No results found

  மகளிர் நலனில் சித்த மருத்துவம்- சினைப்பை நீர்க்கட்டியை போக்கும் மூலிகைகள்


  அனீமியா எனும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு பூப்பூ சரிவர நிகழாத பெண்களுக்கு ரத்தத்தை அதிகரிக்கும்படியான பாரம்பரிய உணவுப்பொருட்களோடு, சித்த மருந்துகளாகிய சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை, அத்துடன் அயம் எனும் இரும்புச்சத்து கொண்ட சித்த மருந்துகளை பரிந்துரைக்கலாம். மேலும் ரத்த சோகைக்கு காரணமாகும் குடல்வாழ் கிருமிகளை அகற்ற, அடிக்கடி உணவில் சுண்டைக்காய், பாகல்காய் இவற்றையும் சேர்த்துக்கொள்வது பயன் தரும்.

  வைட்டமின் சி-யும், புற்றுநோயை வராமல் தடுக்கும் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டதும், உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்க செய்யும், அதிக மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் சேர்ந்த நெல்லிக்காய் லேகியம், திரிபலை லேகியம், திரிபலை மாத்திரை போன்ற மருந்துகளும் நல்ல பலனைத்தரும்.

  'மாதுளை மணப்பாகு' எனும் எளிய சித்த மருந்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். மாதுளை என்ற பெயரிலே அதன் மருத்துவத்தன்மை விளங்கிவிடும். மாதுளை, உளை அதாவது மாதர்களின் மனம் மற்றும் உடல் உளைச்சலை, அவை சார்ந்த உபாதைகளை போக்கும் தன்மையுடையதால் அப்பெயர் பெற்றுள்ளது.

  மாதுளைப்பழம் இரும்புசத்து மட்டுமின்றி விட்டமின்-ஏ,சி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது பெண்களுக்கு ரத்த உற்பத்தியை அதிகரிப்பதோடு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும் உடையது. இதில் உள்ள புனிக்காலின், கடிச்சின், எல்லாஜிக் அமிலம், காலிக் அமிலம், ஆன்தோசயனின் ஆகிய பாலிபீனாலிக் இயற்கை நிறமி மூலக்கூறுகள் அத்தகைய மருத்துவ செய்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே மாதவிடாய் தொந்தரவு முதல் மார்பக புற்றுநோய் வரை தடுக்க நினைக்கும் பெண்கள் மருத்துவமனை வாசலை நாடாமலிருக்க, மார்க்கெட் வாசலை நாடி இத்தகைய பழங்களை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்தது.

  பாரம்பரிய மூலிகைகளின் பெயர்க்காரணத்தை ஆராய்ந்து அறிந்தாலே போதும், அதன் மருத்துவ குணம் விளங்கிவிடும். நம் முன்னோர்கள் வருங்கால சந்ததிகளுக்கு பயன்பட வேண்டும் என்ற அக்கறையுடன், பெயர்க்காரணத்தோடு தான் பல்வேறு மூலிகைகளுக்கு பெயரிட்டுள்ளனர்.

  இவ்வாறு அனீமியா எனும் ரத்த சோகை ஒருபுறமிருக்க, மறுபுறம் நவீன வாழ்வியல் மாற்றத்தால் இளம் பெண்களை அதிகம் மருத்துவமனைகளை நாட வைக்கும் உடல் உபாதையாக உள்ளது பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை.

  மாதாந்திர பூப்பு சரிவர நிகழவில்லை என்று மருத்துவர் ஆலோசனைப்படி ஸ்கேன் மையத்தை அணுகும் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும்படியாக கிடைக்கும் அறிக்கை இந்த நீர்க்கட்டி பிரச்சனை தான். அதிகரித்தே கொண்டே செல்லும் உடல் எடை, ஆண்களை போன்று பெண்களுக்கும் முடி முளைத்தல், தலைமுடி மெலிதல், முகப்பரு போன்ற பல குறிகுணங்களின் தொகுப்பாக இது காணப்படும். இதில் ஆண்ட்ரொஜென் எனும் ஆண் ஹார்மோன் அதிகமாவதால் ஆண்களைப் போன்று பெண்களுக்கு முடி முளைத்தலுக்கு இது காரணமாகின்றது.

  அது மட்டுமின்றி மலட்டு தன்மை முதல், சர்க்கரை வியாதி, இருதய நோய்கள் வரை பலப்பல தொற்றா நோய்களுக்கு இந்த நீர்க்கட்டி பிரச்சனை அடித்தளம் இடுகிறது. முக்கியமாக ஆப்பிள் வடிவ உடல் பருமன் என்று கூறப்படும் அதிக எடை உள்ள பிசிஓஎஸ் பெண்கள் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பினை அதிகம் பெற்றுள்ளனர். ஒல்லியாக, உடல் எடை குறைவாக உள்ள சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் ஆபத்து குறைவு தான் .

  உலக அளவில் கிட்டத்தட்ட மங்கைப்பருவ பெண்களில் 4 % முதல் 20 % சதவிகிதம் வரை இந்நோய்க்குறிகளால் அவதியுறுகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். மாரடைப்பும், சர்க்கரை வியாதியும், எண்டோமெட்ரியல் எனும் கருப்பைசவ்வு புற்றுநோயும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு, பின்னாட்களில் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

  இன்னும் சொல்லப்போனால், இந்த சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நவீன வாழ்வியல் மற்றும் உணவு மாற்றங்கள், சத்தான உணவுகளின் பற்றாக்குறை, உடல்பயிற்சின்மை, திருமூலர் நமக்கு அளித்த யோகாசனப் பயிற்சியின்மை இவைகள் பிசிஓஎஸ் நோய்நிலை உண்டாக்கு வதில் முக்கிய காரணிகளாக உள்ளதாக தெரிகின்றது.

  ஆக சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையின் குறிகுணங்களுக்கு ஹார்மோன் கோளாறுகளும், வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இன்சுலின் எனும் சர்க்கரை வியாதிக்கான ஹார்மோன் செயல்படுவதில் ஏற்படும் தடையே முக்கிய காரணமாக உள்ளது. இந்த இன்சுலின் தடை தான் வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகளுக்கு முதன்மை ஆதாரம். நீரிழிவு நோய், ரத்தத்தில் மாறுபட்ட கொழுப்பின் அளவு, அதிக ரத்த அழுத்தம் இவை தான் வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள். எனவே, சினைப்பை நீர்க்கட்டி எனும் நோய்நிலை ஆல மரத்தின் விழுதாக பல்கிப்பெருகி பல்வேறு துணை நோய்களையும் உண்டாக்கி பெண்களை காலம் முழுதும் உடலளவிலும்,மனதளவிலும் பாதிக்க கூடியது.

  சினைப்பை நீர்கட்டியில் ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது இருக்குமே தவிர, அனைவருக்கும் மலட்டு தன்மை ஏற்படும் என்பது இல்லை. சினைமுட்டை கருப்பையை பற்றும் நாள் தாமதமாவது தான், இந்த பிசிஓஎஸ் பிரச்சனையில் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட காரணமாகின்றது. இந்த நிலைமை இல்லாமல் இருக்கும், பலர் இயல்பான கருத்தரிப்புக்கு ஆளாவது குறிப்பிடத்தக்கது.

  சித்த மருத்துவ தத்துவத்தின் படி, சினைப்பை நீர்க்கட்டி நோய்நிலையானது வாதம்,பித்தம்,கபம் இவை மூன்றில் கபக்குற்ற பாதிப்பால் சிறு சிறு நீர்கட்டிகளை சினைப்பையை சுற்றி உண்டாக்குவதுடன், வளர்ச்சிதை மாற்றக்குறிகளையும் உண்டாக்கி, கபத்தை பெருக்கி, உடல் பருமனை உண்டாக்குகிறது. ஆக 'வாதமலாது மேனி கெடாது' என்பது போல, கபத்துடன் சேரும் வாதம் இன்னும் மற்ற குறிகுணங்களை உண்டாக்கி, பூப்பு கோளாற்றை ஏற்படுத்துகிறது.

  சித்த மருத்துவத்தில் ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்க பல்வேறு மருந்துகள் சொல்லப்பட்டுள்ளது. கபத்தின் காரணத்தால் ஏற்படும் நீர்கட்டியை சீராக்க திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம், நிலக்கடம்பு சூரணம் போன்ற சுக்கு,மிளகு,திப்பிலி சேர்ந்த வெப்ப வீரியமான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் பூப்பு கோளாறுகளை சீர் செய்யும். கொள்ளு, சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு சிறந்த உணவு மட்டுமல்ல, மருந்தும் தான். சர்க்கரை சத்து குறைவான, அதிக புரத சத்தினை கொண்ட உணவாக மட்டும் கொள்ளுவை பார்க்காமல், மருத்துவ குணமுள்ள பொருளாக கருதி பெண்கள் பயன்படுத்த துவங்கினால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

  பிசிஓஎஸ்-க்கு காரணமாகும் இன்சுலின் தடையை நீக்கி வளர்ச்சிதை மாற்ற நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறுகுறிஞ்சான் எனும் மூலிகை பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தின் நீரிழிவு நோய் வைத்தியத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது சினைப்பை நீர்கட்டிக்கு நல்ல பலன் தரும். இதனை 'மறுவுதிரம் இல்லாத மாதர்க்கு' பயனளிக்கும் என்று அகத்தியர் குணவாகடம் கூறுவது மிக ஆச்சர்யமான ஒன்று.

  சோற்றுக்கற்றாழை எனும் குமரி ஒழுங்கற்ற மாதவிடாய் சீராக்கும் சிறந்த சித்த மருத்துவ மூலிகை. சோற்றுக்கற்றாழையின் மடலை நீக்கி உள்ளே உள்ள ஜெல்லி போன்ற பொருளினை 7 முறை கழுவி பயன்படுத்த அதன் கசப்பு தன்மை குறையும். அத்துடன் பூண்டு, பனைவெல்லம் சேர்த்து பயன்படுத்த மாதவிடாய் தொந்தரவுகளை போக்கும். பூண்டு குழம்பினை அடிக்கடி சேர்த்தாலும் நல்லது. வெப்ப வீரியமுள்ள மூலிகை கடைசரக்குகளை சேர்த்துக்கொள்ள ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் என்கிறது சித்த மருத்துவம்.

  மற்றுமொரு மூலிகையான கழற்சிக்காயில் உள்ள டெர்பீன் வேதிப்பொருள் சினைப்பை நீர்கட்டி நிலைக்கு காரணமான ஹார்மோன்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும், நீர்கட்டியை கரைக்க கூடியதாவும் உள்ளது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கழற்சிக்காயில் விதைகளில் இதுவரை 50 -க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பான்டுசெலின், சீசல்பினின், ஃபிளாவேனாய்டுகள், ஸ்டீரால்கள் போன்ற முக்கிய மூலக்கூறுகளால் இத்தகைய மருத்துவ குணங்களை உடையதாக உள்ளது.

  சினைப்பை நீர்கட்டி நீங்கவும், வராமல் தடுக்கவும் வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளான வாரம் இருமுறை எண்ணெய்குளியல், தியானப்பயிற்சி, உடல் பயிற்சி இவற்றை மேற்கொள்வது அவசியம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் சுக்கு தைலம் எனும் வெப்ப வீரிய சித்த மருந்தினை கொண்டு எண்ணெய் குளியல் எடுத்தல் நற்பலனைத் தரும்.

  உணவு பழக்கவழக்க முறைகளில் கூட மாற்றங்களை கொண்டு வருதல் அவசியம். அறுசுவை கலந்த உணவை உண்பது, சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்ப்பது, அதிக சர்க்கரை சத்துள்ள இனிப்பு உணவுகளையும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளையும், மாமிச உணவுகளையும் தவிர்ப்பது, அதிக நார்ச்சத்துள்ள பழங்களையும், பிஞ்சு காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது, உடல் எடைக்கு ஏற்ப நீரின் அளவை தவறாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை கடைபிடிக்கவேண்டியது அவசியம்.

  இஞ்சி, பூண்டு, சீரகம், கருஞ்சீரகம், கல்யாண முருக்கு, போன்ற பல எளிய சித்த மருத்துவ மூலிகைகள் நீர்கட்டியைக் கரைத்து, ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்க கூடியதாக உள்ளது. நவீன விஞ்ஞான வாழ்க்கை முறைகளான சுவிட்ச் தட்டினால் ஓடும் மிக்ஸியும், கிரைண்டரும் பெண்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்கியது. இருப்பினும் பெண்கள் ஆரோக்கியத்தை நோக்கி செல்லும் பாதையை கடினமாக்கியுள்ளது என்பது தான் உண்மை.

  Previous Next

  نموذج الاتصال