புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யார்களுள் முதன்மையானவர் ராமானுஜர். கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார்.
16-ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17 வது வயதில் தஞ்சம்மாளை திருமணம் செய்தார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் தொடர்பான பல்வேறு விஷயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, ராமானுஜரை கொன்றுவிடவும் திட்டமிட்டார்.
இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன் பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர்.
ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர்.
உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர்.
விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்கரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார். அவர் வாழ்ந்தது கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாகும். அவர் வாழ்நாளிலேயே அடியார்களும் பக்தர்களும் ‘தெய்வம்’ என்றே கொண்டாடினார்கள். ஒரு மாபெரும் நாட்டையே பரிபாலிப்பதுபோல் திருவரங்கனின் சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்தவர்.
அரங்கன் ஆலயத்துக்கு வந்து, ‘கோயிலொழுகு’ ஏற்படுத்தி, ஓர் மன்னர்போல விளங்கி ‘யதிராஜர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். ராமானுஜருக்கு தொண்ணூறு வயதாகும்போது, மீண்டும் ஸ்ரீரங்கத்தில் அவரது வாழ்க்கை தொடர்ந்தது.அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் காஞ்சிபுரம் சென்ற ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும் படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின்உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதே நாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார்.ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன.
அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக்கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்தஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது.
தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார். இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்த உலகில் இணையற்ற ஒருமதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவமும் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது.
இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது.
ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உரக்க கத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும் படி செய்தார்.
சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிரம்ம சூத்திரத்திற்கும், கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி, திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சீடரால் உருவாக்கப்பட்டு, ராமானுஜர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு அவர் ஆக்ஞையையட்டி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது. வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார். நாராயண சேவைக்கென எழுபத்தைந்து தலைவர்களை நியமித்தார். செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செவ்வனே செய்து முடித்தார்.
பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார். 120 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி.1138--ல் பரமபதம் அடைந்தார்.