"குழந்தை அழுகிறதா? கிரைப் வாட்டர் கொடுங்க, குழந்தை அழுகையை உடனே நிறுத்திடும்" என்று பல ஆண்டுகளாக நாம் பார்த்து பழகிப் போன விளம்பரத்துக்கு அடிப்படையான மூலிகைச் சரக்கு சோம்பு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. குழந்தைகளின் 'கோலிக்' எனும் வயிற்று வலிக்கு, காலம் காலமாக பயன்படுத்தி வரும் சிறப்பு மிக்கது சோம்பு.
சிற்றுண்டி கடை முதல் பெரிய உணவகம் வரையிலும், உண்ட உணவு எளிதில் சீரணமாக, வயிற்றின் நலம் நாடும் வகையில், உணவகங்கள் உடலுக்கு கொடையாக வழங்கும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'சோம்பு' எனும் 'பெருஞ்சீரகம்'. பச்சை நிற வண்ணத்தில், நமது உடலின் ஆரோக்கியத்துக்கு பச்சை கொடி காட்டும் வண்ணமாக உள்ள மூலிகைக் கொடை சோம்பு.
சோம்பு நறுமணமூட்டியாக மட்டுமின்றி, சுவையூட்டும் மசாலாப் பொருளாகவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் சோம்பு 'வெற்றியின் அடையாளமாக' இருந்தது. பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்லாது, அந்நாடுகளின் வரலாற்று குறிப்புகளிலும் பரவலாகக் காணக்கூடிய மூலிகை சோம்பு தான்.
சாக்சன் இன மக்களின் ஒன்பது புனித மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட மூலிகை சோம்பு. அதே போல் 12-15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவம் பற்றி எழுதப்பட்ட, சிலந்தர் மருத்துவக் குறியீடு எனும் செர்பிய கையெழுத்துப் பிரதியில், பெருஞ்சீரகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். அந்த அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்கது சோம்பு.
'மருத்துவத்தின் தந்தை' எனக் கருதப்படும் புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர், ஹிப்போகிரட்டீஸ் பெருஞ்சீரகம் சிறுநீர்ப்பெருக்கி என்றும் மாதவிடாயை சீராக்கும் மூலிகை என்றும் கூறியுள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் அதன் சாறு கண்பார்வையை கூர்மைப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.
மெக்சிகோவின் பாரம்பரிய மருத்துவத்தில், சோம்பினை சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும் பொருட்டும் பயன்படுத்துகின்றனர். தெற்கு இத்தாலி மற்றும் போர்ச்சுகலில், சோம்பு நீரிழிவு சிகிச்சைக்கும், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட இருமலைப் போக்கவும், சிறுநீரகக் கற்களை கரைக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீன நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் குடல் சார்ந்த உபாதைகளைப் போக்கும் அருமருந்தாகவும், சீரணத்தைத் தூண்டவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இனிப்பு சுவையும், லேசான காரமும், தனக்கென சுண்டி இழுக்கும் மணமும் கொண்டது சோம்பு. தமிழர்களின் உணவு வகைகளில் அநேக உணவுகளில், முக்கியமாக சீரணத்திற்குத் தாமதமாகும் உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு இது. தமிழர்களின் உணவுக்கலையே நமது ஆரோக்கியத்திற்கான வாழ்வியல் கலை என்பது சோம்பினை உணவில் சேர்க்கும் நோக்கத்திலே பளிச்சென்று தெரிய வருகிறது.
இதில் கசப்பு மற்றும் இனிப்பு ஆகிய இருவகை சுவை காணப்படினும் நாம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது இனிப்பு தான். சோம்பை வாயில் இட்ட உடனே வரக்கூடிய மணத்திற்கு அதில் உள்ள 'அனீதோல்' எனும் தாவர வேதிப்பொருட்கள் காரணமாகின்றன. கூடுதலாக, அஞ்சறைப்பெட்டி நறுமணமூட்டிகளில், அதிகப்படியான மணமூட்டும் நறுமண எண்ணெய் அளவைக் கொண்டுள்ளதும் சோம்பின் சிறப்பு.
பெருஞ்சீரகத்தில் மருத்துவ குணமுள்ள தாவர வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகிய கனிமச் சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-1, வைட்டமின் பி-2, நியாசின் மற்றும் வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களும் உள்ளன. சோம்பில் நறுமண எண்ணையும் அதிக அளவு உள்ளது. அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய பங்களிப்பது அனீதோல் மற்றும் ஃபென்கோன் ஆகிய இரண்டு வேதிப்பொருட்கள் என்கிறது நவீன அறிவியல்.
இனிப்புச் சுவையைக் கொண்ட சோம்பு உடலில் பித்தத்தையும், வாதத்தையும் குறைக்கும் தன்மை உடையது. நாட்பட்டு குடலில் சேரும் வாதமும், பித்தமும், குடல் சார்ந்த நோய்நிலைகளான வாந்தி, வயிற்றுவலி, அசீரணம், வாய்குமட்டல், வயிற்றுப்புண் ஆகிய பல்வேறு நோய்குறிகளுக்கு காரணம் என்கிறது சித்த மருத்துவம். மேற்கூறிய நோய்நிலைகளில் மூலிகை கடைச்சரக்கான 'சோம்பு' நன்மை பயக்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.
சோம்பினை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து அரை கிராம் முதல் இரண்டு கிராம் வரை தனியாகவோ அல்லது சர்க்கரையுடன் சேர்த்தோ தினசரி இரண்டு வேளை எடுத்துக்கொள்ள, அசீரணம், வயிற்றுவலி, வயிறுப்பொருமல், மற்றும் வாதத்தை நீக்குவதோடு, கல்லீரல் சார்ந்த நோய்களுக்கும் நன்மை பயக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
உண்ட உணவு செரிக்காமல் அசீரணத்துடன் பசியின்மை உள்ளவர்கள் சோம்புடன் சீரகம் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள செரியாமைத் தொந்தரவு நீங்கி பசி இயல்பாக எடுக்கும். சீரகம், ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி மூலிகைச் சரக்குகளின் வரிசையில் வயிற்றுக்கு நன்மை மட்டுமே செய்யும் சித்த மருத்துவ மூலிகைகளுள் சோம்பும் ஒன்று. சோம்பினைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்தான 'சோம்புத் தீநீர்' வயிறு சார்ந்த உபாதைகளை தீர்க்கும் வல்லமை உடையது. மேற்கூறிய நோய்நிலையில் இதனையும் பயன்படுத்தலாம்.
மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியை பித்தம் சார்ந்து உண்டாகும் நோய்நிலையாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அந்த ஒற்றைத்தலைவலிக்கு சோம்புடன் அதிமதுரம் சேர்ந்த கசாயம் நல்ல பலனைத் தரும். அல்லது அதிமதுரப் பொடியுடன் சோம்பு சேர்த்து பொடித்து சூரணமாக்கி அத்துடன் நாட்டுச்சர்க்கரை கலந்து எடுத்துக்கொள்வதும் நல்லது. ஒற்றைத் தலைவலியும் குறையும், அதனால் உண்டாகும் வாந்தியும், வாய்க்குமட்டலும் கூட குறையும்.
சோம்பில் தாவர ஈஸ்ட்ரோஜென் சத்தும் அதிக அளவு உள்ளது. ஆகையால் மாதந்தோறும் நிகழும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீர்ப்படுத்தும் தன்மையும் உடையது. மேலும் மகப்பேறுக்கு பின்னர் பெண்களின் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. சோம்பினைப் பொடித்து அவ்வப்போது பாலில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் பெண்களில் சாதாரணமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் 'மாதவிடாய் வலி'க்கு சோம்பு சிறந்த நிவாரணம் தருவதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உடல் எடையைக் குறைப்பதிலும் சோம்பு-வின் பங்கு அளப்பரியது. கொரியா நாட்டில் நடைபெற்ற, அதிக உடல் எடையைக் கொண்ட பெண்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், மதிய விருந்துக்கு முன்னர் சோம்பு தேநீர் எடுத்துக்கொள்வது அவர்களின் பசித்தன்மை குறைவதாகவும், அதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இது அவர்களின் உடல் எடையைக் குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதே போல் சோம்புடன், வெந்தயத்தை சேர்த்து எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும் என்கின்றன நவீன ஆய்வுகள்.
நாக்கிற்கு அடிமையாகி அறுசுவைக்கும் அதிகமான சுவைகளை பழகிவிட்ட இன்றைய நவீன உலகில் பலருக்கு பசியைக் கட்டுப்படுத்துவது என்பது கேள்விக்குறியாக ஆகிவிட்டது. அத்தகைய சவாலான நிலையில் சோம்புவுடன் வெந்தயம் கலந்த தேநீர் எடுத்துக்கொள்வது பசியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ரால் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள். இன்று சந்தைகளில் விற்பனையாகும் உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு தேநீர்களில் சோம்பு பயன்படுத்தப்படுகிறது. சோம்புடன் லவங்கப்பட்டை மற்றும் சீரகம் சம அளவு சேர்த்து கொதிக்க வைத்து தினசரி குடித்து வருவது உடல் எடையைக் குறைக்க நல்லது.
சோம்பு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும் என்கின்றன முதல்நிலை ஆய்வுத் தரவுகள். சோம்பு கசாயத்தைக் குடிப்பது சிறுநீர்ப் பெருக்கியாக செயல்பட்டு சிறுநீரில் சோடியம் மற்றும் நீரினை வெளியேற்றி ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
மூட்டு வலியைப் போக்குவதிலும் சோம்பு நல்ல பலன் தருவதாக, எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சோம்பு, மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளை தடுத்து மூட்டு வலியை குறைப்பதாக உள்ளது. ஆக, மூட்டு வலியைக் குறைக்க சோம்பு கசாயத்துடன், மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லா மூட்டு வீக்க நோய்நிலையிலும் நல்ல பலன் தரும்.
வயிறு சார்ந்த நோய்நிலைகளில் அதிக பாதிப்பை உண்டாக்குவது குடலில் ஏற்படும் அழற்சி நோய். அதிலும் 'கொலைட்டிஸ்' எனும் 'பெருங்குடல் அழற்சி' (புண்) நோய்நிலையானது அடிக்கடி மலம் கழித்தல், வயிற்றுவலி, உடல் சோர்வு போன்ற பல்வேறு நோய்க்குறிகளை உண்டாக்கி மனதளவிலும் பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடியது. இத்தகைய நோய்நிலையில் சோம்புடன் பித்தத்தைக் குறைக்கும் பிற அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளான ஏலக்காய், சீரகம், கொத்துமல்லி விதை (தனியா) சேர்த்து பாலில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது அழற்சியைப் போக்கி நலம் பயக்கும்.
சோம்புவைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் வயிற்றுவலிக்கான மருந்துகள், அத்தகைய குழந்தைகளின் அழுகை நேரத்தைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பான ஒன்று. 2 வாரம் முதல் 12 வாரம் வரையிலான பச்சிளம் குழந்தைகளிடம் நடத்திய சோதனை முடிவுகள் மேற்கூறிய சோம்பின் பயனை உறுதி செய்துள்ளன.
நம்ம ஊர் நாட்டு மருந்து கடைகளில், சோம்பு மாதிரி இன்னும் பல ஆயிரக்கணக்கான மூலிகைகள், நூற்றுக்கணக்கான மருத்துவக் குணங்களை சுமந்து கொண்டு, மூலையில் மூட்டையாக பயன்படாமல் கிடக்கின்றன. அவற்றை வெறும் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டும் பயன்படுத்தும் நிலைமை மாறி, பாட்டி வைத்தியமாய் மீண்டும் பயன்படுத்தத் துவங்குவது நமது ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்க்கும்.