No results found

    தமிழ்க்கடவுள் முருகன்


    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!

    முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது.

    முருகு என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.

    மு என்பது திருமாலையும் ரு என்பது சிவபெருமானின் அம்சத்தையும் க என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

    அதுபோல உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன். அதனால் முருகனைக் குறிஞ்சிக் கிழவன் மலைகிழவோன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

    முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு, தமிழ்த் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.

    முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

    கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம். முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார். முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

    Previous Next

    نموذج الاتصال