No results found

    பெண்களே வீடுதோறும் மின்சிக்கனம் தேவை


    தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.

    மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.

    ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

    வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.

    அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

    பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

    வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.

    Previous Next

    نموذج الاتصال