No results found

  அமிர்தகடேசுவரர் தோன்றிய வரலாறு


  தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற பழமையான 274 சிவாலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலவரலாறு கொண்டது. அந்த தல வரலாறு, அந்த தலத்தை மட்டுமின்றி மூர்த்தியையும், தீர்த்தத்தையும் சிறப்புற மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

  தலவரலாறை படித்த உடனேயே அத்தலத்து ஈசனின் பெருமையை உணர்ந்து அவர் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். அத்தகைய ஈர்ப்பை தரும் தலமாக திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது.

  இந்த தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தலமாகும். இந்த தலம் உருவாக காரணமான வரலாறு உங்களுக்குத் தெரிந்ததுதான்.

  ஒருமுறை தேவேந்திரன் தன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த துர்வாச முனிவர் மனம் மகிழ்ந்து மலர்மாலை ஒன்றை கொடுத்தார். அந்த மலர்மாலையை இந்திரனின் யானை தன் காலடியில் போட்டு அவமதித்தது.

  இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர் இந்திரனிடம் இருந்த அனைத்து செல்வங்களும் விலகும்படி செய்தார். நிலைகுலைந்த தேவர்கள் இது பற்றி மகா விஷ்ணுவை சந்தித்து முறையிட்டனர்.

  உடனே மகா விஷ்ணு ஒரு உபாயம் செய்தார். பாற்கடலில் இருக்கும் அமிர்தத்தை தேவர்கள் சாப்பிட்டால் விமோசனம் உண்டாகும் என்றார். இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை கைப்பற்ற போட்டிக்கு வந்தனர்.

  இதையடுத்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பாற்கடலில் கிடைக்கும் அமிர்தத்தை இரு தரப்பினரும் சமமாக பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். அதன்படி யுகாந்த காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது.

  ஆணவமும், சூட்சம அறிவும் இல்லாத அசுரர்கள் பாம்பின் தலை பகுதியை பிடித்தனர். தேவர்கள் வாசுகி பாம்பின் வால் பகுதியை பிடித்தனர். பல ஆண்டுகள் பாற்கடல் கடையப்பட்ட பிறகு ஐராவதும் யானை, காமதேனு என்ற பசு, கற்பக விருட்சம், புஷ்பக விமானம், பாரிஜாதமரம், என்று ஒவ்வொன்றாக தோன்றின. ஸ்ரீமகாலட்சுமியும் செந்தாமரை மலருடன் எழுந்தருளினாள்.

  தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. திடீரென வாசுகி பாம்பின் வாயில் இருந்து ஆலகால விஷம் கொட்டியது. தேவர்களும் அசுரர்களும் நாலாபுறமும் சிதறி ஓட, ஈசன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து கண்டத்தில் வைத்து எல்லாரையும் காப்பாற்றினார்.

  பிறகு தேவர்களும், அசுரர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். ஆபத்பாந்தவனான விஷ்ணு ஆமை உருவம் கொண்டு மாந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, மிக வேகமாக பாற்கடல் கடையப்பட்டது.

  அப்போது மூவுலகமும் வியக்கும் வகையில் பாற்கடலில் இருந்து அமிர்த கலசத்தை ஏந்தியவாறு தன்வந்திரி பகவான் அவதாரம் எடுத்தார். எல்லாரும் மகிழ்ச்சியில் மூழ்கினார்கள். அப்போது அசுரர்கள் அமிர்த கலசத்தை தட்டிப் பறிக்க முயன்றனர்.

  மாயக் கண்ணனான......... மகா விஷ்ணு விடுவாரா? அழகான மோகினி உருவம் கொண்டு அசுரர்களை மயக்கினார். அமிர்தத்தை இரு தரப்பினருக்கும் சமமாக பங்கீட்டுத் தருகிறேன் என்று கலசத்தை அசுரர்களிடம் இருந்து வாங்கிய அவர், அதை அப்படியே தேவர்களிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்.

  அந்த அமிர்தத்தை கடம் ஒன்றில் நிரப்பிய தேவர்கள் அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அழகான ஒரு இடத்தில் அமர்ந்து அமிர்தத்தை அனைவரும் சாப்பிட வேண்டும் என்பது தேவர்களின் விருப்பமாகும்.

  இதற்காக அவர்கள் அமிர்த கடத்துடன் ஒவ்வொரு இடமாக சென்றனர். அப்போது வில்வ மரங்கள் நிறைந்த, கண்கவர் வனம் ஒன்று இருப்பதை கண்டனர். அங்கிருந்த குளத்தை பார்த்ததும், தேவர்களுக்கு அதில் நீராட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

  உடனே அவர்கள் அந்த வில்வ வனத்தில் அமிர்த கடத்தை வைத்து விட்டு நீராட சென்றனர். நீராடி விட்டு வந்து மீண்டும் அமிர்த கடத்தை தூக்க முயன்றனர். முடியவில்லை.

  அந்த அமிர்த கடம் பூமியில் ஊன்றி விட்டது. பாதாளம் வரை பாய்ந்து அந்த அமிர்தம் சிவலிங்க சுயம்பு மூர்த்தியாய் மாறி இருந்தது.

  தேவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பொங்க அந்த அமிர்த கடத்தை பார்த்தனர். மறுவினாடி அமிர்த கடத்தில் இருந்து சிவபெருமான் தோன்றினார். தேவர்களுக்கு அருளாசி வழங்கினார்.

  அமிர்த கடத்தில் இருந்து (கடம் என்றால் குடம்) சிவன் தோன்றியதால் அவரை அமிர்த கடேசுவரர் என்று எல்லாரும் அழைத்தனர். அதன்பிறகு அந்த வில்வ வனத்தில் ஈசன் அருளால் ஆலயம் தோன்றியது.

  கடம் இருந்த ஊர் என்பதால் அந்த இடம் திருக்கடவூர் என்று அழைக்கப்பட்டது. அது நாளடைவில் மருவி திருக்கடையூர் ஆனது. இதுதான் திருக்கடையூரில் அமிர்தகடேசுவரர் தலம் உருவான வரலாறாகும்.

  Previous Next

  نموذج الاتصال