No results found

  ஒளி வடிவில் அருள்பாலிக்கும் இடைக்காடர் சித்தர்


  தமிழ்நாட்டில் எண்ண முடியாத அளவுக்கு எத்தனையோ சித்தர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சித்தர்கள் உறைந்து அருள்பாலிக்கும் இடங்கள்தான் நாளடைவில் மிகப்பெரும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களாக மாறி இருக்கின்றன.

  ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த வகையில் பதினெண் சித்தர்களாக கருதப்படும் 18 சித்தர்கள் உறைந்துள்ள 18 ஆலயங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார்.

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலயத்துக்குள் எந்த பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இடைக்காடர் சமாதி திருவண்ணாமலை மலை உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

  பொதுவாக சித்தர்கள் பல்வேறு வகையான சமாதி நிலைகளை எட்டுவது உண்டு.

  மறுபிறவியற்ற நிர்விகற்ப சமாதி, நன்மை, தீமை இரு நிலையுடன் கூடிய விகற்ப சமாதி, உடலுக்கும், மனதுக்கும் சஞ்சீவி தன்மை அளிக்கும் சஞ்சீவனி சமாதி, உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரைப் பிரிக்கும் காயகல்ப சமாதி, நீண்ட யோகா பயிற்சி மூலம் உடலை ஒளி உடலாக மாற்றிக் கொள்ளும் ஒளி சமாதி மற்றும் மகா சமாதி, விசார சமாதி, விதர்க்க சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி என்று பலவகைகள் உண்டு.

  இதில் இடைக்காடர் ஒளி சமாதி ஆகி இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரது ஒளி சமாதியாக கருதப்படும் இடமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தான் மக்கள் அந்த ஒளி சமாதியை தெரிந்து கொண்டு வழிபட தொடங்கி உள்ளனர்.

  இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு, இடைக்காடர் சித்தர் யார்? அவர் எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார்? திருவண்ணாமலை தலத்தில் என்னென்ன அற்புதங்களை செய்தார் என்பதை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரில்தான் இடைக்காடர் சித்தர் அவதரித்தார். கோனார் என்று அழைக்கப்படும் இடையர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  இடைக்காடர் எப்போதும் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பார். பிறந்தது முதல் அவருக்கு இந்த சித்தி வாய்த் திருந்தது. ஆடுகளை மேய்ச்சலில் விடுவதற்காக காட்டுக்குள் அழைத்து செல்லும்போது அவர் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து சிவசிந்தனையில் ஏகாந்த நிலைக்கு சென்று விடுவார்.

  ஆடு மேய்ப்பது, பால் கறப்பது, புல்லாங்குழல் ஊதுவது, சிவசிந்தனையில் ஆழ்ந்து விடுவது.... இதுதான் இடைக்காடரின் தினசரி வாழ்வியல் வழக்கமாகும். தினமும் அவர் ஆடுகளை காட்டுக்கு அழைத்து சென்று மேய வைத்துவிட்டு வருவார். ஒருநாள் அப்படி அவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு மரத்தடியில் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

  அப்போது வான்மார்க்கத்தில் போகர் சித்தர் சென்று கொண்டிருந்தார். அவர் சிவசிந்தனையில் ஆழ்ந்துள்ள இடைக்காடரை பார்த்ததும் வான் மண்டலத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதால் பால் தருமாறு கூறினார். உடனே இடைக்காடர் ஆட்டு பால் கொடுத்து போகரை உபசரித்தார்.

  இதனால் மகிழ்ச்சி அடைந்த போகர் வைத்திய, வாத, யோக, ஞானங்களை இடைக்காடருக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று கொடுத்தார். இதனால் இடைக்காடர் சாதாரண நிலையில் இருந்து சித்த புருஷராக மாறினார்.

  போகரை குருவாக ஏற்று அவர் செயல்பட்டார். கருவூராரும் அவருக்கு குருவாக இருந்ததாக சொல்வார்கள். இடைக்காடர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. சித்தர்களின் கால தொடக்கம் நான்காம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே அப்போது இடைக்காடர் வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

  சித்தராக உயர்ந்த இடைக்காடர் நிறைய நூல்கள் எழுதினார். வைத்தியம் தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உயர்வானவை. அதுபோல முக்தி பெற அவர் பாடி உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நமது மனதை பண்படுத்தக்கூடியவை.

  ஜோதிடத்தில் அவர் எழுதிய கணிப்புகள் இன்று ஜோதிட உலகுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே இடைக்காடர் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்புகளை வைத்துதான் இப்போது ஆண்டு தோறும் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இத்தகைய ஆற்றல் கொண்ட இடைக்காடர் திருவண்ணாமலை தலம் உருவாகவும், புகழ் பெறவும் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதற்கான சான்றுகள் திருவண்ணாமலை தலம் முழுக்க உள்ளன. ஆனால் அண்ணாமலையாரை வழிபட செல்பவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே.

  இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆனால் போகர்தான் இவரை திருவண்ணாமலை தலத்துக்கு அனுப்பியதாக வரலாறு உள்ளது.

  திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்த உலகில் விரைவில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதையும் பஞ்சம் சுமார் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும் தனது ஜோதிட திறமையால் உணர்ந்தார். தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தி அந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது ஆடுகளுக்கு எருக்கம் இலையை உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார். பொதுவாக எருக்கம் செடிகள் எந்த கொடிய வறட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. எனவேதான் அவர் அதை தனது ஆடுகளுக்கு உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார்.

  பிறகு 12 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வரகு எனும் தானியத்தை மண்ணோடு சேர்த்து சுவர்கள் எழுப்பி குடிசை கட்டினார். அவர் எதிர்ப்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. எல்லா உயிரினங்களும் பஞ்சத்தில் சிக்கி அழிந்தன. ஆனால் இடைக்காடருக்கும், அவர் வளர்த்த ஆடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது ஆடுகள் எருக்கம் இலையை தின்று உயிர் வாழ்ந்தன. இடைக்காடர் குடிசை வீட்டு சுவரில் பதிய வைத்திருந்த வரகு தானியத்தை தட்டி எடுத்து ஆட்டு பாலில் காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்தார்.

  இதைப் பார்த்த நவக்கிரகங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நாம் திட்டமிட்டு கிரக நிலைகள் மூலம் வறட்சியை ஏற்படுத்தினாலும் இடைக்காடர் மட்டும் எப்படி உயிர் தப்பினார் என்று யோசித்தனர். இதற்கு விடை காண்பதற்காக இடைக்காடர் வாழும் குடிசைக்கு நவக்கிரகங்கள் வந்தனர். நவக்கிரகங்களை வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு உணவு தானியத்தையும், ஆட்டு பாலையும் கொடுத்து உபசரித்தார். ஆட்டு பாலில் சமைத்த உணவை சாப்பிட்டதால் நவக்கிரகங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது. அவர்கள் அப்படியே தூங்கிப் போனார்கள்.

  கிரகங்கள் மாற்றத்தால் தான் மழை பெய்யவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த இடைக்காடர் மழை பெய்ய வைக்கும் வகையில் நவக்கிரகங்களின் நிலைகளை மாற்றிப் படுக்க வைத்தார். அடுத்த கணமே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. உலகம் முழுக்க உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. தொடர் மழை காரணமாக உலகமே குளிர்ந்தது.

  தங்களை சுற்றி திடீரென குளிர்ச்சி தன்மை உருவாகி இருப்பதை உணர்ந்த நவக்கிரகங்கள் விழித்து எழுந்தனர். உலகில் பஞ்சம் நீங்கி எங்கு பார்த்தாலும் தண்ணீர் வளம் அதிகமாகி குளிர்ச்சி பெற்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இடைக்காடர் மூலம்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

  இடைக்காடரை இதற்காக பாராட்டினார்கள். அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து விட்டு சென்றனர். திருவண்ணாமலை தலத்தில் நடந்த இந்த அதிசயம் உலகம் முழுக்க பரவியது. இதற்கு என்ன சான்று இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். திருவண்ணாமலை தலத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

  திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருவண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருவண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

  திருவண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

  கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துக்கள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

  இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும். 

  Previous Next

  نموذج الاتصال