்படுத்தும் கடைச்சரக்குகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் மூலிகைகளில் வெங்காயமும் ஒன்று. வெங்காயம் பூண்டின் இனத்தைச் சார்ந்தது. இது பூண்டிற்கு நிகரான மணமும், நெடியும் கொண்டது. "சமையலறையின் ராணி" என்ற பட்டப் பெயருக்கும் உரித்தானது வெங்காயம் தான்.
கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே வெங்காயம் உணவில் நறுமணமூட்டியாக மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எகிப்து நாட்டின் கல்லறைகளில் வெங்காயம் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய கிரேக்கத்தில், விளையாட்டு வீரர்களின் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக வெங்காயம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளாடியேட்டர்கள் ரோம் வெற்றிக்குப் பிறகு தசைகளை வலுப்படுத்த வெங்காய சாற்றை தேய்த்தார்கள் என்றும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (கிரேக்க மருத்துவர்) வெங்காயத்தை, காயத்திற்கு நிவாரணம் தருவதற்கும், சிறுநீரைப் பெருக்குவதற்கும் பரிந்துரைத்தார் என்பதும் அறியக்கிடைக்கின்றனது.
வெங்காயத்தில் இரண்டு வகைகள் உண்டு. அவை சிகப்பு மற்றும் வெள்ளை வெங்காயம் ஆகியன. சிகப்பு வெங்காயத்தின் சிகப்பு நிறத்திற்கு காரணம் அவற்றில் உள்ள 'ஆன்தோசயனின்' நிறமிகள் எனும் இயற்கை நிறமிகள். இந்த இயற்கை நிறமிகள் உள்ளதால் சிகப்பு வெங்காயம் அதிக மருத்துவ குணம் உடையது. வெங்காயத்தின் காரத்தன்மைக்கும், நெடிக்கும் அதில் உள்ள சல்பர் வேதிப்பொருட்களே காரணம் என்கிறது நவீன அறிவியல்.
வெங்காயம் உணவுக்கு மணத்தைத் தரும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இல்லாமல், உடலுக்கு போஷாக்கினையும் (ஊட்டத்தையும்) தருவதாக உள்ளது கூடுதல் சிறப்பு. வெங்காயத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களான ஏ, பி-1, பி-2, நியாசின், வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவையும், உடலுக்கு அத்தியாவசியமான கனிம உப்புக்களான செலினியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), குரோமியம் ஆகியனவும் உள்ளன. மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பல்வேறு தொற்றா நோய்களைத் தடுக்கும், வேதிக்கூறுகளாகிய குர்சிட்டின், கடிசின், ரிசர்வெரட்ரால், காம்பரால் ஆகியன உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லேசான கசப்பு சுவையும் காரத்தன்மையும் உடைய வெங்காயம் உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், மூலம், அதிக தாகம் ஆகிய பல்வேறு நோய்நிலைகளுக்கு பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம். உண்ணும் உணவால் அதிகமாகும் பித்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி, பித்தத்தால் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கும் வெங்காயம் மருந்தாகும். வெங்காயத்திற்கு, உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும் உண்டு.
வெங்காயத்தின் மற்றொரு பெயர் 'பலாண்டு'. அதாவது ஆண்களுக்கு பலத்தைத் தருவதாக இருப்பதால் பலாண்டு என்ற பெயரும் வந்துள்ளது. புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு விருந்து நிகழ்வின் போது வெங்காயத்துடன் தயிர் சேர்த்து பச்சடி வைத்து ஆண்களுக்கு கொடுக்கும் பழக்கம் இன்றும் தென்தமிழகத்தில் பரவலாக வழக்கத்தில் உள்ள முறை. அதே போல், வெங்காயத்திற்கு ஆண்மையை அதிகரிக்கும் குணம் உள்ளதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனை நவீன ஆய்வு முறைகளும் உறுதி செய்கின்றன. சித்த மருத்துவம் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது என்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்.
வெங்காயத்தில் உள்ள 'பிரக்டோஸ் ஒலிகோ சாக்ரைடு' (FOS) எனும் வேதிப்பொருள் ஆயிரம் நன்மைகளை அள்ளித்தரும் குடலில் வாழும் நன்மை பயக்கும் பாக்டிரியாக்களை அதிகரிக்கும் செய்கையை கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. ஆக, தயிருடன் வெங்காயம் சேர்ந்த பச்சடியை உணவில் சேர்ப்பது பல்வேறு வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உள்ளது ஆச்சரியம்.
வெங்காயத்தின் நாம் உணவில் சேர்க்கும் பகுதியான கிழங்கு மட்டுமின்றி அதன் விதைகளுக்கும் மருத்துவ குணம் உண்டு என்கிறது சித்தமருத்துவம். வெங்காய விதைக்கு வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உள்ளது. மேலும் ஆண்களுக்கு காதல் உணர்வை அதிகரிக்கும் தன்மையும் உள்ளதாக கூறுகின்றது.
தலையில் சுருள் சுருளாக முடி விழுந்து வழுக்கையை ஏற்படுத்தும் 'அலோபீசியா' எனும் புழுவெட்டு நோய்நிலையில் வெங்காயத்துடன் சிறிது உப்பு, சிறிது மிளகு சேர்த்து முடி இல்லாத இடத்தில் தினமும் தேய்த்து வர முடி முளைக்கும். இது எளிய கைகண்ட வீட்டு வைத்திய முறை.
வெங்காயத்தை மோருடன் சேர்த்து எடுத்துக்கொள்ள சிறுநீர் எரிச்சல் நீங்கும். மூல நோயில் உண்டான ஆசனவாய்க் கடுப்பும் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வெங்காயத்தை கசாயமிட்டு குடித்தாலும் நீர்க்கடுப்பு நீங்கி சிறுநீர் பெருகும். கோடைக்காலத்தில் அதிகரிக்கும் பித்தத்தால் அடிக்கடி ஏற்படும் சிறுநீர்கடுப்பு மற்றும் மூலக்கடுப்பிற்கு வெங்காயம் சிறந்த நிவாரணி. வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெயை கலந்து மூட்டு வலிகளுக்கு பூசி வர நல்ல பலன் தரும். வெங்காயம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாக உள்ளதை எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுகின்றன. ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால், ட்ரைகிளிசரைட், மற்றும் கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைப்பதாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆக, உணவில் வெங்காயத்தை சேர்ப்பது இருதயத்தை பாதுகாக்கும் என்பது இதில் வெளிப்படை. அதே போல் வெங்காயமானது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாகவும், இன்சுலின் சுரப்பின் அளவைக் கூட்டுவதாகவும் எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுவதும் சிறப்பு.
மெனோபாஸ் எனும் கடைசி மாதவிடாயினை அடைந்த பெண்களுக்கு உடலில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடக்கூடும். இதனால் உடலில் கால்சியம் சத்து உட்கிரகிப்பது குறைந்து, பெண்களின் எலும்புகள் அடர்த்தி குறையும். இதனால் நாளடைவில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகிவிடுகிறது. அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினசரி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்ட பெண்களின் எலும்புகள் மெனோபாசுக்கு பின்னரும் அடர்த்தியாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு.
அகவை ஐம்பதைக் கடந்ததும் வரிசைக்கட்டும் வியாதிகள் பலவும், தற்போதைய நவீன வாழ்வியல் சூழலில் அதற்கு முன்னதாக உண்டாகிவிடுகிறது. அந்த வகையில் ஆண்களின் வயது மூப்பு காலத்தில் உண்டாகும் புராஸ்டேட் கோளச் சுரப்பியின் வீக்கம் (BPH) பலரை முப்பதிலேயே பாதிக்க துவங்கிவிடுகிறது. அத்தகைய புராஸ்டேட் கோளம் சார்ந்த நோய்நிலைகளை வரவொட்டாமல் தடுக்க வெங்காயம் பேருதவி புரியும் என்கின்றன நவீன ஆய்வுகள். வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு 59 சதவீதம் புராஸ்டேட் வீக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பது ஆண்களுக்கு பலம்.
தமிழர்களின் மிகச்சிறந்த பாரம்பரிய உணவாகிய கேழ்வரகு கூழில் சிறிது மோர் சேர்த்து, வெங்காயம் சேர்த்து, குடிக்கும் பழக்கம் பல காலமாக வழக்கத்தில் உள்ளது. உண்மையில் கோடைக்கால வெப்பத்தையும், சூட்டையும் தணிக்கவே கூழில் வெங்காயம் சேர்க்கப்படும் மருத்துவக் காரணம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இது உடல் வெப்பத்தைத் தணிக்கும்; கோடைக்காலத்திற்கு ஏற்ற அமிர்தம். தமிழர்களின் உணவு முறைகள் பருவ நிலைக்கும், உடல் மாற்றத்திற்கும் ஏற்ப, ஒவ்வொன்றும் சிற்பத்தைப் போல செதுக்கப்பட்டவைகள் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
மேலும், பூண்டிற்கு இணையாக புற்றுநோயை தடுக்கும் மகத்துவம் வெங்காயத்திற்கு உண்டு என்கின்றன பல ஆய்வுகள். உணவியல் மாற்றம், உடல் பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை, வாழ்வியல் மாற்றம் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 30-40 சதவீதம் வரையிலான புற்றுநோய்களை தடுக்க முடியும் என்கிறது அமெரிக்கா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்.
ஆகவே 'உணவே மருந்து' எனும் சித்த மருத்துவ கோட்பாட்டின்படி, வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்ப்பது வெறும் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமின்றி உலக அரங்கில் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் நோயான புற்றுநோயினை தடுத்து, வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்பது இதில் வெளிப்படை.
இன்றைய நவீன வாழ்வியலில் அதிகரித்த துரித உணவுகளால், முக்கியமாக முதன்மை இடத்தை பிடிக்கும் நோய்நிலை 'குடல் சார்ந்த புற்றுநோய்கள்' தான். உலக அளவில் புற்றுநோய் பாதிப்பில் கிட்டத்தட்ட 26 சதவீதம் குடல் சார்ந்த புற்றுநோய்களாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதிலும் 35 சதவீதம் புற்றுநோய் இறப்பிற்கும், குடல் சார்ந்த புற்றுநோய்கள் காரணம் என்கின்றன ஆய்வுகள். "வருமுன் காப்போம்" என்பது உலகறிந்த பழமொழி. அந்த வகையில் குடல் சார்ந்த புற்றுநோய்களை தடுக்கும் எளிய அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்காக இருப்பது வெங்காயம் தான். வெங்காயத்தில் உள்ள 'குர்சிட்டின்' வேதிப்பொருள் அதன் புற்றுநோயைத் தடுக்கும் தன்மைக்கு காரணமாக உள்ளது.
உடலுள் இருக்கும் மரபணு வரைக்கும் நன்மை பயக்கும் இந்த 'குர்சிட்டின்' வேதிப்பொருள் ஆப்பிள் மற்றும் புளூபெர்ரி ஆகிய விலையுயர்ந்த பழங்களை விட, வெங்காயத்தில் 5 முதல் 10 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. இது எளிமையாய் கிடைக்கும் நம்ம ஊர் வெங்காயத்திற்கு மகுடம் சூட்டுவது போன்றது. ஆக, நாற்பதுக்கு பின்னரும் நலம் நாட நினைப்பவர்கள் மருத்துவமனை வாசலை நாடாமல் இருக்க, மார்க்கெட்டுகளை தேடி வெங்காயத்தை வாங்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு அடித்தளம் இடும். உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம், நம் ஆரோக்கியத்தின் தூண்.