No results found

  உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் உருவான வரலாறு


  உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் பெயரளவில் நாச்சியார் கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கமலவல்லி நாச்சியார் தாயாராக இருந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நடைமுறைகள் தான் இங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் இங்கும் நம்பெருமாள் தான் உற்சவர். வருடம் ஒரு முறை பங்குனி தேர் திருவிழாவின்போது நம்பெருமாள் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருக்க இங்கு வருவதே சேர்த்தி சேவையாகும். சேர்த்தி சேவைக்காக ஆறு, காடு, வயல் வாய்க்கால் வரப்புகளை எல்லாம் தாண்டி நம்பெருமாளை ஸ்ரீ பாதம் தாங்கிகள் எனப்படும் கோவில் பட்டர்கள் மற்றும் பணியாளர்கள் நம்பெருமாளை பல்லக்கில் வைத்து தூக்கி கொண்டு வருகிறார்கள்.

  பின்னர் சேர்த்தி சேவை முடிந்ததும் அதே வழியாக மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று கண்ணாடி அறையை அடைகிறார் நம்பெருமாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்க மன்னாரின் மகள் ஆண்டாளாக அவதரித்து பெருமாளையே மணந்து கொண்ட மகாலட்சுமியை போன்று தான் கமலவல்லியும் இம்மண்ணுலகில் ஒரு மன்னனின் மகளாக அவதரித்து ரெங்கநாதர் மீது காதல் கொண்டு அவரை அடைந்து உள்ளார். இதன் அடிப்படையில் நாச்சியார் கோவில் உருவானது எப்படி? என்பதற்கு ஒரு தனி வரலாறே உள்ளது. முற்கால சோழ மன்னர்களில் ஒருவனான நந்த சோழன் உறையூரை தலைநகராக கொண்டு ஆண்டு கொண்டிருந்த கால கட்டத்தில் அவனுக்கு மகளாக வளர்ந்தவர் தான் கமலவல்லி. குழந்தை பேறு இல்லாத மன்னன் வேட்டைக்கு சென்ற இடத்தில் ஒரு குளத்தில் மலர்ந்திருந்த தாமரையில் கிடைத்த பெண் குழந்தையை எடுத்து வளர்த்ததால் அதற்கு கமலவல்லி என பெயர் சூட்டி வளர்த்தான். பருவ வயதை அடைந்த கமலவல்லி தன் தோழிகளுடன் சென்றபோது குதிரையில் மாப்பிள்ளை கோலத்தில் வலம் வந்த ரெங்கநாதரை கண்டதால் அன்று முதல் அவர் மீது காதல் கொண்டாள்.

  ரெங்கநாதரையே நினைத்து உருகினாள். தனது மகளின் நிலையை அறிந்து வேதனையில் மன்னன் தவித்த போது அவனது கனவில் தோன்றிய ரெங்கநாதர் மகாலட்சுமியையே உனது மகளாக நாம் படைத்தோம். அவளை எனது சன்னதிக்கு திருமண கோலத்தில் அனுப்பி வை என ஆணையிட மன்னனும் மகிழ்ச்சியுடன் கமலவல்லியை மணப்பெண்ணாக அலங்கரித்து சேனை பரிவாரத்துடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து ஒப்படைத்தான். அப்போது கமலவல்லியை ரெங்கநாதர் ஆட்கொண்டார் என்பது ஐதீகமாகும். ரெங்கநாதரே மாப்பிள்ளையாக வந்து தனது மகளை மணந்து கொண்டதன் நினைவாக உறையூரில் அவன் கட்டிய கோவிலே நாச்சியார் கோவிலாகும்.

  ஊடல் உற்சவம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பல மன்னர்கள் திருப்பணி செய்து இருக்கிறார்கள். இங்கு புஜங்க சயன கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீரெங்கநாதர் ராஜாவுக்கு எல்லாம் ராஜாவாக இந்த உலகத்தையே ஆளும் ராஜாவாக கருதப்படுகிறார். ஒரு ராஜாவுக்கு செய்யப்படும் மரியாதைகள் போன்றே அன்றாட பூஜைகள் ரெங்கநாதருக்கு நடத்தப்பட்டு வருகிறது. ரெங்கநாதர் ராஜா என்பதால் அரண்மனை போன்ற ஸ்ரீரங்கம் கோவிலில் பட்டத்தரசியாக இருப்பவர் தான் ஸ்ரீரெங்கநாச்சியார் எனும் தாயார். தாயார் தனது சன்னதியை விட்டு எங்கும் செல்லாதவர் என்பதால் படிதாண்டா பத்தினி என்ற பெயரும் இவருக்கு உண்டு. வருடத்தில் ஒரு முறை மட்டுமே தாயார் நம்பெருமாளுடன் சேர்த்தி சேவை மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

  இதற்காக நம்பெருமாள் அன்றைய தினம் காலை 11 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி தாயார் சன்னதிக்கு வருவார். அப்போது முதலில் தாயார் சன்னதி கதவு திறக்காது. தயிர் மற்றும் பால் ஆகியவற்றை வீசி எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும். இதற்கு ‘ஊடல் உற்சவம்’ என்று பெயர். நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையே ஏற்படும் இந்த ஊடலை பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் தலையிட்டு சமரசம் செய்வார். அதன் பின்னரே இருவருக்கும் இடையே சமாதானம் உண்டாகி சேர்த்தி மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Previous Next

  نموذج الاتصال