No results found

  பாவம், சாபங்களை போக்கும் திருக்காரவாசல் கோவில்


  சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல், தானே உருவான இயற்கை வடிவங்களை ‘சுயம்பு’ அல்லது ‘விடங்கம்’ என்று குறிப்பிடுவார்கள். ‘டங்கம்’ என்றால் ‘கல் சிற்பியின் சிற்றுளி’ என்று பொருள். ‘விடங்கம்’ என்றால் ‘சிற்பியின் உளி இல்லாமல்’ என்று அர்த்தம். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

  சப்த விடங்க தலங்கள் :

  ஒரு சமயம் அசுரர்களால், இந்திரனுக்கு பேராபத்து வர இருந்தது. அந்த ஆபத்தை இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியுடன் வெற்றி கொண்டான். தன்னுடைய வெற்றிக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தியிடம் ‘என்ன வேண்டும்,’ என்று கேட்டான் இந்திரன்.

  அதற்கு முசுகுந்தன், ‘நீங்கள் பூஜை செய்து வரும் விடங்க லிங்கங்களைப் பரிசாகத் தாருங்கள்’ என்று வேண்டினான். ஆனால் இந்திரனுக்கு அந்த லிங்கங்களை கொடுக்க மனமில்லை. தேவ சிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப் போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றை, முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட எண்ணினான்.

  இந்த நிலையில் முசுகுந்தன், செங்கழுநீர் பூவின் வாசம் கொண்ட ஒரு விடங்க லிங்கத்தை, தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடித்தார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன், தன்னிடம் உள்ள விடங்க லிங்கத்தையும், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டான். அந்த ஏழு சிவலிங்கங்களையும், 7 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் முசுகுந்த சக்கரவர்த்தி. இவையே ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

  அவை திருவாரூரில் உள்ள வீதி விடங்கர், திருநள்ளாறில் உள்ள நகர விடங்கர், நாகப்பட்டினத்தில் உள்ள சுந்தர விடங்கர், திருக்குவளையில் உள்ள அவனி விடங்கர், திருவாய்மூரில் உள்ள நீல விடங்கர், வேதாரண்யத்தில் உள்ள புவனி விடங்கர் மற்றும் திருக்காரவாசலில் உள்ள ஆதி விடங்கர் ஆகியவைகளாகும்.

  புராண காலத்தில் இந்தத் தலம் இருக்கும் இடம் முழுவதும், ‘காரகில்’ என்று மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்துள்ளது. எனவே ‘திருக்காரகில்’ என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதுவே காலப்போக்கில் மருவி, ‘திருக்காரவாசல்’ என்று மாறியதாக கூறுகிறார்கள். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அது 119-வது ஆலயமாக திகழ்கிறது.

  இந்தத் திருத்தலத்தில் உள்ள சிவபெருமான், ‘குக்குட நட னம்’ ஆடியபடி தரிசனம் தருகிறார். இந்த இறைவனை, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் தரிசனம் செய்து பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி பகவான், ‘ஞான தட்சிணாமூர்த்தி’யாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்ணகர்ஷண கால பைரவர் சன்னிதி உள்ளது. இந்த பைரவரை வழிபாடு செய்தால், இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

  பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இந்த திருத்தலத்தில் இருக்கின்றன. பிரம்மதேவர், தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இங்கு ஒரு குளம் உண்டாக்கி ஈசனை வழிபட்டுள்ளார். அவர் உண்டாக்கிய குளமே பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதே போல் ஆதிசேஷன், இங்குள்ள கிணற்றின் வழியாக கோவிலுக்குள் சென்று, இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். எனவே அந்த கிணற்று தீர்த்தத்திற்கு, சேஷ தீர்த்தம் என்று பெயர் வழங்கப்படுகிறது.

  ‘பிரமோதம்’ என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இந்தத் தலத்தில் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், நினைத்த காரியம் நிறைவேறி, வாழ்வில் பெரும் மகிழ்ச்சி வந்தடையும் என்பதால், விநாயகருக்கு, பிரமோத விநாயகர்’ என்று பெயர்.

  கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உருவம் உள்ளன. ஆலயத்தில் உள்ள உள் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டதாக காணப்படுகிறது. வாசலைத் தாண்டி உள்ளே சென்று வலம் வரும் போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சன்னிதி, தியாகராஜ சபை, விநாயகர், மகாவிஷ்ணு, ஆறுமுக சுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் மற்றும் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. ஆலய கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர், சிவலிங்க வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் கயிலாச நாயகி என்பதாகும்.

  இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், பவுர்ணமி நாட்களில் கோவிலில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  இத்தல இறைவனிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

  கடுக்காய் விநாயகர் :

  இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான், ‘கடுக்காய் விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை, மூட்டைகளாகக் கட்டி ஏற்றிக்கொண்டு தன்னுடைய ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் இந்த ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், ‘வண்டியில் இருப்பது என்ன?’ என்று கேட்டார். ஜாதிக்காய் என்று கூறினால் அதிக வரி கட்ட வேண்டியது இருக்கும் என்பதால், வணிகன் ‘வண்டியில் உள்ள மூட்டைகளில் கடுக்காய் இருக்கிறது’ என்று பொய் கூறினான்.

  அந்த நபர் மூட்டைகளை திறந்து காண்பிக்க கூறியபோது, அந்த மூட்டைகளில் கடுக்காய்களே இருந்தன. இதைக்கண்டு திடுக்கிட்ட வணிகன் கோவிலில் அமர்ந்து பொய் கூறியதை நினைத்து வருந்தினான். பின்னர் இத்தல விநாயகரை வழிபட்டு வேண்டியதை அடுத்து, கடுக்காய் முழுவதும் ஜாதிக்காயாக மாறின. இதனால் இத்தல விநாயகருக்கு ‘கடுக்காய் விநாயகர்’ என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

  ஆலயத்தில் வைகாசி விசாகம் அன்று பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் மாதப் பிறப்பு, தியாகராஜர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, வியாழன் தோறும் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர் பூஜை, அமாவாசை, பவுர்ணமி ஆகியவை விசேஷமாக நடைபெறுகின்றன.

  திருவாரூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்காரவாசல் திருத்தலம். திருவாரூரில் இருந்து பஸ்வசதி உள்ளது.

  Previous Next

  نموذج الاتصال