இறைவனை வழிபட விரும்புவோர் சொற்களைக் கொண்டும், பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கமாக ஒன்று. ஆனால், இறைவனைக் கல்லெறிந்து வழிபட்ட, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒரே அடியார் சாக்கியர் மட்டுமே. இவருக்கும் அன்பு காட்டி அருள் வழங்கி இறைவன் தன் திருவிளையாடலை நிகழ்த்திய தலம், காஞ்சீபுரத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்து இறைவனை, திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றார் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது. பல்வேறு சித்தர்களும், முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கொங்கண முனிவர். இறைவனின் திருமேனி புகழை உணர்த்த நினைத்த கொங்கண முனிவர், இறைவனையே சோதிக்க நினைத்தார்.
கொங்கண முனிவரிடம், ஒரு பொருளை எதன் மீது வைத்தாலும், அதனை நீராக்கிவிடும் சக்தி கொண்ட குளிகை இருந்தது. அதனை சிவலிங்கத்தின் மீது வைத்து சோதித்தார். அக்குளிகை நீராக மாறுவதற்குப் பதிலாக, சிவலிங்கம் அதனை உள்ளே இழுத்துக் கொண்டது. இதனைக் கண்டு வியப்புற்ற கொங்கண முனிவர், சிவலிங்கத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி தவம் செய்து பேறு பெற்றார். இப்படிப் பல்வேறு பெருமைகளின் இருப்பிடமாகத் திகழ்வது வீரட்டானேசுவரர் திருக்கோவில் ஆகும்.
சாக்கியர் யார்? :
தொண்டைவள நாட்டிலுள்ள, திருச்சங்கமங்கை என்ற ஊரில், வேளாளர் குளத்தில் உதித்த சாக்கியர், காஞ்சீபுரம் சென்று ஞானம் பெறுவதற்குரிய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தார். முடிவில் சாக்கிய சமயம் எனப்படும் புத்த மதத்தில் சேர்ந்தார். என்றாலும், அதில் அவர் மனம் அமைதி பெறவில்லை. செய்வினை, செய்பவன், வினையின் பயன், அதனைக் கொடுப்பவன் என்ற நான்கையும் ஏற்றுக் கொள்கின்ற இயல்பு சைவம் ஒன்றுக்கே உள்ளது என்பதை உணர்ந்தார்.
எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
தன்னை மிகும் அன்பினால் அறவாமை தலைநிற்பார்
- பெரியபுராணம்
இதற்கிணங்க, புறத்தில் புத்த மதத்திற்குரிய காவி உடையை விட்டு விடாமல், அகத்தில் சிவனடியாராக வாழத் தொடங்கினார். சாக்கியர் முதன் முறையாகச் சிவன் மீது கல்லெறிவதற்குக் காரணமாக அமைந்தது அவரது உணர்வேயாகும். அவரது செயல் அவருக்கு மன நிறைவையும், அமைதியையும் தந்தது. எல்லை மீறிய ஈடுபாட்டால் அன்றாடம் கல்லெறியத் தொடங்கினார். இதனால் மற்றவர்கள் இச்செயல் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றவில்லை.
அவ்வாறு எறிகின்ற நேரத்தில் அவரது மனதில் தோன்றிய ஆனந்தம், இறைவனின் திருவருள் குறிப்பு என்று நினைத்த சாக்கியர், நாள்தோறும் சிவலிங்கத்தின் மீது கல்லெறியும் கடமையைச் செய்துவந்தார். ஒருமுறை கல்லெறிய மறந்து உண்பதற்கு அமர்ந்தார். அப்போது திடீரென சிவபெருமான் மீது கல்லெறிய மறந்ததை நினைத்து, சாப்பிடாமல் ஓடிச் சென்று இறைவன் மீது கல்லெறியக் கையைத் தூக்கினார். அப்போது அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், அவருக்குக் காட்சி தந்து அவரைத் தன் அடியாராக ஏற்றுக் கொண்டார். அத்துடன் அவரைக் கயிலைக்கும் அழைத்துச் சென்றார் என்கிறது பெரிய புராணம்.
ஆலய அமைப்பு :
பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய சிறிய வாசலும் பழுதடைந்த கதவுகளும், நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்ததும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள் உடைந்த நிலையில் கீழே கிடக்கின்றன. சற்றுத் தள்ளியதும் எளிய வடிவில் இறைவன் கருவறை அமைந்துள்ளது.
இடதுபுறம் விநாயகர், அருகில் நந்திதேவர், பலிபீடம் அடுத்து இரு ஜோடி லிங்கங்கள் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றன. அவற்றினிடையே இரண்டு ஜோடி பாதங்கள் கருங்கற்களில் வடிக்கப்பட்டுள்ளன. இவை நடராஜர், சிவகாமி அம்மையின் திருவடிகள் எனக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற தெய்வங்களான சூரியன், பைரவர் ஆகியோரின் பாதங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இப்பாதங்களை ஒட்டி, அழகிய கருங்கல் சிற்பத்தில் சிவன் - பார்வதியின் அழகிய திருக்கோலம் காணப்படுகிறது.
வீரட்டானேசுவரர் :
இவற்றின் கிழக்கே நோக்கினால், அழகிய கோலத்தில் மூலவர் வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரின் பின்புறம் மதிற்சுவர் மாடத்தில் ஆதிமூலவர் காட்சி தருகிறார். இவர் மீது ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன. இவரே சாக்கியரால் கல்லடி பட்டவராக இருக்கக்கூடும் என்கிறார்கள்.
இவரின் எதிரே விநாயகருக்கு அருகில் வெகு எளிய உருவில் அழகிய சிலையாகச் சாக்கிய நாயனார் தன் கைகளில் பெரிய கல்லைப் பிடித்துக் கொண்டு, அதை இறைவன் மீது எறியும் கோலத்தில் இருக்கிறார். இவரைக் காணும் பொழுது கல்லெறிந்து வழிபட்ட சம்பவம் நம் மனத்திரையில் ஓடுகின்றது.
ஆலயத்தின் வெளிப்புறம் உயரமான கல்மேடையில் சிறிய வடிவில் நந்தி தேவர் இறைவனை நோக்கிக் காட்சி தருகிறார். நந்திதேவரின் பின்னால் சற்று தொலைவில் ஏகாம்பரேஸ்வரர் கோபுர தரிசனத்தைக் காண முடிகிறது. எண்ணற்ற பெருமைகள் கொண்ட இத்திருக்கோவில், இன்று சிறிய கருவறை மட்டுமே பழம்பெரும் ஆலயம் என்பதற்குச் சாட்சி கூறுகின்றது. இந்த ஆலயத்தில் பவுர்ணமி மற்றும் பிரதோஷ விழா எளிய முறையில் நடந்து வருகின்றது. ஒரு கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது.
அமைவிடம் :
காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரம் நகரிலுள்ள கோனேரிக்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு முன்னால், அப்பாராவ் தெருவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இதேபோல, புதிய ரெயில் நிலையம் இறங்கி கிழக்கே 1 கிலோமீட்டர் தொலைவில் அப்பாராவ் தெரு வழியே சென்றாலும் ஆலயத்தை அடையலாம். தாமல்வார் தெருவும், அப்பாராவ் தெருவும் இணையும் இடமே திருக்கோவில் அமைவிடமாகும்.
தீய நோக்கமின்றி உள்ளன்போடு வழிபடும் எவரையும் ஏற்றுக் கொள்பவன் இறைவன் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குபவர் வீரட்டானேசுவரர். கல்லெறிந்து வழிபட்டவருக்கே பேறு தந்து கயிலைக்கு அழைத்துச் சென்ற இறைவன், உள்ளன்போடு தனக்குத் திருப்பணி செய்யும் அடியாரைத் தலைமீது வைத்து தாங்குவான் என்பதில் ஐயமில்லை.
ஆலய தரிசனம் செய்ய, ஆலயத்தை ஒட்டியுள்ள வீட்டில் அணுகினால் எளிதில் தரிசிக்கலாம்.