No results found

  மகளிர் நலனில் சித்த மருத்துவம்- தாமதமாகும் கருத்தரிப்பு, உதவும் மூலிகைகள்


  திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்ததோ இல்லையோ அதற்குள் சமூகத்தில் பலரின் கேள்வியாக இருப்பது, 'ஏதேனும் விசேஷச் செய்தி உண்டா?' என்பது தான். காலம் காலமாக கேட்டு பழக்கப்படுத்திய, இந்த ஒரு கேள்வியால் தான் இன்று செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவெடுத்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

  தம்பதிகள் திருமணமாகி அடுத்த மாதமே, கர்ப்பத்தை உறுதி செய்யும் சிறுநீர் பரிசோதனையில் ஒரு கோடு வருகிறதா? அல்லது இரண்டு கோடு வருகிறதா? என்ற எதிர்பார்ப்பிலே காலத்தைக் கடக்க துவங்கிவிடுகின்றனர். ஒரு வருடம் கூட திருமண வாழ்க்கையை முழுமையாய் கடைபிடிக்காமல் செயற்கை கருத்தரிப்பு மையங்களை இளம் தலைமுறையினர் நாடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

  அடுத்த மாதம் யாரேனும் கேள்விகேட்டால் நேர்மறையான பதிலை கூற வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்தரிப்பு மையங்களை புதுமண தம்பதியினர் நாடுவதில் இருந்தே, இயல்பான வாழ்க்கையை விடுத்து, மருத்துவ தேசத்திற்குள் நுழைவது என்பது இன்றைய நவீன வாழ்வியலுக்கு கிடைத்த பரிசு எனலாம். ஆனால் அத்தகைய பரிசால் அதிக பாரம் பெண்களுக்கு தான்.

  அந்த காலத்தில் எங்க பாட்டிக்கு நவக்கிரகங்களாம், எங்க அம்மா கூட பிறந்தவங்க பஞ்ச பாண்டவர்களாம் என்பவற்றை எல்லாம் இனி வரும் தலைமுறையினர் வரலாறாகத் தான் பார்க்க வேண்டியிருக்கும் போல் உள்ளது என்பது வருத்தமான நிகழ்வு. மாறிப்போன உணவு பழக்கவழக்கமும், வாழ்வியல் நெறிமுறைகளும் தாமதமாகும் கருத்தரிப்புக்கு காரணம் ஆகிவிட்டன.

  உணவுமுறைக்கும், வாழ்வியல் நெறிமுறைக்கும், தாமதமாகும் கருத்தரிப்புக்கும் என்ன தொடர்பு இருக்க போகிறது? என்று பலருக்கும் ஐயப்பாடு ஏற்படும். உணவையே மருந்தாக பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள் என்று சித்தமருத்துவம் கூறுகின்றது. திருமணமான புதுமண தம்பதியினரை விருந்துக்கு அழைத்து வெற்றிலைப்பாக்கு தாம்பூலம் கொடுத்து, ஆண்மையைப் பெருக்கி மணமகனை கருவை உருவாக்க தயார் செய்வது நமது பாரம்பர்யம். வெங்காயம் எனும் மிகப்பெரிய ஆண்மைப்பெருக்கி மருத்துவ மூலிகையை தயிருடன் சேர்த்து பச்சடியாக்கி மதிய வேளைகளில் கொடுத்து வருவது இன்றும் தென்மாவட்ட வழக்கு முறை.

  தாமதமாகும் கருத்தரிப்பு என்பது ஆண், பெண் இருவரில் பாதிப்பு இருவருக்கோ, அல்லது யாரேனும் ஒருவருக்கு மட்டுமோ இருக்கலாம். தாமதமாகும் கருத்தரிப்புக்கு பெண்கள் மட்டுமே பொறுப்பல்ல. ஆண்களுக்கும் அதில் சரிப்பங்கு உண்டு. அதனை, மருத்துவரை அணுகி உறுதி செய்து தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

  அதன்படி ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் பல மூலிகைகள் சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிலப்பனைக்கிழங்கு, ஓரிதழ் தாமரை, அமுக்கரா கிழங்கு போன்ற பல மூலிகைகள் அந்த வரிசையில் அடங்கும். அமுக்கரா கிழங்கு எனும் மூலிகை ஆண், பெண் இருவருக்கும் ஹார்மோன் அச்சில் செயல்பட்டு முறையான ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி கருத்தரிப்புக்கு உதவும் எளிய மூலிகை ஆகும்.

  அஸ்வம் என்றால் குதிரை என்பது பொருள். முக்கியமாக குதிரையை போன்ற வலிமையை ஆண்களுக்கு உண்டாக்கும் மூலிகை தான் அஸ்வகந்தா அல்லது அமுக்கரா கிழங்கு. இன்னும் பலப்பல மூலிகைகளும், பற்பம், செந்தூர மருந்துகளும் ஆண்களின் வீரியத்தை அதிகரிக்க சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆக, ஆண்களால் ஏற்படும் தாமத கருத்தரிப்புக்கு அவர்கள் சித்த மருத்துவத்தை நாடுவது என்பது நல்லபலன் தரும். அதை விடுத்து நன்கொடையாளரை அணுகுவது என்பது அறியாமையின் உச்சம்.

  பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகள், தைராய்டு சுரப்பி கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், கருமுட்டை வெளிப்படாத மாதவிடாய், கருப்பை சுவர் தடிப்பு, இனப்பெருக்க பருவத்திலே உண்டாகும் கருப்பைக்கட்டிகள். சினைப்பை குழாயில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு அல்லது சினைப்பாதை அடைப்பு போன்ற பல நோய்நிலைகள் தாமதமாகும் கருத்தரிப்புக்கு காரணமாக உள்ளன.

  மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்நிலைகளில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளும், வலி நிவாரணி மாத்திரைகளும், கருமுட்டை விடுப்பினை தடுப்பதாகும், இதனால் கருத்தரிப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே இந்த நோய்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பலரும் சித்த மருத்துவத்தை நாடினால் விரைவில் நலம் பெறுவதோடு கருத்தரிப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாது.

  பெண்களுக்கு தாமத கருத்தரிப்பினை உண்டாக்கும் நோய்நிலைகளுக்கு தகுந்தாற் போல் மருத்துவம் மேற்கொள்ளுதல் சிறப்பு. சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் கருத்தரிப்பை துரிதப்படுத்தும் விதத்தில் உள்ளன. மாதுளை, நெருஞ்சில், அமுக்கரா கிழங்கு,நொச்சி, சதாவேரி, விஷ்ணுகிரந்தி, நிலக்கடம்பு, மலைவேம்பு, கரிசாலை ஆகியன அவற்றில் சில.

  நெருஞ்சில் எனும் மூலிகை தாமத கருத்தரிப்பில் ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல பயனளிக்கும். காலை குத்தும் நெருஞ்சில் முள்ளா? கருப்பைக்கு நல்லது என்ற ஐயம் பலருக்கும் ஏற்படும். இதன் சிறப்பு ஆண் மற்றும் பெண் ஹார்மோன் சுரப்பை சரிசெய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. இது மாதவிடாய் சுழற்சியின் தொடக்க காலத்தில், FSH-எனும் ஹார்மோன் சுரப்பை இயற்கையாக தூண்டுவதன் மூலம், கருமுட்டை விடுப்பு எனும் ஓவம் வெளியீட்டை தூண்டி, இயற்கையாக கருத்தரிப்பு விகிதத்தை மேம்படுத்த உதவும்.

  பெண்களுக்கு கருத்தரிப்பினை விரைவாக்க 'போலிக் அமிலம்' என்ற வைட்டமின் பெரும் பயனளிக்கும் என்கிறது நவீன அறிவியல். ஆதலால் மகப்பேற்றுக்கு திட்டமிடும் பெண்கள் துவக்கம் முதலே அந்த வைட்டமின் சத்துக்களை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் கருவில் வளரும் மகவுக்கு, நரம்பு குழல் குறைபாடுகள் வருவதை தடுக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

  இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்த நம் சித்த மருத்துவ முன்னோடிகள் தாமதமாகும் கருத்தரிப்பில் போலிக் அமிலம் நிறைந்த இயற்கை மூலிகையான தண்ணீர்விட்டான் கிழங்கு எனப்படும் சதாவேரி மூலிகையை பயன்படுத்தி இருப்பது சிறப்பு. சதாவேரி மூலிகை பெண்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.

  நொச்சி எனும் எளிய சித்த மருத்துவ மூலிகை பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கருமுட்டை விடுப்பு மற்றும் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிப்பதில் இதற்கு சிறந்த பங்குண்டு. இந்த தாவரத்தின் பிளாவனாய்டு வேதிமூலக்கூறுகள் கருப்பை சவ்வின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது, மேலும் அதில் உள்ள ஐசோப்ளேவோன்கள்,ஹைபோதலாமிக்-பிட்யூட்டரி-கோனாடல் அச்சில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் புரோலேக்டின் மற்றும் FSH ஹார்மோன்களின் வெளியீட்டைக் குறைத்து, தாமதமாகும் கருத்தரிப்பை துரிதமாக்கும்.

  பேரீச்சம்பழம் எளிமையாக கிடைக்கக்கூடிய, பெண்களுக்கு நல்ல பலன் தரும் பழவகை. இதில் ருடின், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆண்ட்ரோஸ்டிரோன் போன்ற வேதிமூலக்கூறுகள் இருப்பதால் கருமுட்டை வளர்ச்சியை தூண்டுவதாகவும், மற்றும் கருமுட்டை முதிர்ச்சியை அதிகரிப்பதாகவும் எலிகளில் நடத்திய சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்னும் எண்ணற்ற அத்தியாவசிய வைட்டமின்களும், தாது உப்புக்களும் இதில் உள்ளது. சாலையோரம் தள்ளுவண்டியில் எளிமையாய் விற்பதாலோ என்னவோ இதன் மருத்துவ மகிமை பலருக்கு தெரிவதில்லை.

  உடலுக்கு சுத்தி குளிப்பது, உணவுக்கு சுத்தி என்பது உணவில் நெய்யிட்டு உண்பது என்று சித்த மருத்துவம் குடல் சுத்தி,மன சுத்தி என்று ஒவ்வொரு பகுதிக்கும் சுத்தி முறையை வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் கருப்பையை சுத்தி செய்து கருத்தரிப்பினை விரைவாக்க 'மலைவேம்பாதி தைலம்' எனும் சித்த மருந்து உதவும். தாமதமாகும் கருத்தரிப்பில் சிகிச்சைக்கு முன் பெண்கள் இந்த தைலத்தை மாதவிடாய் காலங்களில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.

  பாரம்பரிய மூலிகை மருத்துவத்துடன், பாரம்பரிய உணவு பழக்கவழக்கமும் அவசியம். ஏனெனில் தாமதமாகும் கருத்தரிப்புக்கு துரிதஉணவு பழக்கவழக்கமுறையும் முக்கிய காரணமாகின்றது. கருத்தரிப்பை துரிதப்படுத்த பெண்கள் மாதவிடாயின் முதல் பதினைந்து நாட்கள் கறுப்பு உளுந்து கஞ்சியும், அடுத்த பதினைந்து நாட்கள் வெந்தயம் சேர்ந்த கஞ்சியும் எடுத்துக்கொள்ளலாம். இது கருப்பைக்கு பலத்தையும் கொடுத்து, ஹார்மோன் அச்சினையும் சீராக்க உதவும். எளிதில் கருத்தரிக்க பெண்களுக்கு உதவும்.

  சித்த மருத்துவக் கூற்றுப்படி உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, இவை ஆறையும் கடந்து ஏழாவது நாள் சுரோணிதம் எனும் கருமுட்டையை பெண்களுக்கு உருவாக்குகின்றது. ஆக சத்தான உணவு உண்பது வளமான கருமுட்டையை உருவாக்குவதன் பின்னணி. இதுவே வருங்கால சமுதாயம் ஆரோக்கியமாக அமைத்திட அடித்தளம் இடுவது. எனவே மகளிர் இதனைக் கருத்தில் கொண்டு, நோய்களுக்கு பாதையை அமைத்திடும் துரித உணவுகளை விடுத்து, சத்தான பாரம்பரிய உணவுமுறைகளை உட்கொள்ளத் துவங்குவது அவசியம். பாரம்பரிய உணவுகள் பாட்டி வைத்தியத்தின் அத்தியாயம்.

  உலகிலேயே ஆரோக்கியத்துக்கான சிறந்த உணவுமுறை என்ற பெயரை பெற்றது 'மத்திய தரைக்கடல் உணவுமுறை' எனப்படும் 'மெட் டயட்'. அதில் வாரம் ஒரு முறை மட்டும் இறைச்சி, இனிப்புகள், வாரம் இருமுறை மீன், முட்டை, தயிர்,கடல் சார்ந்த உணவுகள் அடங்கும். தினசரி உணவில் காய்கறிகளும், பழங்களும், பருப்பு வகைகளும், தானிய வகைகளும் அதில் அடங்கும்.

  ஐவிஎப் எனும் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடும் பெண்கள், இந்த மெட் டயட் எடுத்துக்கொள்ளும் போது 40 சதவீதம் பேர் இயல்பாகவே கருத்தரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் புரிய வருவது என்னவெனில் இயல்பான கருத்தரிப்புக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நாம் உண்ணும் உணவில் உள்ளது என்பது தான்.

  இதைத் தான் நம் சித்த மருத்துவம் 'உணவே மருந்து' என்கிறது. அதனைப் பெண்கள் பின்பற்றி வாழ்ந்தாலே கருத்தரிப்பினை விரைவாக்கி, மன உளைச்சல், உடல் அலைச்சல், பண விரையம் இன்றி மகப்பேற்றை எளிதில் அடையலாம்.

  Previous Next

  نموذج الاتصال