No results found

    திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு


    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூசை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராசகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசட்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். சூரசம்கார மூர்த்தியானதிருச்செந்தூர் முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவருக்கு அருகில் இடப்புறத்தில் சிவலிங்க செகநாதர் இருக்கிறார். முருகப்பெருமானை சுப்பிரமணியர் வணங்குகிறார் என்று புராணம் கூறுகிறது.

    இவரது வலதுமேல் கையில் சக்தி வேலாயுதம் ஏந்தி, இடது மேல் கையில் செபமாலை தரித்தவராகவும், அழகிய இடதுஇடுப்பில் வைத்துக்கொண்டு வலது கீழ்க் கையில் பூவை வைத்தவராகவும், வீரமுடையவராகவும், முக்கண்ணனைச் சதா பூசை செய்பவராகவும், கடற்கரையில் நின்றபடி காட்சி அளிக்கிறார். முருகப்பெருமான் தன்னைநாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுவதெல்லாம் கொடுப்பவராகவும் காட்சி அளிக்கிறார். சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான்.

    சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னிமுகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில், மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இருகூறாகச் சிதைந்தது. ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு. சூரசம்காரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் “”வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர்.

    கந்தசட்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சட்டியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசட்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்பசிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசட்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். 12 நாள் விழா : முருகத்தலங்களில் கந்தசட்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சட்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசட்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறுநாட்களில் சட்டி விரதம், சூரசம்காரம், ஏழாம் நாளில் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும். சட்டி யாகம் : திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் செயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, திருமால், விநாயகர், சப்தகுரு, பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூசை முடிந்தவுடன் செயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்காரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்காரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புகிறார். மும்மூர்த்தி முருகன் : முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்காரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், பெருமாள், பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற ஆடை சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை ஆடை சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது. கண்ணாடிக்கு அபிஷேகம் : செயந்திநாதர், சூரனை சம்காரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் செயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை, முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்காரம் நிறைவடைகிறது.

    Previous Next

    نموذج الاتصال