இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) உலக காதலர் தினம்.
காதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை காதலைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள் இல்லை. திருக்குறளின் இன்பத்துப்பாலை விட யாரால் காதலை உயர்வாகச் சொல்லிவிட முடியும்?
தலைவன் தலைவியைப் பார்த்து, யான் நோக்கும் போது நிலம் நோக்குகிறாய், நான் நோக்காத போது நீ எனை நோக்குகிறாய் என்று சொன்னார் வள்ளுவர். அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாகக் கலப்பதை செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல என்று குறுந்தொகை இலக்கியம் முன்வைத்தது. மகாகவி பாரதி, “உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று சொல்லி, “காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று பாடினார்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியாரின் அற்புத வரிகள் தமிழ்க் காதலின் சான்றுகள், தமிழின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பியம், தமிழரின் வாழ்வை களவு வாழ்க்கை என்றும், கற்பு வாழ்க்கை என்றும் அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. ஆனால் இன்று காதல் அதே உன்னதத்தோடு இருக்கிறதா? அன்பர்கள் தினம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பிப்ரவரி 14-ந் தேதியை வேலன்டைன் தினம் எனும் காதலர் தினமாக உலகநாடுகள் கொண்டாடத் தொடங்கின. உலகநாடுகள் முழுக்க வாழ்த்து அட்டைகளால் தங்கள் அன்பைத் தெரியப்படுத்தியதைப் பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிநாடுகளைப் பார்த்து எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், எது உண்மைக் காதல் என்று வரையறுக்காமல் காதலர் தினத்தையும் அப்படியே இறக்குமதி செய்துகொண்டோம்.
கண்டதும் காதல், வாட்ஸ்-அப் காதல், முகநூல் காதல், டுவிட்டர் காதல், பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு காதல்களாய் உருப்பெற்று ஒரு பிப்ரவரியில் மலர்ந்து, அடுத்த பிப்ரவரியில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று விவாகரத்து மனுவைத் தந்துகொண்டிருக்கும் நிலையைக் கண்டுகொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழும் காதல், வேறுவேறு வடிவங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் குடும்பங்களைக் கண் எதிரே குலைத்துக் கொண்டிருப்பதை அன்றாடச் செய்தித்தாள்களின் செய்திகளிலிருந்து கண்கூடாய்க் கண்டுகொண்டிருக்கிறோம்.
இருவரின் மனம் தொடர்பான காதல் இன்று சமூகத்தின் போக்கால் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்படும் கொண்டாட்டச் செய்தியாய் மாறியுள்ளது. தங்க ஊசி கையில் இருக்கிறது என்பதற்காக நம் கண்களைக் குத்திக்கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின் பருவத்து பிள்ளைகள் காதலர் தினம் என்ற பெயரில் படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வீக்கத்தை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள இயலுமா? எது காதல்? எது காதல் இல்லை என்பது பெரும்பாலும் வாழ்வைத் தொலைத்த பின் தான் இருபாலருக்கும் தெரிகிறது. காதல் தோல்விகள் இளையோரின் உயிரைக் குடிக்கும் செயலாக மாறும்போது சமூகம் சங்கடப்படுகிறது. ஒன்றுபட்ட அன்புடைய இரு உள்ளங்கள் கலப்பதை சங்கத்தமிழர்கள் அகம் என்று சொன்னார்கள், அதாவது இருவரின் உள்ளம் சார்ந்த செயல் என்று சொன்னார்கள். ஆனால் காதல் என்ற பெயரில், சம்பந்தமே இல்லாத பெண்களின் வாழ்வில் விளையாடும் கொடூரங்களைக் கண்டபின்னும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இனியும் நம் தமிழ் மண்ணில் நிகழவேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.