No results found

  திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் கொண்ட வரலாறு


  நிடத நாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை மணக்க இந்திரன், அக்னி, எமன், வருணன் ஆகியோரும் விரும்பினர். ஆனால் நளனை, தமயந்தி திருமணம் செய்ததால் பொறாமை கொண்ட அவர்கள் சனீஸ்வரரை நாடினர்.

  சனீஸ்வரர் நடந்ததை கேள்விப்பட்டு கோபம் கொண்டார். தேவர்களாகிய நம்மை விட்டு மனிதனையே தமயந்தி விரும்பினாள். நளனையும், அவளையும் ஒரு கணமும் வாழவிடாமல் பிரித்து வைக்கிறேன் என்று கூறி பூமிக்கு வந்தார். 12 ஆண்டுகள் காத்திருந்தார். நிடதமன்னனின் நீதியிலோ, ஆச்சாரத்திலோ, ஒழுக்கத்திலோ எந்த குறையும் காணப்படவில்லை. 

  ஒரு நாள் அவசரமாக காலில் நீர் பட்டும், படாமலும் கழுவிக் கொண்டு அந்தி வழிபாட்டிற்காக அரசன் அமர்ந்தான். அப்போது சனீஸ்வரர் அவனைப் பற்றினார். அதன் பின்னர் நளன் சூதாடி தமயந்தியை பிரிந்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்டி அவரது உருவமே மாறியது. தமயந்தி தன் தந்தையிடம் சென்று மறு சுயம்வரம் வைத்து இரண்டாவது சுயம்வரத்தில் நளனுக்கே மாலையிட்டாள்.

  இழந்த அரசை திரும்பப்பெற்றும் மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்ந்தும் நளனின் மனம் அமைதி பெறவில்லை. சித்தப் பிரமை பிடித்தவன்போல் இருந்தான். இந்த நிலையில் நிடத நாட்டுக்கு வந்த நாரத முனிவர், நளனை கண்டார். நீ இப்படி இருப்பது சனிபகவானின் செயல். ஆதலால் தல யாத்திரை செல்வாய் என்று கூறினார். நளனும் மனைவி மக்களுடன் காசி முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை செய்து வந்தான். 

  இறுதியாக திருநள்ளாறு வந்து சேர்ந்தான். பிரம்ம தீர்த்தத்தில் இறங்கி நீராடினான். திருநீறு தரித்து, சிவமந்திரத்தை கூறியபடி கோவிலுக்குள் வந்தான். உள்ளே அவன் காலடி எடுத்து வைத்ததும், சனிபகவான் மின்னல் போல நளனை விட்டு பிரிந்து வலது பக்க கோபுர சுவரில் உள்ள சிறிய மாடத்தில் ஒதுங்கி நின்றார். அன்று முதல் இன்று வரை மகா கீர்த்தியுடன் இத்தலத்தில் நிரந்தரமாக தங்கி இருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகிறார்.

  நளன் பெரிய சுமையை இறக்கியவன் போலத் தெளிவு பெற்று சிவபெருமானை வணங்கி, பெருமானே! இங்கு என்னைப்போல் சனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள்புரிந்து அவர்களது துன்பங்களை நீக்கி நன்மைகளை செய்ய வேண்டும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒரு காத விஸ்தீரணத்திற்கு சனிபகவான் அனுக்கிரக பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையும் அளிக்க வேண்டும். 

  இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் எனது பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டி, அதையே வரமாக பெற்றான். அதனை இறைவனும், சனி பகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தனர். சுவாமியின் அருளாணையின்படி ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரபகவானாக துவார மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். நளனுக்கு இங்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு நளேஸ்வரர் என்ற பெயரும், திருக்குளத்திற்கு நள தீர்த்தம் என்ற பெயரும் இந்த ஊருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் ஏற்பட்டது.

  தர்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கியதும் சனீஸ்வரர் அவரை விட்டு நீங்கினார். நளனின் வேண்டுகோளின்படி இந்த தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வரன் பட்டத்துடன் சனீஸ்வரர் என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார். மேலும் சனீஸ்வரர், நளனிடம் நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வி அறியாதவன். உன்னிடம் 7½ ஆண்டுகள் வசித்து வந்தேன். 

  உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கிறார்களோ அவர்களை நான் காப்பேன். நீ எனக்கு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீங்கும் என்று கூறி வரம் கொடுத்தார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரபகவானுக்கு பல திருவிழாக்களை நடத்தினான். இக்கோவில், தருமபுர ஆதீனம், தர்பாரண்யேஸ்வரசுவாமி தேவஸ்தானம் கீழ் செயல்படுகிறது.

  Previous Next

  نموذج الاتصال