No results found

  மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்


  காவிரியின் வடபால் கடற்கரை பக்கம் உள்ள சிவாலயங்களை, சுந்தரரும் அவரது சீடர்களும் தரிசித்தபடி வந்து கொண்டிருந்தனர். பூம்புகாரை தரிசித்து விட்டு, திருமுல்லை வாயிலை நோக்கி அவர்கள் நடைபயணம் செய்து கொண்டிருந்தனர். வழியெல்லாம் காட்டுப்பகுதி. கரடு முரடான பாதை. அவர்கள் வடகால் என்ற ஊருக்கு வந்த போது நல்ல பசி. ஆனால் உண்பதற்குத்தான் உணவு எதுவும் கையில் இல்லை. அருகில் வீடுகளும் ஏதும் இல்லை. சுந்தரரும் அவரது சீடர்களும் மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். “இறைவா! உன்னை தரிசிக்க வந்த எனக்கும், என் சீடர்களுக்கும் ஏன் இந்த சோதனை?” என்று புலம்பி விட்டு மயக்கமானார் சுந்தரர்.

  சற்று நேரத்தில் யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்த சுந்தரர், எதிரே ஒரு முதியவர் கையில் கட்டுச் சோற்று மூட்டையுடன் இருப்பதைக் கண்டார். “வாருங்கள் உணவருந்தலாம்” என்ற அந்த முதியவர், அனைவரையும் அமரவைத்து உணவை பரிமாறினார். அனைவரும் உண்டு மகிழ்ந்த போது “எங்கள் பசியை போக்கிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வது?” என்று சுந்தரர் கேட்க, பதிலுக்கு நகைத்த அவர் உடன் மறைந்து போனார். திகைத்தார் சுந்தரர். அப்போது அங்கு ஒரு அசரீரீ ஒலித்தது. “சுந்தரரே! என் தந்தையின் நினைவாக பத்து சிவாலயங்களை கட்டுங்கள்” என்று அந்த அசரீரி கூற, சுந்தரருக்கும் அவரது சீடர்களுக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி.

  பேசியது விநாயகப் பெருமான் என்பதை புரிந்து கொண்ட சுந்தரர், அவர் கூறியபடியே செய்தார். ஆம்.. தன்னிடம் இருந்த பொருட்களைக் கொண்டு 10 சிவாலயங்களைக் கட்டி எழுப்பினார். ஆனால் பிற்காலத்தில் வந்த ஆட்சி மாற்றங்களால், அந்த சிவாலயங்கள் சிதைந்து போயின. சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும், அந்த ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் ஒரு செவிவழி வரலாறு உள்ளது. அப்படி புதையுண்டு போன ஒரு சிவலிங்கம் தான் ஒரு வயதான பெண்மணியின் பார்வையில் பட்டு, ஆலயமாக உருவானது. அது என்ன கதை?

  இடமணல் ஒரு சிறு கிராமம். அந்த கிராமத்தில் உள்ள தன் உறவினர்களை பார்க்க, வயதான தம்பதியர் இருவர் அந்த கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நடந்து வந்த களைப்பு தீர சாலையோரம் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தனர். நிழலின் குளுமை இருவருக்கும் சுகமாக இருந்தது. சற்றே கண்ணயர்ந்தனர் இருவரும். கண் விழித்து தங்கள் பயணத்தைத் தொடர முயன்ற போது, அந்தப் பெண்மணியின் பார்வை மரத்தடியை உற்றுப் பார்த்தது. அங்கே, கறுப்பு வண்ணத்தில் மணலில் ஏதோ தெரிய, அந்த பெண்மனி தன் கணவரிடம் அதைச் சுட்டிக் காட்டினார். அவரும் பார்த்தார். இருவரும் அதன் அருகே சென்று மணலை சற்றே கரங்களால் தோண்டிப் பார்த்த போது, அது ஒரு சிவலிங்கத்தின் முன் பகுதி என்பதை அறிந்தனர்.

  உடனே ஊருக்குள் சென்று, மக்களிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்தனர். ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட சிலர், ஓடி வந்து அந்த மணல் மேட்டை தோண்டிய போது அனைவருக்கும் சொல்லொண்ணா வியப்பு. அங்கே, பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி கிடைத்தது. அனைவரும் மெய்சிலித்துப் போய் நின்றனர். அனைவரும் கூடி அதே இடத்தில் சில நாட்களில் ஒரு சிவாலயம் அமைத்தனர். அப்படி கண்டெடுத்த சிவலிங்கம் தான் இடமணல் என்ற அந்த ஊரில், தற்போது இறையருளை அள்ளி வழங்கி வருகிறது. இத்தல இறைவன் பெயர் ஓதனேஸ்வரர். இறைவி பெயர் அன்னபூரணி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் காணப்படும் நந்தி, பலிபீடத்தை அடுத்து சிறிய மகாமண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அன்னை அன்னபூரணி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடது புறம் விநாயகரும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். கருவறையில் இறைவன் ஓதனேஸ்வரர், லிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்று இங்கு இவைனின் திருமேனி மிகப் பெரிய அளவில் காணப்படுவதை காணும்போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்தில் உற்சவர் திருமேனி இல்லை. எனவே ஆலயத்தில் வீதி உலா கிடையாது. இந்தக் கோவில் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் திறந்திருக்கும். காணமல் போய் மீண்டும் மீண்டு வந்து அருள்பாலிக்கும் இந்த இறைவன், தனது பக்தர்களின் காணாமல் போன பொருட்களையும், இழந்த சொத்துக்களையும் மீட்டு தரும் அருள் குணம் கொண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சீர்காழியில் இருந்து திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் சீர்காழியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, இடமணல் என்ற கிராமம்.

  Previous Next

  نموذج الاتصال