No results found

    தேனிலவு: அந்தரங்க சுத்தம் மிக அவசியம்...


    திருமணமாகும் எல்லா பெண்களுக்குமே தேனிலவு கனவு ஒன்று இருக்கும். திருமணமானதும் அவர்களது தேனிலவு காலம் தொடங்கிவிடுகிறது. தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள தேனிலவு நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களை தனிமையில் பயணிக்க அனுமதித்துவிடுவார்கள். அவர்கள் சுதந்திர பறவைகளாக விரும்பிய இடங்களுக்கெல்லாம் சிறகடித்து பறந்து, மகிழ்ச்சியாக தாம்பத்ய உறவை அமைத்துக்கொள்வார்கள்.

    வெளி இடங்களுக்கு தனிமையில் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காத ஜோடிகளுக்கும் தேனிலவு காலம் உண்டு. அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அந்த நாட்களை கொண்டாடுகிறார்கள். தேனிலவு காலத்தின் சிறப்பு என்னவென்றால் அப்போது புதுமணத்தம்பதிகளின் உடலும், உள்ளமும் சங்கமிக்கும். தாம்பத்ய ஆர்வமும் மேலோங்கி நிற்கும். அப்போது அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக பெண்கள் தேனிலவு காலத்தில் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

    தேனிலவு நாட்களில் பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும் பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அந்த பாதிப்பிற்கு 'ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்' என்று பெயர். சுகாதாரமற்ற முறையில் கணவரோடு தாம்பத்ய தொடர்பில் ஈடுபட்டால் இந்த பாதிப்பு தோன்றும். பெண்களின் உறுப்பு பகுதியில் வலி, எரிச்சல் ஏற்படுவது இதன் அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வினை இது ஏற்படுத்தும். ஆனால் சிறுநீர் பிரிந்து வெளியேறாது. சிலருக்கு சிறுநீரில் லேசாக ரத்தமும் வெளியேறலாம்.

    சிறுநீர் பரிசோதனையில் இந்த நோயின் தாக்குதல் தன்மையை கண்டுபிடிக்கலாம். பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததும், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டியதிருக்கும். சரியான சிகிச்சை பெறாவிட்டால், கிருமித் தொற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

    தேனிலவு காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்தரங்க சுத்தம் மிக அவசியம். தாம்பத்ய உறவு முடிந்ததும் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உறவுக்கு முன்பும்-பின்பும் இருவருமே அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தேனிலவு காலத்தில் காபி, டீ, குளிர்பானங்கள் பருகுவதை தவிர்ப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்து, அடக்கி வைக்காமல் சிறுநீர் கழிப்பதும் அவசியம்.

    தேனிலவு காலம் தம்பதிகளை பொறுத்தவரையில் மிக மகிழ்ச்சியானது. அந்த மகிழ்ச்சியை அவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال