No results found

  விலங்கு தோஷம் நீக்கும் வில்லிப்பாக்கம் கோவில்


  இறைவனின் தலங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சிறப்புக்களுடன் திகழ்கின்றன. சில நோய் தீர்க்கும் தலங்களாகும். சில தோஷம் நீக்கும் தலங்களாகவும் இன்னும் சில சிவப்பேறு அளிக்கும் தலங்களாகவும் விளங்குகின்றன. அந்த வகையில் விலங்குகள், பறவைகள் போன்றவை வணங்கி தலமாகவும் திகழ்கின்றன. இந்த வகையில் பூனை வணங்கிப் பேறு பெற்ற தலமாகத் திகழ்வது சூணாம்பேடு வில்லிப்பாக்கம் தலமாகும். இத்தலம் விலங்குகளுக்கு அறியாமல் செய்த தீங்குகளுக்கு தோஷம் நீக்கும் தலமாக விளங்குவது சிறப்பாகும்.

  பூனை - வேடுவன் :

  சிவபெருமானின் வாயில் காப்பாளராகத் திகழும் நந்திதேவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். ஒருவன் காந்தன், மற்றொருவன் மகா காந்தன். இவர்கள் இருவரும் நந்திதேவரின் சிவபூஜைக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பது வழக்கம். அதன்படி ஒரு நாள் காலை பூக்கள் கொண்டுவர இருவரும் சென்றனர். ஒரு குளத்தில் இருந்த வெண்தாமரைப் பூக்களைப் பறித்தனர். அப்போது கைதவறி ஒரு பூ நீரிலும், மற்றொன்று கரையிலும் விழுந்தன. நீரில் விழுந்த பூ மீனாகவும், கரையில் விழுந்த பூ கிளியாகவும் மாறின. இதனால் வியப் படைந்த அவர்கள், மீண்டும் அதைச் செய்தனர். அந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போகவே, மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருந்தனர்.

  இதற்கிடையில், காலை நேர பூஜைக்கு பூக்கள் வராததைக் கண்டு கோபமடைந்த நந்திதேவர், குளக்கரைக்கு வந்தார். சீடர்களின் விளையாட்டுப் போக்கினைக் கண்ட நந்திதேவர், கோபக்கனலுடன் சீடர்களை நோக்கிய போது, காந்தன் பூனை போல் விழிக்கவும், மகா காந்தன் சுரட்டுக்கோலை வைத்துக் கொண்டு நின்றனர். உடனே நந்திதேவர், காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் மாற சாபமிட்டார். பூனையாகவும் வேடுவனாகவும் மாறிய சீடர்கள், தங்கள் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்டினர்.

  இதனால் மனமிரங்கிய நந்திதேவர், ‘காஞ்சி மாநகருக்குத் தென்கிழக்குத் திசையில் ஐந்து காத தூரத்தில் புண்டரீகப் புஷ்கரணி என்ற தீர்த்தமும், அதனருகில் அகஸ்தீஸ்வரர் என்ற மகாலிங்கமும் உள்ளன. நீங்கள் இருவரும் தனித்தனியே அங்குச் சென்று ஒருவருக்கொருவர் அறியாமல் குளத்தில் மூழ்கி, அகஸ்தீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். அப்போது நீங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் போது உங்கள் சாபம் விலகும்’ எனக் கூறினார்.

  அதன்படியே பூனையான காந்தன், முதலில் சிவ வழிபாடு செய்து முடிப்பதும், அதன்பின் வேடுவனான மகா காந்தன் பூஜை செய்வதும், தனித்தனியே தொடர்ந்து வந்தது. வேடுவனுக்கு ஒரு ஐயம் இருந்து கொண்டே வந்தது. நாம் பூஜை செய்வதற்கு முன்பாகவே வேறு யாரோ பூஜைசெய்து விடுகின்றனரே. அது யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. ஒரு வழியாக அதற்கான நேரமும் வந்தது. சீக்கரமாகவே பூஜை செய்ய முனைந்த வேடுவன் ஆலயம் சென்றான். அப்போது அங்கே ஒரு பூனை சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து கோபமடைந்த வேடுவன், பூனை மீது அம்பெய்தான். பூனை சற்று நகர்ந்துவிட, அம்பானது சிவ லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. இந்நிலையில், பயந்த வேடுவனும் பூனையும் ஒருவரையொருவர் நோக்க, சாப விமோசனம் கிடைத்தது.

  பூனை காந்தனாகவும், வேடுவன் மகா காந்தனாகவும் பழைய நிலைக்கே உருமாறினர். இருவரும் வியப்பும் நடுக்கமும் மேலிட்டு சிவபெருமானை வேண்டி நின்றனர். பெருமானுக்கு ஏற்பட்ட இடையூறினை மன்னிக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனும் அவர்களுக்கு அருள் வழங்கினார். அன்றுமுதல் இறைவன் திருப்பெயர் கிராத மார்ஜாலீஸ்வரர் என்றும், இவ்வூர் கிராத மார்ஜாலபுரம் என்றும் வழங்கப்பட்டது. கிராதன் என்பதற்கு வேடுவனும், மார்ஜாலம் என்பதற்கு பூனை என்பது பொருள்.

  கங்கையின் பாவம் நீங்கிய தலம் :

  அனைவரின் பாவத்தைப் போக்கும் அன்னையாக விளங்கும் கங்கை, தன் தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனை வேண்டி நின்றாள். அப்போது தோன்றிய இறைவன் இத் தலத்தின் பெருமையைக் கூறி, புண்டரீக தீர்த்தத்தில் நீராடி, மகாலிங்கத்தை வணங்கினால், தோஷம் நீங்குமென்று அருளினார். அவ்வாறே செய்த கங்கை தன் தோஷங்களை நீக்கியதாகப் புராணம் கூறுகிறது. அன்று முதல் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும் வழங்கப்பட்டது.

  அகத்தியர் வழிபட்டது :

  கயிலையில் நடந்த சிவன், பார்வதி திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்களும் ரிஷிகளும் கயிலாய மலையில் கூடி நின்றதால், பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. இதனால் தென்திசை மேலெழும்ப ஆரம்பித்தது. உயிரினங்கள் பீதியடைந்தன. இதனைச் சரிசெய்ய இறைவன், அகத்தியரிடம் தென்திசை நின்று பாரத்தைச் சரிசெய்ய பணித்தார். அதன்படியே அகத்தியர் தன் கமண்டலத்தில் எண்ணற்ற பாணலிங்கங்களை எடுத்துக் கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றார்.

  வழியில் சிவபூஜைக்குரிய காலங்களில் தன் கமண்டலத்திலிருந்து பாணலிங்கங் களில் ஒவ்வொன்றாக வைத்து பூஜை செய்து காஞ்சி மாநகரம், திருக்கழுக்குன்றம் கடந்து ஒரு வில்வ வனத்தைக் கண்டார். அப்போது பூஜைக்குரிய நேரம் வந்துவிட்டது. அங்கிருந்து தீர்த்தத்தில் நீராடி, வெளியே வந்தபோது அங்கே கொன்றை மரத்தடியில் ஒரு மகாலிங்கம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரை வணங்கி தனது பூஜையை நிறைவு செய்தார். அதன் அருகில் வழக்கமான முறையில் ஒரு பாண லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் அந்த இறைவனுக்கு மகாலிங்கம் என்றும், அகஸ்தீஸ்வரர் என்றும் பெயர் விளங்கியது. இதன்பின் பொதிகை மலை சென்று பூமியைச் சமன்படுத்தினார்.

  உற்சவர் சிலை

  தெய்வங்கள் பூசித்தது :

  மகாபலி சக்ரவர்த்தி வதம் செய்த திருமால் தன் தோஷம் நீங்க, இத்தலத்து இறைவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதாகவும், இதேபோல, பிரம்மதேவன் படைப்புத் தொழிலில் மேம்படவும், தேவேந்திரன் அகலிகை வஞ்சித்த தோஷம் நீங்கவும், சந்திரன் தட்சன் செய்த யாகத்திற்குத் தடையாக இருந்ததால் ஏற்பட்ட தோஷத்தையும் இத்தலத்து இறைவன் நீக்கியதாகக் கூறப் படுகிறது.

  இறைவன் - இறைவி :

  தெற்கு நோக்கிய எளிய வாயில் ராஜகோபுரமின்றி அமைந்துள்ள வாயிலைக் கடந்ததும் கொடிமரம் நம்மை வரவேற்கிறது. அதன் நேரே வலது புறம் தனி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அன்னையின் பெயர் மவுத்திகாம்பாள் என்றும், முத்தாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது. எளிய வடிவில் அன்னை அருள் வழங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

  இந்தச் சன்னிதியைக் கடந்து மேற்கு நோக்கினால், கருவறை யில் மூலவர் அகஸ்தீஸ்வரர் கம்பீரமாகக் காட்சி தருகிறார். தெய்வங்களும் தேவர்களும் விலங்குகளும் வழிபட்ட தெய்வம் இவரே. இவ்வாலயத்தில் புடைப்புச் சிற்பமாக ஏகபாத மூர்த்தி சிற்பம் தட்சிணாமூர்த்தியின் அருகே அமைந்துள்ளது. அதேபோல மூலவர் கருவறையின் பின்புறம் ஆலய ஐதீகங்களை நினைவுபடுத்தும் வகையில் கிராதநாதர், கங்காதேவி, வேடுவன் ஆகியோர் சிலைகளும் அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரே புண்டரீக புஷ்கரணி என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

  இத்திருக்கோவிலின் தலமரம் சரக்கொன்றை. இது ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

  விநாயகர் சதுர்த்தி, ஆருத்ரா உற்சவம், நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற அனைத்து விழாக்களும் எளிய முறையில் சிறப்புடன் நடைபெறுகின்றன.

  இத்திருக்கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  பூனைக்குப் பேறு தந்த தலமாக இது விளங்கினாலும், பூனை உள்ளிட்ட எந்த விலங்குகளுக்கும், மனிதர்கள் தாங்கள் அறியாமல் செய்த பாவங்களும் தோஷங்களும் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

  அமைவிடம் :

  காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில், சூணாம்பேடு அருகே அமைந்துள்ளது வில்லிப்பாக்கம். சென்னையில் இருந்து தென்மேற்கே 110 கி.மீட்டர், புதுச்சேரியிலிருந்து வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுராந்தகத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் வில்லிப்பாக்கம் உள்ளது. சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணாங்குபட்டு என்ற இடத்திலிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் இருக்கிறது. வெண்ணாங்குபட்டிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு வழியாகவும் வில்லிப்பாக்கம் வரலாம். சூணாம்பேட்டிற்கும் வில்லிப்பாக்கத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவு மட்டுமே.

  Previous Next

  نموذج الاتصال