No results found

  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு


  அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர். அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர். 

  ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர். அனைத்தையும் தந்து அருள்பவர் ஆஞ்சநேயர்.

  நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.

  அவர் அருளையும் கருணையையும் பெற்றால் வாழ்வில் எல்லா வளத்தையும் நீங்கள் சிரமமின்றி பெற முடியும். நாமக்கல் தலத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மிக வமரிசையாக நடைபெற உள்ளது. முதலில் நாமக்கல் ஆஞ்சநேயர் பற்றி தெரிந்து கொள்வோம்.

  முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.

  அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும்போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது. இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனை தம்முடன் எடுத்துக் கொண்டு வான்வழியாக வந்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.

  அப்போது நாமக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் தமது கையில் இருந்த சாளக்கிராமக்கல்லை கீழே வைத்து விட்டு சந்தியா வந்தனத்தை செய்து முடித்தார்.

  மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்து விட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.

  ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.

  கோபுரம் வேண்டாம் :

  நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கு கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார். நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாவது வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.

  நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடைவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது. 

  நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும்.

  பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

  ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்புசுல்தான் பயன் படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது. பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. 

  நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

  புண்ணிய தலமாக மாறிய நாமக்கல் :

  பேரன்பு கொண்டு விளங்கும் நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். 

  கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

  நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரி தாயார், தாமரக் கண்கள் கொண்டவள் தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே!

  புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோவில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  அகழ்வாராய்ச்சியின்படி, இந்தக்கோவில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. எதனுள்ளும் கட்டுப்படாதவர் அனுமன் என்பதை உணர்த்துவதாய் இத்திருக்கோவிலில் அனுமன் மேலே உயர்ந்து, 18 அடிகளில் கட்டிடத்துள், கோபுரத்துள் கட்டுப்படாது நின்று அருளுகிறார்.

  நாமகிரி தாயாரின் அளவிட இயலா கருணையாலும், லட்சுமி நரசிம்மர் குகைக்கோவிலின் சிறப்பினாலும் மற்றும் அனுமனின் தனிச்சிறப்பினாலும் நாமக்கல் ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது.

  நாமக்கல் கோவிலின் சிறப்புகள் :

  தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என்பது பெயராம். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில். லட்சுமி நரசிம்மர் கோவிலின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில் தான் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

  இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது. இங்கு உள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்.

  பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.

  வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

  இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது.

  தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் :

  நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர் களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளா தார மேம்பாடு அடையும்.

  எப்படி செல்வது? :

  நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

  தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது.

  நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதியும், டவுன் பஸ் வசதியும் உள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.

  நாமக்கல்லில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பெங்களூர் - நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், நாகர் கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் ப£சஞ்சர், கரூர் - சேலம் பாஞ்சர் ரெயில்கள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

  நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

  வெளிநாட்டு பக்தர்கள் திருச்சி அல்லது கோவை விமான நிலையங்களில் இருந்து இறங்கி காரில் நாமக்கல் வரலாம்.

  Previous Next

  نموذج الاتصال