No results found

  தொண்டனுக்கு உயிர் கொடுத்த வன்றொண்டரீசர் ஆலயம்


  நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்னும் அழகு கொஞ்சும் சிறிய கிராமம். இந்தக் கிராமத்தின் தெற்கு எல்லையில் அழகுற அமைந்திருக்கிறது, ‘வன்றொண்டரீசர்’ ஆலயம். பல நூற்றாண்டுகளை கடந்த இந்த ஆலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் முகப்பைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். வலது புறம் இறைவி அபிராமி அன்னையின் சன்னிதி உள்ளது. இறைவி தென்முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். நந்தியும் பலிபீடமும் முன்னே இருக்க, அதற்கு அடுத்தாற்போல் அர்த்த மண்டபம் இருக்கிறது. இதனைக் கடந்தால் இறைவன் வீற்றிருக்கும் கருவறையை அடையலாம்.

  கருவறையில் இறைவன் வன்றொண்டரீசர் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் சண்டீசர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் நுழைவு வாசலைக் கடந்தவுடன், முகப்பில் முருகன், விநாயகர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் சன்னிதி உள்ளது. இவர் இறைவனுக்காக தன்னையே அழித்துக் கொண்டவர்.

  அந்த தல வரலாறு என்ன என்று பார்ப்போம்..

  விவசாயத்தை தொழிலாகக் கொண்ட வேளாளர் குடியில், ஏயர்கோக்குடி என்பது ஒரு பிரிவு. இவர்கள் சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ளனர். ஏயர்கோன் என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். கலிக்காமர் சிறந்த சிவனடியார். சிவனடியார்களைப் பேணுவதில் அவருக்கு நிகர் அவரே!

  இத்தலத்துக்கு அருகே உள்ள கஞ்சாளுர் எனும் ஊரில் மானக் கஞ்சாற நாயனார் என்பவர் இருந்தார். இவர், அரசர்களுக்கு தலைமை தளபதியாக பதவி வகிக்கும் குடியைச் சேர்ந்தவர். இவரும் சிவபெருமான் மேல் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர். சிவனடியார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத பெருங்குணம் படைத்தவர். இவருக்கு ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க எண்ணிய கஞ்சாற நாயனார், கலிக்காமரின் குணத்தையும், குடும்பத்தையும் பற்றி அறிந்தார்.

  பின்னர் அவருக்கே தன் மகளை மணமுடிக்க எண்ணிய கஞ்சாறர், திருப்பெருமங்கலத்தில் உள்ள பெரியோர்கள் ஆசியுடன் திருமணத்தை நிச்சயம் செய்தார். திருமணத்தை மணமகள் வீட்டில் நடத்துவதென முடிவாயிற்று. மாப்பிள்ளையும் ஊர்வலமாக வந்து திருமண வீட்டை அடைந்தார். மானக் கஞ்சாற நாயனார் சிவனடியார் எது கேட்பினும் கொடுக்கக் கூடிய குணநலன் கொண்டவராயிற்றே!

  அவரை சோதிக்க எண்ணிய சிவ பெருமான் முனிவர் வேடம் பூண்டார். திருமண வீட்டை அடைந்தார். முனிவரைக் கண்ட கஞ்சாற நாயனார் மனம் மகிழ்ந்து, மணப்பெண்ணை அவர் காலில் விழுந்து வணங்கச் செய்தார். தந்தையின் சொல்லைத் தட்டாத அந்தப் பெண்ணும், அப்படியேச் செய்தார்.

  தன் காலில் விழுந்த பெண்ணை, ‘மங்களம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்திய முனிவரின் பார்வை, அவளது அழகிய நீண்ட கூந்தலின் மீது பதிந்தது. ‘நாயனாரே! நான் அணிந்துள்ள முப்புரிநூல் தலைமுடியினால் ஆனது. இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நம் பஞ்சவடிக்கு உதவும்’ என்றார் முனிவர்.

  சிவனடியார் கேட்பதில் உடனடியாக தரும் கஞ்சாற நாயனார், தனது உடைவாளை எடுத்து மணப் பெண் கோலத்தில் இருந்த தனது மகளின் நீண்டக் கூந்தலை அறுத்தார். மணப்பெண்ணும் மறுப்பேதும் சொல்லவில்லை. கைகொள்ளாத நீண்ட, அறுபட்ட கூந்தலை எடுத்து முனிவரிடம் தருவதற்காக அவர் இருந்தப் பக்கம் திரும்பினார் நாயனார்.

  ஆனால் அங்கே முனிவர் இல்லை. நாயனார் திகைத்தார். வானில் சிவபெருமான் உமையொரு பாகனாய் காட்சி தந்தார். ‘சிவனடியார் மேல் நீ காட்டும் அன்பை, இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் உன்னை சோதித்தோம்’ என அசரீரி ஒலித்தது. மணப்பெண்ணின் கூந்தல் முன்னிலும் பொலிவுடன் திகழ்ந்தது.

  கலிக்காம நாயனார், அந்தப் பெண்ணை மணம் முடித்து, நல்வழியில் இல்லறம் நடத்தினார். சிவபெருமானுக்காக தன் கூந்தலைக் கொடுத்த பெண் தன் மனைவியாக அமைந்ததில் அவருக்கு ஏக மகிழ்ச்சி. இப்படி கலிக்காமர், சிறந்த சிவபக்தியுடனும், தன் பக்திக்கு மிஞ்சிய மனைவி கிடைத்ததிலும் மகிழ்ச்சியுற்று இருந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது.

  தம்பிரான் தோழர் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூரில் அவதரித்த பரவையாரை மணந்தார். பின்னர், அவருக்குத் தெரியாமல் திருவொற்றியூரில் அவதரித்த சங்கிலியாரையும் மணந்து கொண்டார். பரவையார் சுந்தரரின் மறுமண செய்தி கேட்டு கோபம் கொண்டார். அவரது கோபத்தைத் தீர்க்க சுந்தரர் பலரை தூது அனுப்பியும், பரவையாரின் சினம் தணியவில்லை.

  இறுதியில் தன் தோழரான சிவபெருமானிடம், பரவையாரின் சினம் தீர்க்க தூது போகும்படி வேண்டினார். சிவபெருமானும் இருமுறை பரவையாரைத் தேடிச் சென்றார். தூது வந்தது சிவபெருமான் என்றுணர்ந்த பரவையார், சினம் தவிர்த்து சுந்தரருடன் இணைந்தார்.

  இந்தச் செயலைக் கேள்விப்பட்டார் கலிக்காமர். சிவபெருமானை தூது அனுப்பிய சுந்தரரின் மேல் கடுங்கோபங் கொண்டார். கலிக்காமருடைய சினத்தை அறிந்தார் சுந்தரர். அவரது சினத்தை தணித்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார். சம்பந்தருக்கு பாலைக் கொடுத்தும், அப்பருக்கு சூலைக் கொடுத்ததும், சுந்தரருக்கு ஓலைக் கொடுத்தும் ஆட்கொண்ட பெருமான் கலிகாமருக்கு சூலைக் கொடுத்தார்.

  சூலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கலிக்காமர், தன் நோய் குணமாக இறைவனை வேண்டினார். ‘அன்புக் கொண்டனே! உன் சூலை நோயை என் தொண்டன் சுந்தரன் வந்து தீர்ப்பான்’ என சிவபெருமான் அருளினார். ஆனால் கலிக்காமரோ அந்த செய்தியால், உள்ளம் நொந்தார்.

  ‘அடியவனாகிய என் நோயை நீர் குணப்படுத்தாது, உம்மை ஒரு வேலையாள் போல் வேலை வாங்கிய ஒருவன் வந்து குணப்படுத்துவதா? அதைவிட நான் இறப்பதே மேல்’ என்று கூறிய கலிக்காமர் தன் உடைவாளை எடுத்து, தன் வயிற்றைக் கிழித்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

  சுந்தரர் வருவதை அறிந்து கலிக்காமரின் மனைவி, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு சுந்தரரை வரவேற்று உபசரித்தாள். ‘கலிக்காமர் எங்கே? அவரது சூலை நோயை குணப்படுத்த வந்துள்ளேன்’ என்றார் சுந்தரர். கலிக்காமரின் மனைவியோ நடந்ததை அறிந்தால் சுந்தரர் வருந்துவார் என்பதற்காக ‘அவர் உறங்குகிறார்’ என்றாள்.

  ‘நான் அவரைக் காண வேண்டும்’ என்று சுந்தரர் கூறவே, வேறு வழியின்று கலிக்காமரின் சடலத்தை கொண்டுவந்து அவரிடம் காட்டினாள் அவர் மனைவி.

  உண்மையை உணர்ந்த சுந்தரர் ‘இவருடன் நானும் செல்வேன்’ என உடை வாளை எடுத்தார்.

  மறுகணம் இறைவன் திருவருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார். இருவரும் ஆரத் தழுவி மனம் மகிழ்ந்தனர் என்பது வரலாறு.

  இந்த ஏயர்கோன் கலிக்காமருக்குத்தான் இந்த ஆயத்தில் தனிச் சன்னிதி உள்ளது.

  இறைவனின் கருணையை உலகுக்கு உணர்த்திய ஏயர்கோன் கலிக்காமரையும் தன் தொண்டனுக்கு உயிர் கொடுத்த வன்றொண்டரீசரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை திருப்பெருமங்கலம் சென்று வரலாமே!

  நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்ற இந்த தலம்.

  Previous Next

  نموذج الاتصال